இங்கிலாந்தின் மெட்ரோ பத்திரிகை ஆவணப்பட இயக்குனர் ஒருவர் ட்ரோன் வீடியோ மூலம் எடுத்த தும்பிக்கை துண்டிக்கப்பட்ட யானையின் போட்டோ உலகையே உலுக்கியுள்ளது. தந்தத்திற்காக யானைகள் வேட்டையாடப்படுவதை தடுக்க உலக நாடுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன விலங்குகள் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஜஸ்டின் சுள்ளிவான் என்ற ஆவணப்பட இயக்குனர் ஆப்பிரிக்காவில் உள்ள போட்ஸ்வானாவில் உள்ள காட்டில் தனது ட்ரோன் கேமிராவை பறக்க விட்டு படமாக்கிக்கொண்டிருந்தார். அப்போது, அவருடைய ட்ரோன் கேமிராவில் பதிவான ஒரு போட்டோ உலகின் மனசாட்சியை உலுக்கி இருக்கிறது. அந்த புகைப்படத்தை இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் மெட்ரோ பத்திரிகை வெளியிட்டு அதிர்வலையை உருவாக்கியிருகிறது. அது என்ன போட்டோ என்றால், போட்ஸ்வானா காட்டில் யானையின் தந்தத்திற்காக சிலர் யானையைக் கொன்று அதன் தும்பிக்கையை வெட்டி தந்தங்களை எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர். அந்த யானையின் உடல் தும்பிக்கை துண்டிக்கப்பட்ட நிலையில், தும்பிக்கை தனியாக, யானையின் உடல் தனியாக இருக்கிறது. இந்த காட்சி உயர கோணத்தில் இருந்து போட்டோவாக பார்க்கும்போது உலகின் ஒட்டுமொத்த மனிதகுல மனசாட்சியை உலுக்குபவையாக இருக்கிறது.
இந்த போட்டோவை பார்த்த பலரும் தங்களின் வருத்தத்தையும் கோபத்தையும் ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்துவருகின்றனர்.
வனத்தில் தந்தத்திற்காக தும்பிக்கை துண்டிக்கப்பட்ட யானையின் போட்டோவை எடுத்த ஆவணப்பட இயக்குனர் ஜஸ்டின் சுள்ளிவான் அந்த போட்டோவுக்கு ‘டிஸ்கணக்ஷன்’ என்று தலைப்பு கொடுத்துள்ளார்.
இது குறித்து ஜஸ்டின் சுள்ளிவான் கூறுகையில், “அந்த இடத்தில் ஒரு யானை கொல்லப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அதை பதிவு செய்வதற்கு அங்கே சென்றேன். அங்கே ட்ரோன் கேமிராவை பறக்கவிட்டபோது இந்த போட்டோ பதிவானது. இந்த போட்டோவுக்கு ‘டிஸ்கணக்ஷன்’ என்று தலைப்பிட்டிருக்கிறேன். இந்த காட்சியை உயரத்தில் இருந்து பார்த்தால்தான் அதனுடைய உண்மையான வலியை உணர முடியும். டிஸ்கணக்ஷன் (துண்டிப்பு) என்றால் துண்டிக்கப்பட்டது யானையின் தும்பிக்கை மட்டுமல்ல. துண்டிக்கப்பட்டிருப்பது மனித இனத்தின் சூழலும்தான்” என்று உருக்கமாக கூறுகிறார்.
உலக அளவில் பெரிய கவனத்தைப் பெற்றுள்ள இந்த போட்டோ அந்ரேய் ஸ்டெனின் இண்டர்நேஷ்னல் பிரஸ் போட்டோ போட்டியில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. போட்டி முடிவுகள் செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட உள்ளது.
தந்தத்திற்காக இப்படி கொடூரமாக ஒரு யானை வேட்டையாடப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில், வைர சுரங்கத்துக்கு அடுத்து அதிக வருமானம் கிடைப்பது சுற்றுலாத்துறையில்தான். அந்த நாட்டில் உள்ள வன உயிரினங்களைக் கான பல நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இந்த நிலையில்தான், அந்த நாட்டில் வன விலங்குகள் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் முறையிட்டதன் பேரில் போட்ஸ்வானா அதிபர் மோக்வீட்சி மசிசி ஐந்து ஆண்டுகளாக இருந்த யானை வேட்டை தடையை கடந்த மாதம்தான் நீக்கினார்.
இதனைத் தொடர்ந்துதான் இந்த யானை வேட்டையும் அங்கே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. யானை வேட்டைக்காரர்கள் யானையைக் கொன்றபின் ரம்பத்தால் அதன் தும்பிக்கையை அறுத்து துண்டித்தபின் தந்தங்களை எடுத்துக்கொண்டு யானையின் உடலை வனத்தின் நடுவில் அப்படியே விட்டுச் செல்கின்றனர்.
இது தொடர்பாக ஒரு குழு நடத்திய ஆய்வில், வடக்கு போட்ஸ்வானாவில் 2014 ஆம் ஆண்டில் இருந்து 2018 ஆம் ஆண்டு வரை தந்தத்திற்காக யானைகள் வேட்டையாடப்படுவது 593 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர். மேலும், 2017 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை 400 யானைகள் கொல்லப்பட்டிருப்பதாக கூறுகின்றனர்.
போட்ஸ்வானாவில் 2017 ஆம் ஆண்டிலிருந்து ஓவ்வொரு ஆண்டும் 100 யானைகள் கொல்லப்பட்டுகின்றன என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது. இதனால், உலக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வன உயிரியல் ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
ஜஸ்டின் சுள்ளிவானின் இந்த புகைப்படம் தந்தத்திற்காக யானைகள் வேட்டையாடப்படும் கொடூரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரி உலக மக்களின் மனசாட்சியை உலுக்கியுள்ளது.
இந்த பூவுலகு மனிதர்களுக்கானது மட்டுமல்ல இந்த பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கானதும்தான் என்பதால் மனிதர்கள் வன விலங்குகளை வணிகத்துக்காக வேட்டையாடுவதை நிறுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் உலக நாடுகள் தங்கள் கவனத்தை திசை திருப்ப வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.