/indian-express-tamil/media/media_files/2025/04/18/c5oY6yQRQ5lUmh2xumrv.jpg)
இங்கிலாந்து மக்கள் தொகையில் 10 சதவீதத்திற்கும் மேற்பட்டோர், நாள்பட்ட சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது மட்டுமின்றி, 600,000 க்கும் மேற்பட்ட மக்கள் சில வகை கடுமையான சிறுநீரக பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: From popping painkillers to shortage of sleep, seven common habits that could be harming your kidneys
இரத்தத்தில் உள்ள கழிவுகள், அதிகப்படியான திரவங்கள், சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகளை வடிகட்டுவதன் மூலம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிப்பதில் சிறுநீரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை இரத்த அழுத்தம், இரத்த சிவப்பணு உற்பத்தி மற்றும் உடலில் கால்சியம் சமநிலையை சீராக்க உதவுகின்றன. சிறுநீரகங்கள் சேதமடையும் போது கழிவுகளை வடிகட்டுவது மற்றும் சமநிலையை பராமரிப்பது பாதிக்கப்படுகிறது.
அந்த வகையில், சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய சில விஷயங்கள் குறித்து இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
வலி நிவாரணிகளைப் பயன்படுத்துதல்
இப்யூபுரூஃபன் மற்றும் ஆஸ்பிரின் போன்ற பொதுவான எதிர்ப்பு அழற்சி வலி நிவாரணிகள், சிறுநீரக குழாய்களை சேதப்படுத்தும். சிறுநீரகங்களில் உள்ள சிறிய குழாய்கள் வடிகட்டப்பட்ட ஊட்டச்சத்துக்கள் மற்றும் திரவங்களை மீண்டும் இரத்தத்திற்கு திருப்பி விடுகின்றன. சிறுநீரகக் குழாய்களில் மீதமுள்ள திரவம் மற்றும் கழிவுகள் சிறுநீராக மாறும். நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு இருப்பவர்கள் இது போன்ற மருந்துகள் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக மருத்துவர்களின் பரிந்துரையின்றி இவற்றை பயன்படுத்தக் கூடாது.
தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது
கழிவுகளை வெளியேற்ற சிறுநீரகத்திற்கு தண்ணீர் தேவைப்படுகிறது. சரியாக தண்ணீர் குடிக்காதவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படக் கூடும். குறிப்பாக, கோடை காலத்தில் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். இதனால் சிறிநீரகத்தில் கல் மற்றும் தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது. சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
அதிகமாக மது அருந்துதல்
சிறுநீரகம், உடலில் உள்ள நீரை ஒழுங்குபடுத்துகிறது. மதுபானம், உடலில் உள்ள நீர்ச்சத்தை குறைத்து விடுகிறது. இதனால், சிறுநீரகத்தின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படுகிறது. அதிகமாக மதுபானம் அருந்துதல், இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இதுவும் சிறுநீரகங்களை பாதிக்கிறது. கல்லீரல் நோய்க்கு மதுபானம் வழிவகுக்கும் என்று பெரும்பாலான மக்கள் அறிவார்கள். ஆனால், இது சிறுநீரகங்களுக்கும் தீங்கு விளைவிக்கும்.
புகைபிடித்தல்
புகைபிடித்தல் புற்றுநோய் மற்றும் இதய நோய்களுக்கு பங்களிக்கும் என்பதை பெரும்பாலான மக்கள் அறிவார்கள். ஆனால் புகைபிடித்தல் பல வழிமுறைகள் மூலம் சிறுநீரகங்களுக்கு நேரடியாக தீங்கு விளைவிக்கும். சிகரெட் புகையில் சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிக்கும் காட்மியம் போன்ற நச்சு இரசாயனங்கள் உள்ளன. புகைபிடித்தல், இரத்த நாளங்களை சுருக்கி, சிறுநீரக பாதிப்புக்கு வழிவகுக்கும்.
உடல் எடை அதிகரிப்பு
உடல் எடை அதிகரிப்பு பெரும்பாலும் இருதய நோய் மற்றும் சர்க்கரை நோய் உருவாக காரணமாக அமையும். இது சிறுநீரகத்தையும் பாதிக்கும். கொழுப்பு திசு இரசாயனங்களை சீர்குலைப்பதன் மூலம் உடல் பருமன் சிறுநீரகங்களுக்கு நேரடியாக தீங்கு விளைவிக்கும். எனவே, சீரான உணவு பழக்கம் சிறுநீரக பாதிப்பு அபாயத்தை குறைக்கிறது.
ஆரோக்கியமற்ற உணவுகளை எடுத்துக் கொள்ளுதல்
அதிகப்படியான சர்க்கரை, உப்பு மற்றும் செயற்கை நிறங்கள் சேர்க்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள், சிறுநீரகத்தை அதிகளவு பாதிக்கிறது. இது மட்டுமின்றி கார்போனேட்டட் குளிர்பானங்கள் ஆகியவை உடல் பருமன், இருதய நோய் மற்றும் டைப் 2 சர்க்கரை நோய்க்கு காரணமாக அமையும்.
தூக்கமின்மை
தூக்கமின்மைக்கும், சிறுநீரக பாதிப்பிற்கும் தொடர்பு இருப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. மோசமான தூக்கம் நாள்பட்ட சிறுநீரக நோய் அபாயத்தை அதிகரிக்கிறது என்று ஒரு ஆய்வு காட்டுகிறது. தினசரி ஆறு மணி நேரத்திற்கும் குறைவாக அல்லது பத்து மணி நேரத்திற்கும் மேலாக தூங்குவது உங்கள் சிறுநீரகத்தை பாதிக்கலாம். பெரும்பாலான மக்களுக்கு உகந்த தூக்கம் ஒரு இரவில் ஏழு முதல் ஒன்பது மணி நேரம் வரை இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.