தனது எதார்த்த நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து என்றும் அவர்களின் ஃபேவரேட் நாயகியாக வலம் வருகிறார் ஆயிஷா.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஆயிஷா விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தாள் சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். விஜய் டிவியின் ‘ரெடி ஸ்டெடி போ’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் அவருக்கு இந்த சீரியல் வாய்ப்பு கிடைத்தது. பிறகு சீரியல் டைரக்டருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிலிருந்து விலகியவர் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காமல் சில மாதங்கள் பெரிய மன உளைச்சலில் இருந்துள்ளார். சிறிது காலம் எந்த விதமான வாய்ப்புகள் இன்றி இருந்த அவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பான `மாயா’ சீரியலில் இரு வேடங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதில் தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.அந்த தொடர் முடிவடையும் போது ஆயிஷாவுக்கு ஜீ தமிழ்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சத்யா தொடரில் டாம்பாயாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எந்த கேரக்டராக இருந்தாலும் துணிச்சலாக செய்யும் ஆயிஷா அதில் டாம்பாய் ஆக நடித்திருந்தது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
வழக்கமான சீரியல் தொடர்களில் வரும் கதாநாயகிகளை காட்டிலும் சற்றே வேறுபட்டு ஆண்கள் அணியும் உடையில் படு லோக்கல் பெண்ணாக நடித்திருந்தார் ஆயிஷா. அவரது நடிப்பு அனைத்து வயதினரும் ரசிக்கும் படி இருந்தது. அவருடைய ஸ்டைலான நடிப்பு ரசிகர்களை அவர் பக்கம் திருப்பியது.. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களிலேயே அதிக இல்லத்தரசிகளை கவர்ந்தது என்றால் அது சத்யா சீரியல்தான் என்கிற அளவுக்கு அவரது நடிப்புத்திறமை இருந்தது. சமீபத்தில் தனது சிறப்பான நடிப்பிற்காக ஜீ தமிழ் விருதும் வாங்கியுள்ளார்.
ஆரம்பத்தில் மாடலாக இருந்த சத்யா சிறு வயதில் சீரியல்களை அதிகம் விரும்பி பார்ப்பவர்.மீடியாவில் வருவேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை என்றும் பல கஷ்டங்களை கடந்து தான் இந்த இடத்திற்கு வந்துள்ளதாக ஒரு பேட்டியில் ஆயிஷா தெரிவித்திருந்தார். சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் நடித்துள்ளார் ஆயிஷா. சந்தானம் நடித்த ‘‘தில்லுக்கு துட்டு 2’’ படத்தில் துணை கேரக்டரில் நடித்திருந்தார்.
சத்யா தொடரில் ஆயிஷாவுடன் நடிக்கும் விஷ்ணுவிற்கும் அவருக்கும் காதல், இயக்குநருடன் பிரச்சனை என பல கிசுகிசுக்கள் இவரை பற்றியும் அவ்வபோது உலா வரும். அதை எதையும் பொருட்படுத்தாது தனது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் ஆயிஷா.
பொதுவாக சீரியல் நடிகைகள் சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருப்பார்கள் .அந்த வகையில் ஆயிஷாவும் ஒரு வைரல் பெண்ணாக உள்ளார். தனது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வபோது அவர் பதிவிடும் டப்ஸ்மேஷ்கள் மற்றும் போட்டோக்கள் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.சீரியலில் அவரை டாம்பாயாக பார்த்து போரடித்து போன ரசிகர்கள் அவரது இன்ஸ்டாகிராம் புகைப்படத்தை கண்டு சிலாகித்து போயுள்ளனர். சின்னத்திரையின் அழகு தேவதையாக வலம் வரும் ஆயிஷா தற்போது பட வாய்ப்பை எதிர்நோக்கி படு பிசியாக சமூக வலைதளங்களில் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil