சாம்பார்:
சாம்பாருக்கும் தமிழக மக்களுக்கு இருக்கும் பந்தம் பிரிக்க முடியாத ஒன்று. சாம்பாரில் பல வகையுண்டு. எந்தவகை சாம்பார் செய்தாலும் அதை சாதம், இட்லி, சப்பாத்தி,உப்புமா என எல்லா வகையான உணவுகளுக்கு பொருத்தமாக இருக்கும்.
புதியதாக எதாவது ஹோட்டலுக்கு சென்றால் அந்த கடையின் டேஸ்ட்டை அவர்கள் வைக்கும் சாம்பாரை வைத்தே ருசி பார்த்து விடலாம். அந்த அளவுக்கு நமது உணவில் சாம்பாருக்கு இடமுண்டு.
பருப்பை வேகவைக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பருப்பை வேக வைக்கும் இடம் மற்றும் தாளிப்பில் தான் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். இந்த இடத்தில் தவறினால மொத்தமும் நாசம் தான். இன்றைய நவீன உலகில் காலை வைத்த சாம்பாரை தான் பெரும்பாலான வீடுகளில் இரவுக்கு டிபனுக்கும் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
ஆனால் பல சமயங்களில் காலையில் வைத்த சாம்பார் இரவில் கெட்டு போய்விடுவதாக இல்லத்தரசிகள் புலம்புவது வழக்கமாகி விட்டது. இனிமேல் அந்த கவலை வேண்டாம். காலையில் வைக்கும் சாம்பார் இரண்டு நாள் ஆகியும் கெடாமல் இருக்க இந்த டிப்ஸை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
துவரம் பருப்பை வேக வைக்கும் போது, ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்து வேகவைத்தால், சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்.
சமையல் குறிப்புகள்:
1. இட்லி கெட்டியாக இருந்தால் நாலு பச்சை அப்பளங்களை தண்ணீரில் நனைத்து மிக்சியில் ஒரு நிமிடம் ஓட விட்டு மாவில் களத்து வார்த்தால், இட்லி பூ மாதிரி இருக்கும்.
2. பொரித்த அப்பளம் மீதமாகிவிட்டால் அதை பாலிதீன் பையில் நன்றாக சுற்றி ஃபிரிஜ்ஜில் வைத்துவிட்டால் ஒரு வாரமானாலும் மொறுமொறுப்பாக இருக்கும்.
3. அடை மற்றும் வடை மாவில் தண்ணீர் அதிகமாகிவிட்டால், ஒன்றிரண்டு டீஸ்பூன் கார்ன் பிளாக்ஸை பொடித்து சேர்த்தால் உடனடியாக ஊறி மாவு கெட்டியாவதுடன் சுவையும் அபாரமாக இருக்கும்