சிகார் நகரம் ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும். இது ராஜஸ்தான் மாநிலத்தின் வடகிழக்கு பகுதிகளில் அமைந்திருக்கிறது.
ஷேக்ஹாவதி மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் இந்த நகரம், திக்கான சிகார் எனும் மாகாணத்துக்கு தலைநகரமாக விளங்கி வந்தது.
மேலும் 'பீர் பான் கா பாஸ்' என்ற பெயரிலும் இந்த நகரம் அழைக்கப்பட்டது. தற்போது ராஜஸ்தானில் பிங்க் சிட்டி ஜெய்ப்பூருக்கு பிறகு மிகவும் வளர்ச்சியடைந்த நகரமாக சிகார் நகரமே கருதப்படுகிறது.
இந்நிலையில் சிகார் மாவட்டத்தின் நிர்வாக தலைமையகமாகவும் சிகார் நகரம் இருந்து வருகிறது. அதோடு இந்த நகரம் ஜூன்ஜூனு மாவட்டம், சுரு மாவட்டம், நாகவ்ர் மாவட்டம் மற்றும் ஜெய்ப்பூர் மாட்டங்களுடன் தன்னுடைய எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது.
லக்ஷ்மன் சிங் மகாராஜாவால் 1862-ஆம் கட்டப்பட்ட லக்ஷ்மன்கர் கோட்டையே சிகார் நகரின் புகழுக்கு முக்கிய காரணம்.
இந்தக் கோட்டையில் காணப்படும் சுவரோவியங்களும், கோட்டையின் தனிச் சிறப்பு வாய்ந்த கட்டிடக் கலை பாணியும் உலகம் முழுவதும் பிரபல்யமானது.
இதனால் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை இந் நகரம் ஈர்த்து வருகின்றது. இதுதவிர சாவந்த் ராம் சோக்காணி ஹவேலி, பன்ஸிதர் ரதி ஹவேலி, சங்கனேரியா ஹவேலி, மிரிஜாமால் கியாலா ஹவேலி, சார் சௌக் ஹவேலி, கெதியா ஹவேலி போன்ற மாடமாளிகைகள் சிகார் நகரம் முழுக்க நிறைந்து உள்ளது.
மேலும் சிகார் நகருக்கு வரும் பயணிகள் கண்டிப்பாக பதேப்பூர் நகருக்கும் சென்று வர வேண்டும். இது நவாப் பதே கான் எனும் கயாம்கானி இஸ்லாமியரால் கண்டறியப்பட்டது.
இந்த நகரத்தில் உள்ள அரசர் காலத்து கோட்டைகள், ஹவேலிகள், கோயில்கள், நவாபி பாவ்ரிகள், குளங்கள், மசூதிகள், நினைவுச் சின்னங்கள் ஆகியன மிகவும் பிரபல்யம்.
கதுஷ்யாம்ஜி எனும் புகழ்பெற்ற கோயிலும் சிகார் நகரில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.
இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் கதுஷ்யாம்ஜி திருவிழாவின் போது, இந்நகரின் கலாச்சாரம் சார்ந்த நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றது.
இவற்றைவிட கணேஷ்வர், ஜீன்மாதா, ஹரஸ்நாத், ராம்கர், மாதோ நிவாஸ் கோட்டி போன்ற இடங்களுக்கும் பார்ப்பதற்கு சிறப்பாக இருக்கும்.
சிகார் நகருக்கு செல்வதற்கு வசதியாக, ஜெய்ப்பூர் விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்திலிருந்து அஹமதாபாத், பெங்களூர், சென்னை, கௌஹாத்தி, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை போன்ற நாட்டின் முக்கிய நகரங்களுக்கு தினமும் எண்ணற்ற விமானங்கள் இயக்கப்படுகின்றன.
அத்துடன் சிகார் நகரிலேயே ரயில் நிலையம் இருக்கிறது.
டெல்லி, ஜெய்ப்பூர், ஜோத்பூர் மற்றும் பிக்கனேர் போன்ற அருகாமை நகரங்களிலிருந்து ஏராளமான பேருந்துகள் சிகார் நகருக்கு தினசரி இயக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
வருடத்தின் பெரும்பாலான காலங்களில் சூடான மற்றும் வறண்ட வானிலையே சிகார் நகரில் நிலவும். ஆனாலும் பனிக் காலங்களில் நிலவும் இதமான வெப்பநிலை சிகார் நகரை சுற்றிப் பார்க்க ஏற்றதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.