பதப்படுத்தப்பட்ட (Pasteurised) பால் பாக்கெட்டுகள் பயன்படுத்துபவர்களுக்கு, பாலை கொதிக்க வைக்க வேண்டுமா? என்ற கேள்வி அடிக்கடி எழும். இந்தக் கேள்விக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம், ஹைதராபாத், பன்ஜாரா ஹில்ஸில் உள்ள கேர் மருத்துவமனையின் மருத்துவ உணவியல் நிபுணர் ஜி. சுஷ்மாவிடம் பேசியது.
பாக்கெட் பாலை கொதிக்க வைக்கத் தேவையில்லை: பாக்கெட் பாலை அருந்துவதற்கு முன் கொதிக்க வைக்கத் தேவையில்லை என்று சுஷ்மா தெரிவித்தார். "பதப்படுத்தப்பட்ட பால் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் கொல்லும் வெப்ப செயல்முறைக்கு உட்படுகிறது" என்று அவர் விளக்கினார். உண்மையில், கொதிக்க வைப்பது அதன் ஊட்டச்சத்து மதிப்பைப் பாதிக்கலாம்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
"நீண்ட நேரம் சூடுபடுத்துவது B12 மற்றும் C போன்ற வெப்பத்தால் பாதிக்கப்படும் வைட்டமின்களை இழக்கச் செய்யும்" என்று சுஷ்மா கூறினார். கடைகளில் கிடைக்கும் பதப்படுத்தப்பட்ட பாலை, அதன் காலாவதி தேதிக்குள், சரியான வெப்பநிலையில் சேமிக்கப்பட்டிருந்தால், நேரடியாகப் பாதுகாப்பாக உட்கொள்ளலாம் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
கொதிக்க வைப்பதால் ஏற்படும் விளைவுகள்: பால் கொதிக்க வைக்கப்படும்போது அதன் அமைப்பு மற்றும் சுவை மாறக்கூடும் என்று சுஷ்மா தெரிவித்தார். "பதப்படுத்தப்பட்ட பாலை கொதிக்க வைப்பதால் உடலில் எதிர்மறையான உடல்நலத் தாக்கங்கள் ஏற்படுவதாக அறியப்படவில்லை. இருப்பினும், பாலில் புரத அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் செரிமானத்தில் சிரமத்தை ஏற்படுத்தலாம். மாற்றமடைந்த புரதங்களை உடல் உடைப்பது கடினம், இது அதிக கழிவுப் பொருள் உருவாவதற்கு வழிவகுக்கும்" என்று சுஷ்மா கூறினார். "இது அழற்சி மற்றும் பிற செரிமான ஆரோக்கியம் தொடர்பான பிரச்னைகளுக்கும் வழிவகுக்கும். பதப்படுத்தப்பட்ட பாலில் உள்ள கால்சியம் தரம் குறைந்ததாகக் கருதப்படுகிறது, மேலும் இது சிறுநீரகக் கற்கள் போன்ற கடுமையான அபாயங்களை ஏற்படுத்தலாம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
யார் பாக்கெட் பாலைத் தவிர்க்க வேண்டும்? பால் புரதத்திற்கு ஒவ்வாமை அல்லது உணர்திறன் உள்ளவர்கள் மற்றும் லாக்டோஸ் சகிப்புத் தன்மை கண்டறியப்பட்டவர்கள் பதப்படுத்தப்பட்ட பாலைத் தவிர்க்க வேண்டும் என்று சுஷ்மா அறிவுறுத்தினார். "சுகாதார நிபுணரின் ஆலோசனையின்பேரில் உணவில் இருந்து பாலை நீக்க அறிவுறுத்தப்பட்டால், அல்லது பதப்படுத்தப்பட்ட பால் உட்கொள்வது ஏற்கனவே உள்ள மருத்துவ நிலைகளான கேலக்டோசெமியா போன்றவற்றை மோசமாக்கினால், நீங்கள் அத்தகைய பாலை குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்" என்று அவர் கூறினார். "மேலும், செரிமான அமைப்பு உணர்திறன் கொண்டவர்கள் பதப்படுத்தப்பட்ட பாலில் உள்ள புரதங்களை ஜீரணிக்க சிரமப்படலாம்" என்றும் அவர் மேலும் கூறினார்.