உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி, கோவையில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் மனநலம் குன்றிய குழந்தைகள் சைகை மொழியில் நடனமாடி காட்டிய காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
உலக மாற்றுத் திறனாளிகள் தினம் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சமூக நலத்துறை சார்பில் கோவை சித்தாபுதூரில் உள்ள ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். முன்னதாக தமிழக அரசின் முயற்சியின் காரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழ்த்தாய் வாழ்த்தை சைகை மொழியில் நடனமாக செய்து காட்டும் நிகழ்வு பயிற்றுவிக்கப்பட்டு இருந்தது.
-
கோவையில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா கொண்டாட்டம்
இதனை மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆர்வத்துடன் மேடையில் செய்து காட்டியது அங்கு இருந்த மாற்றுத்திறனாளி மாணவர்களின் பெற்றோரை பெரும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இதைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் மனநலம் குன்றிய மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் மாணவர்கள் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களை அசத்தினர். இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள், அவர்களின் பெற்றோர், உறவினர்கள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.
செய்தியாளர் பி.ரஹ்மான்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/