வீட்டு பணிகளை எளிமையாக்குவதற்கு ஈஸியான கிட்சன் டிப்ஸ்கள் என்னவென்று இதில் காண்போம்.
நம் வீட்டில் மாவு சலிக்கும் போது அடிப்பகுதியில் எவ்வளவு பெரிய தட்டு வைத்திருந்தாலும் மாவு சிந்திவிடும். இதனை தடுப்பதற்கான முறை உள்ளது. ஒரு கிளாசில் மாவை போட்டு, அந்த கிளாஸை தலைகீழாக வைத்து மாவை சலித்தால் மாவு வீணாகி கீழே கொட்டுவதை தவிர்க்கலாம்.
வீட்டில் பயன்படுத்தப்படும் கத்தி போன்ற பொருள்களின் கூர்மை போதவில்லை என சில நேரங்களில் நினைப்பது உண்டு. அந்த நேரத்தில் கல் உப்பை எடுத்து கத்திகளில் தேய்த்தால் அவை கூர்மையாகி விடும். மேலும், மிக்ஸி ஜாரில் பிளேடை கூர்மைப்படுத்த, அவற்றில் கல் உப்பை போட்டு அரைத்து எடுத்தால் போதும். பிளேட் முற்றிலும் கூர்மையாகி விடும்.
இதேபோல், காய்கறிகளை துருவ பயன்படும் கருவியை மிக எளிமையாக கூர்மைப்படுத்த முடியும். வீட்டில் இருக்கும் இடிகல்லை கொண்டு காய் துருவிகளின் மீது வைத்து தேய்த்தால் அவை கூர்மையாகி விடும்.
கோதுமை மாவு, ரவை போன்றவற்றை கவரில் இருந்து வெட்டி எடுக்கும் போது, அந்தக் கவரின் மையப்பகுதியை V வடிவில் வெட்டலாம். இவ்வாறு செய்வதன் மூலம் கவரின் இரு முனைகளையும் கொண்டு கவரை கட்டிவிட முடியும். இப்படி செய்யும் போது கவரில் உள்ள மாவு கீழே கொட்டாமல் இருக்கும்.
துவரம் பருப்பு, பாசி பருப்பு போன்ற பொருள்களில் வண்டு, பூச்சிகள் வருவதை எளிமையாக தடுக்கலாம். இந்த பருப்பு வகைகளை கடையில் இருந்து வாங்கி வந்ததும், அவற்றை அடுப்பில் போட்டு சற்று சூடு படுத்தி அதன் பின்னர் டப்பாவில் போட்டு வைக்கலாம். இப்படி செய்வதால் பூச்சிகள் வராமல் இருக்கும்.
குக்கர் மற்றும் மிக்ஸி ஜாரின் கேஸ்கட்டுகள் தொய்வடைந்து விட்டால் அவற்றை பயன்படுத்த முடியாத நிலை உருவாகும். இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு ஸ்பூன் கல் உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் தண்ணீரில் கொதிக்க விட வேண்டும். இவ்வாறு செய்தால் கேஸ்கட்டுகள் மீண்டும் பயன்படுத்தும் அளவிற்கு இறுக்கமாகி விடும். இந்த முறையை 15 நாள்களுக்கு ஒரு முறை பின்பற்றலாம்.
ஒரு ஸ்பூன் சோப் பௌடர் மற்றும் கால் ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து தண்ணீரில் கலக்க வேண்டும். இந்தக் கரைசல் கொண்டு கண்ணாடி பொருள்களை துடைத்தால் அவை புதிது போல் பளபளப்பாகி விடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“