Simple Home Decor Hacks for Diwali Tamil News: தீபாவளி நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், வீதிகள் எங்கும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மண் விளக்குகள், ரங்கோலி, காரம் மற்றும் இனிப்புகள் உள்ளிட்ட பண்டிகைக்காகச் சிறப்புப் பொருள்களை விற்பனை செய்வதில் விற்பனையாளர்கள் அனைவரும் தீயாய் வேலை செய்து வருகின்றனர்.
“நம் பாரம்பரிய வழக்கப்படி, தீபாவளி என்பது கடவுளையும் சில நல்ல அதிர்வுகளையும் வரவேற்பது. அதற்காக வீட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குகளையும் சுத்தம் செய்யும் நேரம் இது. தூய்மை செய்வது ஒரு முழுமையான மற்றும் நீண்ட நேரச் செயல்முறையாக இருந்தாலும்கூட, தீபாவளிக்கு உங்கள் வீட்டை மிக விரைவாக தயார்ப்படுத்தக்கூடிய அலங்காரத்தை எப்போதும் செய்யலாம்” என்று உள்துறை வடிவமைப்பு நிறுவனமான ஹிப்கோச்சின் (Hipcouch) இணை நிறுவனர் பங்கஜ் போடார் பகிர்ந்து கொண்டார்.
நுழைவாயில்
நம் வீட்டிற்கு வருபவர்கள் யாரும் முதலில் கவனிப்பது வீட்டின் நுழைவாயில்தான். எனவே உங்கள் வீடு தீபாவளி கொண்டாட்டத்திற்குத் தயார் நிலையில் உள்ளது என்ற தெளிவான செய்தியைக் கொடுக்கும் விதமாக அலங்காரத்தைச் செய்யத் தொடங்குகள். செர்ரி விளக்குகள் மற்றும் வண்ணமயமான மலர் அலங்காரங்களை இதற்காகப் பயன்படுத்தலாம். ரங்கோலி அல்லது வால் ஹேங்கிங் (wall hangings) போன்ற பண்டிகை காலச் சிறப்பு அலங்கார பொருள்களையும் சேர்த்துக்கொள்ளலாம். இவை நிச்சயம் உங்கள் விருந்தினர்களை அன்பாக வரவேற்கும்!
டெக்கரேட்டிவ் விளக்குகள்
விளக்குகளின் திருவிழா என்று அழைக்கப்படும் தீபாவளியைச் சிறப்பாக்க, வண்ணம் தீட்டப்பட்ட விளக்குகளைப் பயன்படுத்தலாம். தற்போது 'ஸ்ட்ரிங்' விளக்குகளும் சந்தையில் அதிகப்படியாகக் கிடைக்கிறது. அவை நிச்சயம் வித்தியாச மற்றும் மனநிறைவான அனுபவத்தைக் கொடுக்கும்.
வனப்புள்ள கர்டெயின்ஸ்
உங்களுடையது பட்ஜெட் தீபாவளியாக இருந்தால், நிச்சயம் கர்டெயின்ஸ் அல்லது திரைச்சீலைகள் உங்களுக்குக் கைகொடுக்கும். உங்கள் வீட்டின் தோற்றத்தை முழுமையாக மாற்றும் யுத்தி கர்டெயினிடம் உண்டு. வீட்டின் இடைவெளிகளை இந்த திரைச்சீலைகள் அற்புதமாக மாற்றும். வெவ்வேறு வண்ணங்களில் புதுமையான டிசைன்களில் மார்க்கெட்டில் கொட்டிக்கிடக்கும் கர்டெயின்களிலிருந்து உங்கள் வீட்டின் நிறத்திற்கு ஏற்றவற்றைத் தேர்வு செய்யலாம். உங்கள் வீட்டின் கட்டமைப்பு மற்றும் அளவைப் பொறுத்து, ஒற்றை அல்லது பல பேனல்கள் கொண்ட வடிவங்கள் மற்றும் பல்வேறு வகையான திரைச்சீலைகள் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம். பட்டு அல்லது பளபளப்பான சாட்டின் துணி கொண்ட திரைச்சீலைகள் உங்கள் வீட்டின் அழகை மேலும் மெருகேற்றும்.
மலர் அலங்காரம்
Floral Decoration for Diwali
பூக்கள் பிடிக்காதவர்கள் யாருமே இல்லை. அதன் வண்ணம், மணம் உள்ளிட்டவை நம் மனநிலையை மாற்றியமைக்கும் சக்திகொண்டவை. விருந்தினர்களின் வருகை என்றால் கேட்கவே வேண்டாம், நிச்சயம் பூக்களின் வருகை இல்லாமல் இருக்காது. ஆனால், முடிந்தவரை, பிளாஸ்டிக் மாலைகளுக்குப் பதிலாக ஃபிரெஷ் பூக்களைத் தேர்வு செய்யுங்கள். வீட்டின் வெவ்வேறு மூலைகளிலும் மலர் அலங்காரங்கள் செய்யலாம். ஓர் பெரிய பாத்திரத்தில் பூக்கள் மற்றும் இதழ்களுடன் மிதக்கும் மெழுகுவர்த்திகள் ஏற்றினாலே போதும், கண்டிப்பாக வீட்டின் அமைப்பு பிரகாசமாகும். மேலும், ரங்கோலி இட்ட சாயம் வாசலில் ஒட்டிக்கொள்ளும் என்கிற பயம் இருந்தால், யோசிக்காமல் பூக்களை வைத்து அலங்கரிக்கலாம்.
தரை அலங்காரம்
நண்பர்கள்/உறவினர்களின் வருகையின்போது வீட்டில் போதிய ஃபர்னிச்சர்கள் இல்லை என்று கவலைப்பட அவசியமே இல்லை. ஏற்கெனவே வீட்டில் இருக்கும் சோபா, நாற்காலிகளை நகர்த்திவிட்டு, தரமான பட்டுத்துணிகளை விரித்து தரையை அலங்கரிக்கலாம். அவை பாரம்பரியமாக உணரப்படுவது மட்டுமல்லாமல், உங்கள் அறை விசாலமானதாகவும் காட்டும்.
கட்லரி
குடும்பத்தோடு ஒன்றாக அமர்ந்து அனைத்து விதமான எமோஷன்களையும் பகிர்ந்துகொள்ளும் பகுதிதான் டைனிங் டேபிள். நாம் உபயோகிக்கும் கட்லரிகள், டைனிங் டேபிள் தோற்றத்தைப் புதுமையாக மாற்றுகின்றன. ஆசை ஆசையாக வாங்கி, உபயோகிக்காமல் வருடம் முழுவதும் பரண்மேல் தூங்கிக்கொண்டிருக்கும் விதவிதமான உலோகம் மற்றும் கண்ணாடிப் பொருள்களை இந்தப் பண்டிகை நாள்களில் பயன்படுத்தலாம். அதனை டைனிங் டேபிள் மீது அழகாக வரிசைப்படுத்தலாம். ஒரே போன்ற வண்ணங்களைத் தவிர்ப்பது சிறந்தது. குழந்தைகளிடமிருந்து பீங்கான், கண்ணாடி போன்ற உடையும் பாத்திரங்களைத் தள்ளி வைப்பது சிறந்தது.
ரம்மியமான சுவர்கள்
பெரும்பாலான மக்களுக்குத் தீபாவளியின்போது தங்கள் வீடுகளைப் புதிதாக பெயின்ட் செய்யும் வழக்கம் உண்டு. பெயின்ட் செய்ய விரும்பாதவர்கள், சுவர்களைப் புதுப்பிக்க விரும்பினால், வால்பேப்பர்களைத் தேர்வுசெய்யலாம். அவை உங்கள் தேவைகளுக்கு ஏற்றபடி பல்வேறு வகையான ப்ரின்ட்ஸ், டிசைன், நிறம் போன்றவற்றில் வருகின்றன. 3D அல்லது உலோக வால்பேப்பர்களும் தற்போது மார்க்கெட்டுகளில் அதிகம் கிடைக்கின்றன. ஃபர்னீச்சர், தரை மற்றும் திரைச்சீலைகள் ஆகியவற்றை மனதில் வைத்து புத்திசாலித்தனமாக வால் பேப்பர்களைத் தேர்வு செய்யலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"