சினிமா… தனி மனிதன் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் இருந்தும் பிரிக்க முடியாத ஒன்று. மக்கள் மனதை ஆட்சி செய்து கொண்டிருக்கும் சினிமா, தமிழகத்தையும் ஆட்சி செய்த வரலாற்றை நாம் படித்துக் கொண்டிருக்கிறோம்.
சினிமா (திரைப்படம்) எனும் பொழுதுபோக்கு அம்சத்தின் இணைப்புப் பாலமாக இருக்கும் சின்னத்திரையும், சற்றும் சளைக்காத சக்தி வாய்ந்த மீடியம் என்றால் மிகையல்ல…
டிவி மூலம் இன்று திரைப்படங்களில் சாதித்தவர்கள், சாதித்துக் கொண்டிருப்பவர்கள் எண்ணற்றவர்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாருக் கானும் இதே தொலைக்காட்சி பெட்டிக்குள் இருந்து பெரிய திரைக்கு வந்தவர் தான் என்பது நவீன தலைமுறையினர் பலரும் அறியாத ஒன்று.
1988ம் ஆண்டு ‘தில் தரியா’ எனும் நாடகத்தில் தான் ஷாருக் கான் முதன் முதலாக நடித்தார்.
ஆனால், தயாரிப்புப் பிரச்சனை காரணமாக, 1989ல் ஷாருக் நடித்த ‘ஃபவுஜி’ எனும் நாடகம் அந்த பெருமையை தட்டிச் சென்றது.
அதன் பிறகு சர்க்கஸ், இடியட், உமீத், வாக்லே கி துனியா போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் நடித்த ஷாருக், ஆங்கில தொலைக்காட்சி தொடரான Which Annie Gives It Those Ones என்ற நாடகத்திலும் நடித்திருக்கிறார். தவிர, டிவி ஷோக்களில் ஆங்கராகவும் ஷாருக் பணியாற்றி இருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
அப்போதெல்லாம், நாம் பாலிவுட்டையே ஆளப் போகிற ராஜாவாகப் போகிறோம் என்பதே ஷாருக்கிற்கு தெரியாது. ஏன், சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணமே அப்போது ஷாருக் கானுக்கு கிடையாதாம்.
ஆனால், வாழ்க்கையை நகர்த்த வேண்டுமே… தலைநகர் டெல்லியில் இருந்து மும்பைக்கு இடம் மாறும் ஷாருக், அதன் பிறகு சினிமாவில் நடிக்கத் தொடங்கி, இன்று இந்திய சினிமாவின் ஐகானாக உருமாறியிருப்பதை வரலாறு பேசும்.
புள்ளிங்கோ, புளியங்கோ என்று வாய்க்கு வந்த கன்றாவிகளை இன்று உளறிக் கொண்டிருக்கும் இளைய சமுதாயம், சினிமாவில் தனது கதாநாயகனுக்கு பாலாபிஷேகம் செய்கிறார்கள், கட் அவுட் வைக்கிறார்கள், ஆராதிக்கிறார்கள். ஆனால், தங்கள் நாயகன் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்தார் என்பதை சிந்தித்துப் பார்ப்பதில்லை.
ரஜினி, கமல, அஜித், விஜய் தொடங்கி இன்றைய சிவகார்த்திகேயன் வரை, தங்கள் வாழ்வில் எவ்வளவு போராட்டங்களை, அவமானங்களை சந்தித்து இந்த இடத்திற்கு வந்துள்ளார்கள் என்பதை, தியேட்டரில் கொட்டிக் கொடுத்து படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் கொஞ்சம் உணர்ந்தாலே, அவர்களின் வாழ்க்கை எங்கேயோ போய்விடும்.
கிடைத்த வேலையை செய்து, வெற்றி என்ற ஒற்றை குறிக்கோளுடன் செயல்பட்டு, வாழ்க்கையில் உச்ச நிலையை அடைந்திருக்கும் ஷாருக், வெறும் திரையில் பிரமிக்கும் காட்சிப் பொருள் மட்டுமல்ல… நிஜ வாழ்க்கையில் நமக்கு உத்வேகம் அளிக்கும் கதைக்கும் சொந்தக்காரனும் கூட!.