நமது வீட்டில் மிக முக்கியமான இடம் கிட்சன் தான். அந்த வகையில் கிட்சனை பராமரிப்பது சற்று சிரமமான காரியமாக இருக்கும். எனினும், சில டிப்ஸ்களை கையாள்வதன் மூலம் பராமரிப்பு பணியை எளிதாக்கலாம். அதற்கான சில வழிமுறைகளை தற்போது காண்போம்.
தோசைக் கல்லை சுத்தமாக்க சிறிய ஐஸ் கட்டிகள் இருந்தால் போதும். தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடுப்படுத்தி, அதன் மீது ஐஸ் கட்டியை வைத்து தேய்க்க வேண்டும். தோசைக் கல்லின் அனைத்து பகுதிகளிலும் இவ்வாறு தேய்த்தால் சுத்தமாகி விடும். இதன் பின்னர் தோசைக் கல்லை சாதாரணமாக கழுவி விட்டு, தோசை சுட்டால் மாவு ஒட்டாமல் வரும்.
மிக்ஸ் ஜாரில் இருக்கும் ஈரப்பதம் எவ்வளவு துடைத்தாலும் எளிதில் போகாது. அப்போது, கேஸ் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது மிக்ஸி ஜாரின் உட்புறத்தை காண்பிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் மிக்ஸி ஜாரில் உள்ள ஈரப்பதம் எளிதில் நீங்கி விடும்.
வீட்டில் வைத்திருக்கும் அரிசியில் வண்டு, பூச்சிகள் வருவது பலருக்கும் கவலையாக இருக்கும். இதைத் தடுக்க அரிசி வைத்திருக்கும் பாத்திரத்திற்குள் பிரியாணி இலையை போட்டு வைக்க வேண்டும். இதனால், வண்டு போன்ற பூச்சிகள் அரிசிக்குள் வராமல் இருக்கும்.
கரப்பான் பூச்சிகளை தடுப்பதற்கு சுலபமான வழியை தற்போது பார்க்கலாம். வெங்காயம் மற்றும் பூண்டு தோல்களை தண்ணீரில் சுமார் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர், இந்த நீரை வடிகட்டி கரப்பான் பூச்சிகள் இருக்கும் இடங்களில் தெளிக்க வேண்டும். இவை கரப்பான் பூச்சி, பல்லி ஆகியவை கிட்சனுக்குள் வருவதை தடுக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“