பட்டுப்புடவைகள், தமிழர்களின் பாரம்பரியத்திலும் கலாச்சாரத்திலும் இரண்டறக் கலந்தவை. அவற்றின் மென்மையும், பளபளப்பும், கண்கவர் வண்ணங்களும் காலம் கடந்த அழகுக்குச் சான்று. ஆனால், இந்த அழகிய பட்டாடைகளை நீண்ட காலத்திற்குப் பாதுகாக்க சரியான பராமரிப்பு மிகவும் அவசியம். உங்கள் பட்டுப்புடவையின் பொலிவு மங்காமல், புதுமை குறையாமல் இருக்க சில முக்கிய குறிப்புகளை இங்கே காணலாம்.
தூய்மைப்படுத்துதல் மற்றும் பராமரிப்பு நுட்பங்கள்
இயற்கையான முறையில் சுத்தம் செய்தல்: தங்க நகைகளை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் பூந்திக்கொடைகளை இளம் சூடான நீரில் அரை மணி நேரம் ஊற வைத்து, பிறகு கசக்கினால் வெண்மையான நுரை வரும். இந்த நுரையில் பட்டாடைகளை நன்கு ஊற வைத்து அலசினால் அவை பளபளவென்று இருக்கும். நீருடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து அலசினால் மிகவும் சுத்தமாகவும், நல்ல வாசனையுடனும் இருக்கும்.
மிருதுவாக்க உப்பு நீர்: உப்பு கரைத்த நீரில் அலசினால் பட்டு மிருதுவாக இருக்கும்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/04/silk-saree-care-wash-2025-07-04-14-30-25.jpg)
சாயம் போகாமல் இருக்க: புது துணியோ அல்லது பட்டுப்புடவையோ முதன்முறை நனைக்கும் போது, ஒரு ஸ்பூன் உப்பு கலந்த நீரில் நனைத்தால் சாயம் போகாது.
கடலை மாவு உபயோகம்: கடலை மாவை நீரில் நன்கு கரைத்து, அதில் பட்டுத் துணிகளை நனைத்து ஊற வைத்து கசக்கினாலும் அழுக்குகள் அகன்று, பட்டுப்புடவையின் நிறமும் பளபளப்பும் நீடித்திருக்கும்.
ஆரம்ப கால சலவை: முதல் மூன்று சலவையின் போது சோப்பு போடாமல், நல்ல தண்ணீரில் மட்டுமே அலசுவது நல்லது. அதன் பிறகு, சோப்புத்தூள் நல்ல தரமானதாகவும், உயர்ந்ததாகவும் இருப்பதை உறுதி செய்வது அவசியம்.
சுருக்கங்கள் தவிர்க்க: பட்டாடைகளை அலசும் போது, நீரில் ஒரு ஸ்பூன் கிளிசரின் கலந்து விட்டால் சுருக்கம் இருக்காது.
பகுதிகளாக சலவை செய்தல்: புடவையின் முந்தி மற்றும் பார்டரை தனியாக ஊற வைத்து அலசிய பின், உடல் பகுதியை நனைத்து வைப்பது நல்லது.
உலர்த்துதல் மற்றும் அயர்ன் செய்தல்
நிழலில் உலர்த்துதல்: பட்டுப்புடவைகளை ஒருபோதும் வெயிலில் உலர்த்தக் கூடாது. நிழலில் மட்டுமே காயப் போட வேண்டும். அப்போழுதுதான் நிறம் போகாமலும், மங்காமலும், பார்டரில் உள்ள ஜரிகை கருக்காமலும் இருக்கும்.
மிதமான அயர்ன்: புடவை காய்ந்த பின், மிதமான சூட்டில் அயர்ன் செய்ய வேண்டும். ஒரு வெள்ளைத் துணியை விரித்து, புடவையின் மீது போட்டு அயர்ன் செய்தால் புடவைக்கு எந்த சேதமும் ஏற்படாது.
கறைகளை நீக்குதல் மற்றும் சேமிப்பு
கறைகளுக்கு யூக்கலிப்டஸ் தைலம்: பட்டுத் துணிகளின் மீது படிந்துள்ள கரைகளைப் போக்க யூக்கலிப்டஸ் தைலம் மிகவும் சிறந்தது.
எண்ணெய் கறைகளுக்கு பெட்ரோல்: பட்டுத் துணிகளில் எண்ணெய் கறை பட்டுவிட்டால், சில துளி பெட்ரோல் விட்டு துடைத்தால் எண்ணெய் கறை அகன்று விடும்.
சரியான சேமிப்பு: பட்டுப்புடவை வாங்கியவுடன், அட்டைப்பெட்டியை விட்டு வெளியில் எடுத்து வைத்து விட வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அதன் மடிப்பை மாற்றி வைக்க வேண்டும். புடவைகளை பூச்சிகளிலிருந்து காக்க, மெல்லிய வேஷ்டி துணியினால் சுற்றி வைப்பது நல்லது.
இந்த எளிய பராமரிப்பு முறைகளைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் பட்டுப்புடவைகளை பல வருடங்களுக்கு புதியது போலவே பாதுகாக்கலாம்.