Serial Actress Sharanya Turadi Skincare Tips Tamil News : செய்தி வாசிப்பாளராக திரைப்பயணத்தைத் தொடங்கி, பிறகு சில சீரியல்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை ஈர்த்தவர் சரண்யா துராடி. தனக்கென தனிப்பட்ட வகையில் யூடியூப் சேனலை தொடங்கி மக்களைச் சந்தித்து வருபவர், சமீபத்தில் சரும பாதுகாப்பு குறிப்புகளைப் பகிர்ந்துகொண்டார்.

“நம் உடலில் மிகப்பெரிய உறுப்பு நம்முடைய தோல்தான். அதனை எந்த அளவிற்கு ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்பதை சமீபத்தில்தான் புரிந்துகொண்டேன். அதனால், அதற்கென்று தனிப்பட்ட வகையில் நேரத்தை செலவழிக்கிறேன். யார் என்ன பொருளைப் பரிந்துரைத்தாலும் நான் எதையும் நம்ப மாட்டேன். என்னுடைய சருமத்திற்கு ஏற்ற பராமரிப்பு பொருள் எது என்பதை நான்தான் தேர்ந்தெடுப்பேன். அந்தப் பொருளில் இருக்கும் எல்லா தனிப்பட்ட பொருள்களையும் பார்த்துத்தான் தேர்ந்தெடுப்பேன்.

அதிகப்படியான வெயில் சூத்திலிருந்து மட்டுமல்ல, பொதுவாகவே நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு நிறையத் தண்ணீர் குடிப்பது அவசியம். பாத்ரூமை க்ளீன் பண்ண எந்த அளவிற்குத் தண்ணீர் தேவைப்படுகிறதோ அதேபோல தான் நம் உடலை சுத்தம் செய்வதற்கும் தண்ணீர் அவசியம். உடலில் உட்புறத்திற்கும் வெளிப்புறத்திற்கும் தண்ணீர் மிகவும் முக்கியம். சாதாரணமாகக் குடிப்பதைவிட அதனை செம்பு பாத்திரத்தில் சேகரித்து வைத்துக் குடிக்கலாம் அல்லது வெட்டிவேர், சீரகம் போன்றவற்றை சேர்த்துக் குடிக்கலாம். அதேபோல தர்பூசணி, எலுமிச்சை புதினா கலந்த கூலர் போன்ற தண்ணீர் நிறைந்த பழங்கள் அப்படியே அல்லது சர்க்கரை சேர்க்காமல் ஜூஸாக அரைத்துக் குடிக்கலாம்.

மேலும், சருமத்தை சுத்தம் செய்ய வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை ஸ்க்ரப் செய்யலாம். இந்தப் பொருளைத் தேர்வு செய்தாலும் அதில் சல்ஃபேட், பாராபென் இல்லாத பொருள்களாகப் பார்த்துத் தேர்வு செய்யுங்கள். நிறையபேர் எண்ணெய்ப்பசையை நீக்குவதற்கு அரும்பாடு படுவார்கள். தோல் சுருங்காமல் இருக்க சருமத்திற்கு எண்ணெய்ப்பசை அவசியம். அதனால் பளீச்சென்று இருக்கிறது என்று முற்றிலும் எண்ணெய்ப்பசையை அகற்றாதீர்கள்.

மார்க்கெட்டில் ஏதாவது புது பொருள்கள் வந்தால் உடனே அதைக் கண்மூடி வாங்கி உபயோகிப்பது பல சரும சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அப்படி செய்யாதீர்கள். முடிந்த அளவிற்கு உடலை எப்போதும் மாய்ஸ்ச்சரைஸாக வைத்துக்கொள்ளுங்கள். சரும பாதுகாப்பிற்காக எது செய்தாலும் அதனைத் தொடர்ச்சியாக செய்யவேண்டும். அப்போதுதான் அதற்கான பலன் கிடைக்கும்”.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil