/indian-express-tamil/media/media_files/2025/07/19/dandruff-2025-07-19-10-14-57.jpg)
வேப்பிலை உடன் இதை சேருங்க… பொடுகு தொல்லை இனி இருக்காது; டாக்டர் நித்யா
பொடுகு ஏன் ஏற்படுகிறது? பொடுகு வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன. Dry Scalp வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு தலையிலும் வறட்சி ஏற்பட்டு பொடுகு உருவாகும். (Oily Scalp) சிலருக்கு தலையில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பு இருக்கும். இது தூசி மற்றும் வியர்வையுடன் சேர்ந்து பூஞ்சை தொற்றை (Fungal infection) ஏற்படுத்தி பொடுகுக்கு வழிவகுக்கும். தூசு, மாசு, ஏசி அறைகளில் அதிக நேரம் இருப்பது, அல்லது தலைமுடிக்கு காற்றோட்டம் இல்லாமல் இறுக்கமாக கட்டி வைப்பது (குறிப்பாக ஹெல்மெட் பயன்படுத்துபவர்களுக்கு) போன்றவை பொடுகு அதிகரிக்கக் காரணிகளாகும். தினமும் தலைக்குக் குளித்தும் பொடுகு குறையவில்லை என்பவர்களும், அதிக கெமிக்கல் ஷாம்பூக்களைப் பயன்படுத்துபவர்களும் உள்ளனர். கெமிக்கல் ஷாம்பூக்கள் முடி வேர்களைப் பலவீனப்படுத்தி, முடி உதிர்வு மற்றும் இளம் நரை போன்ற பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம் என்கிறார் டாக்டர் நித்யா.
பொடுகு நீங்க சித்த மருத்துவத் தீர்வுகள்
பொடுகுப் பிரச்னையை சரிசெய்ய சில எளிய சித்த மருத்துவ முறைகளைப் பின்பற்றலாம். வறண்ட சருமம் உள்ளவர்கள்: வாரம் 2 முறை எண்ணெய் குளியல் அவசியம். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள்: தினசரி தலைக்குக் குளிக்கலாம், ஆனால் கெமிக்கல் இல்லாத ஷாம்பூக்களைப் பயன்படுத்தவும். பொடுகு அதிகமாக இருப்பவர்கள், தினமும் அல்லது ஒருநாள் விட்டு ஒருநாள் தலைக்குக் குளிப்பது நல்லது.
பொடுதலை தைலம்: சித்த மருத்துவத்தில் பொடுதலை தைலம் என்ற ஒரு தைலம் உள்ளது. பொடுதலை என்பது பூஞ்சை எதிர்ப்பு (antifungal) பண்புகள் கொண்ட ஒரு முக்கியமான மூலிகை. கிராமப்புறங்களில் பொடுதலை இலையை அரைத்து தலைக்குப் பூசி குளிப்பார்கள். இந்த பொடுதலை தைலத்தை வாரம் 2 முறை பயன்படுத்தலாம். பொடுகு மிக அதிகமாக இருந்தால், தினமும் கூட பயன்படுத்தலாம். இது பொடுகைக் குறைக்க உதவும். பொடுதலை இலைகள் கிடைத்தால், அதனுடன் 10-15 வேப்பிலைகளைச் சேர்த்து அரைத்து தலைக்குப் பூசி குளிப்பதும் பலன் தரும்.
சொரியாசிஸ் மற்றும் பொடுகு: பொடுகு போலவே, சொரியாசிஸ் (Psoriasis) எனப்படும் தோல் நோயும் தலையில் பிளேக்ஸ் போல வந்து முடி உதிர்வை ஏற்படுத்தும். இப்படியான நிலைக்கு பொடுதலை தைலம் மற்றும் வெட்பாலை தைலம் இரண்டையும் கலந்து பயன்படுத்தலாம். வாரம் 3 முறை இந்த தைலங்களைப் பயன்படுத்தி எண்ணெய் குளியல் எடுக்கலாம்.
உணவு முறைகள்: அதிக காரம், மசாலா, எண்ணெய் உணவுகள் மற்றும் புளிப்பான உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. புதிய காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக, அத்திப்பிஞ்சு, அவரைக்காய், கொத்தவரங்காய் போன்ற துவர்ப்பு சுவையுள்ள காய்கறிகளை உணவில் சேர்ப்பது இரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி, பொடுகைக் குணப்படுத்த உதவும்.
சிறப்பு ஹேர் பேக் செய்ய தேவையான பொருட்கள்: திரிபலா சூரணம், வேம்புப் பொடி, பொடுதலைப் பொடி, நல்லெண்ணெய், தேங்காய்ப் பால்.
செய்முறை: திரிபலா சூரணம், வேம்புப் பொடி, பொடுதலைப் பொடி ஆகியவற்றை எடுத்து ஒன்றாகக் கலக்கவும். அதனுடன் சிறிது நல்லெண்ணெய் மற்றும் தேங்காய்ப் பால் சேர்த்து ஹேர் பேக் போல கலந்து கொள்ளவும். இந்த ஹேர் பேக்கை ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலையில் ஸ்கால்ப்பில் படுமாறு மெதுவாக மசாஜ் செய்து குளிக்கலாம். வேப்பிலை, பொடுதலை மற்றும் திரிபலாவின் கலவை பொடுகைக் குணப்படுத்த உதவும். 2 வாரங்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்கிறார் டாக்டர் நித்யா.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.