பலருக்கு, சாப்பிட்ட பிறகு ஒரு கப் சூடான டீ குடிப்பது ஒரு பழக்கம் மட்டுமல்ல; அது ஒரு சடங்கு. கருப்புத் தேநீர், பால் மற்றும் மசாலாப் பொருட்கள் சேர்த்துத் தயாரிக்கப்படும் அந்த இதமான பானம், மதிய உணவு அல்லது இரவு உணவை முடிப்பதற்கான ஒரு சரியான வழியாகும். ஆனால், இந்த பழமையான வழக்கம் நன்மையை விட தீமையை அதிகமா தருகிறதா?
ஆங்கிலத்தில் படிக்க:
குறிப்பாக சத்துக்கள் உறிஞ்சப்படுவது தொடர்பில், சாப்பிட்ட உடனேயே டீ குடிப்பதற்கு எதிராக சில சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தேநீரில் உள்ள சில சேர்மங்கள் செரிமானத்தில் தலையிடும் அல்லது முக்கிய தாதுக்களின் உறிஞ்சுதலைத் தடுக்கும் என்பது குறித்து பல கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன.
அப்படியானால், சாப்பிட்ட பிறகு உடனடியாக டீ குடிக்கும் உங்கள் வழக்கத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டுமா?
டோன் 30 பிளேட்ஸ் (Tone 30 Pilates)-ன் மூத்த ஊட்டச்சத்து நிபுணரான அஷ்லேஷா ஜோஷி, indianexpress.com-க்கு கூறுகையில், “ஆம், சாப்பிட்ட பிறகு உடனடியாக டீ குடிப்பது சில ஊட்டச்சத்துக்கள், குறிப்பாக இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதில் தலையிடக்கூடும் என்பது உண்மைதான். தேநீரில் டானின்கள் (tannins) மற்றும் பாலிஃபீனால்கள் (polyphenols) எனப்படும் சேர்மங்கள் உள்ளன. இவை தாவர அடிப்படையிலான உணவுகளில் காணப்படும் நான்-ஹீம் (non-heme) இரும்புச்சத்துடன் பிணைப்பை ஏற்படுத்திவிடும். இந்த பிணைப்பு ஏற்படும்போது, உணவில் இருந்து உங்கள் உடல் உறிஞ்சக்கூடிய இரும்புச்சத்தின் அளவு குறைகிறது” என்று கூறினார்.
இது இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள், கர்ப்பிணிகள், வளரிளம் பருவத்தினர் அல்லது சைவ உணவு உண்பவர்கள் போன்ற இரும்புச்சத்து குறைபாட்டிற்கான அதிக ஆபத்தில் இருப்பவர்களுக்கு மிகவும் பொருந்தும். சரியான இரும்புச்சத்து நிறைந்த அல்லது இரும்புச்சத்தை அதிகரிக்கும் உணவுப் பொருட்களை சாப்பிடாமல், வழக்கமாக உணவுக்குப் பிறகு உடனடியாக டீ குடிக்கும் பழக்கம் காலப்போக்கில் இரும்புச்சத்து இருப்பு குறைபாட்டிற்கு வழிவகுக்கும்.
மற்ற தேநீருடன் ஒப்பிடும்போது, செரிமானம் அல்லது சத்து உறிஞ்சுதலை அதிகம் பாதிக்கும் சில குறிப்பிட்ட தேநீர் வகைகள் உள்ளதா?
வெவ்வேறு வகையான தேநீரில் வெவ்வேறு அளவிலான டானின்கள் மற்றும் பிற உயிர்வேதியியல் சேர்மங்கள் (bioactive compounds) இருப்பதால், அவற்றின் விளைவுகள் வேறுபடலாம். கருப்புத் தேநீர் (black tea) மற்றும் பச்சைத் தேநீர் (green tea) ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க அளவு டானின்கள் இருப்பதால், அவை இரும்புச்சத்து உறிஞ்சுதலைக் குறைக்கக்கூடும் என்று ஜோஷி குறிப்பிடுகிறார். மசாலா டீ-யில் பெரும்பாலும் கருப்புத் தேநீர்தான் அடிப்படையாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனுடன் இலவங்கப்பட்டை, இஞ்சி மற்றும் கிராம்பு போன்ற மசாலாப் பொருட்கள் சேர்க்கப்பட்டிருந்தாலும், இரும்புச்சத்து உறிஞ்சுதலை இது பாதிக்கக்கூடும். ஆனால், இதில் சேர்க்கப்படும் மசாலாப் பொருட்கள், செரிமானத்திற்கு உதவும் நன்மைகளை வழங்குவதன் மூலம் இந்த விளைவை ஓரளவு ஈடுசெய்யக்கூடும்.
“கெமோமில் (chamomile) அல்லது மிளகுக்கீரை (peppermint) போன்ற மூலிகை தேநீரில் (herbal teas) பொதுவாக டானின்கள் குறைவாக இருப்பதால், அவை ஊட்டச்சத்து உறிஞ்சுதலில் தலையிடுவதற்கான வாய்ப்புகள் குறைவு. எனினும், செரிமானத்தின் மீதான அவற்றின் தாக்கம், தனிநபரின் சகிப்புத்தன்மை மற்றும் பயன்படுத்தப்படும் மூலிகையைப் பொறுத்து மாறுபடும்” என்று ஜோஷி கூறுகிறார்.
உணவுக்குப் பிறகு எவ்வளவு நேரம் கழித்து டீ குடிக்க வேண்டும், மேலும், இது எந்தெந்த குறிப்பிட்ட உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு மிகவும் முக்கியமானது?
சிறந்த பலன்களைப் பெற, “உணவு உண்ட பிறகு குறைந்தது 30 முதல் 60 நிமிடங்கள் கழித்து டீ அருந்துவது நல்லது” என்று ஜோஷி கூறுகிறார். இந்த கால அவகாசம், தேநீரில் உள்ள டானின்கள் மற்றும் பிற சேர்மங்கள் தலையிடுவதற்கு முன், சத்துக்களை உடல் உறிஞ்சுவதற்கு உதவுகிறது.
“ரத்தசோகை, குறைந்த இரும்புச்சத்து இருப்பு உள்ளவர்கள் அல்லது நோய் அல்லது அறுவை சிகிச்சையிலிருந்து குணமடைந்து வருபவர்களுக்கு இந்த கால அவகாசம் மிகவும் முக்கியமானது. அமில ரிஃப்ளக்ஸ் (acid reflux) போன்ற இரைப்பை குடல் கோளாறுகள் உள்ளவர்களும் சாப்பிட்ட உடனேயே டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது அறிகுறிகளை அதிகப்படுத்தக்கூடும்.
சாப்பிடும்போது டீ குடிக்க வேண்டும் என ஒருவர் விரும்புபவராக இருந்தால், சத்து உறிஞ்சுதலைத் தடுக்கும் வாய்ப்புகள் குறைவான மூலிகை தேநீருக்கு மாறலாம். அல்லது, உணவில் வைட்டமின் சி நிறைந்த பொருட்களைச் சேர்த்து சாப்பிடலாம். இது இரும்புச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்தி, டானின்களின் சில விளைவுகளை ஈடுசெய்ய உதவும்” என்று ஜோஷி முடிக்கிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் உள்ள தகவல்கள் மற்றும்/அல்லது நாங்கள் பேசிய நிபுணர்களின் கருத்துக்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. எந்தவொரு வழக்கத்தையும் தொடங்குவதற்கு முன், எப்போதும் உங்கள் சுகாதார பயிற்சியாளரை அணுகவும்.