17 பெரிய மாநிலங்களில் பாலின விகிதம் குறைவு!

நாட்டில் உள்ள 21 பெரிய மாநிலங்களில் 17ல் பாலின பிறப்பு விகிதம் 10 புள்ளிகளுக்கும் கீழ் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது

இந்தியாவில் ஆண் மற்றும் பெண் குழந்தைகள் பிறப்பை பற்றிய பாலின விகித ஆய்வை நிதி ஆயோக் மேற்கொண்டது. இந்த ஆய்வில் நாட்டில் உள்ள 21 பெரிய மாநிலங்களில் 17ல் பாலின பிறப்பு விகிதம் 10 புள்ளிகளுக்கும் கீழ் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது.

இதில் குஜராத்தில் மிக அதிக அளவாக, 1000 ஆண்களுக்கு 907 பெண்கள் என்று இருந்த எண்ணிக்கையானது, 854 ஆக குறைந்துள்ளது. இது 2012-14ல் (அடிப்படை ஆண்டு) இருந்து 2013-15 (ஆய்வுக்கான குறிப்பிட்ட வருடம்) வரையிலான கணக்கின்படி 53 புள்ளிகள் குறைவு ஆகும்.

இதனைத் தொடர்ந்து, 35 புள்ளிகள் குறைந்து ஹரியானா 2வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் (32 புள்ளிகள்), உத்தரகாண்ட் (27 புள்ளிகள்), மகாராஷ்டிரா (18 புள்ளிகள்), இமாசல பிரதேசம் (14 புள்ளிகள்), சட்டீஸ்கார் (12 புள்ளிகள்) மற்றும் கர்நாடகா (11 புள்ளிகள்) தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இந்த அறிக்கையின்படி, பாலின விகிதத்தில் பஞ்சாப் 19 புள்ளிகள் முன்னேற்றம் அடைந்துள்ளது. இதனை தொடர்ந்து உத்தர பிரதேசம் (10 புள்ளிகள்) மற்றும் பீகார் (9 புள்ளிகள்) உள்ளன.

இதன்மூலம், பெண் குழந்தையின் மதிப்பை ஊக்கப்படுத்தும் முறையான நடவடிக்கைகளை மாநிலங்கள் எடுத்து திறம்பட அமல்படுத்த வேண்டிய தெளிவான அவசியம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து, பாலினம் அறிந்து கருக்கலைப்பு செய்வதனால் பெண் குழந்தை பிறப்பு எண்ணிக்கை குறைவது பிரதிபலிக்கப்படும் வகையில், பிறப்பு பாலின விகிதம் ஒரு முக்கிய அடையாளம் காட்டியாக உள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

×Close
×Close