வீட்டு வேலைகளை சரியாக செய்வது மிகவும் சவாலான காரியமாக இருக்கும். அந்த வகையில் நம்முடைய வீட்டு பணிகளை திறம்பட செய்வதற்கு சில சிம்பிளான டிப்ஸை இந்தப் பதிவில் காணலாம்.
முதலில் கேஸ் அடுப்பை சுத்தம் செய்வது குறித்து பார்க்கலாம். இதற்காக, கேஸ் அடுப்பின் மேற்பகுதியில் இருக்கும் ஸ்டாண்டை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர், கேஸ் அடுப்பு மீது ஒரு துளி ஷாம்பூ விட வேண்டும். இனி ஸ்பாஞ்ச் ஸ்க்ரப்பர் கொண்டு கேஸ் அடுப்பை நன்றாக துடைக்கலாம்.
இவ்வாறு செய்யும் போது கேஸ் அடுப்பு முற்றிலும் சுத்தமாகி புதியது போன்று காட்சியளிக்கும். இதன் பின்பு ஒரு காய்ந்த துணி கொண்டு அடுப்பை ஒரு முறை துடைத்தால் போதுமானதாக இருக்கும். இந்த ட்ரிக்கை பயன்படுத்தி உங்கள் கேஸ் அடுப்பை சுத்தம் செய்து பாருங்கள்.
பருப்பு வகைகளை மொத்தமாக வாங்கி வந்து வீட்டில் ஸ்டோர் செய்து வைக்கும் பழக்கம் நிறைய பேரிடம் இருக்கும். ஆனால், இப்படி செய்யும் போது அவற்றில் பூச்சி வருவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கும். மேலும், பருப்பு இருக்கும் டப்பாவில் ஈரப்பதமும் அதிகமாக இருக்கும். இதனை தடுப்பதற்கு ஒரு பிரிஞ்சி இலையை இரண்டாக கிழித்து பருப்பு டப்பாவில் போடலாம்.
இதனால் பருப்பு இருக்கும் டப்பாவிற்குள் பூச்சிகள் வராமல் இருக்கும். பருப்பும் நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்கும். இப்போது மற்றொரு டிப்ஸை பார்க்கலாம். ஒரு சிறிய துணி எடுத்து அதில் கற்பூரத்தை பொடியாக்கி போட்டு இறுக்கமாக கட்டிக் கொள்ள வேண்டும். இதனை வீட்டில் துணி வைத்திருக்கும் அலமாரியில் அடிப்பகுதியில் வைத்து விடலாம். இதனால், கரப்பான் பூச்சிகள் மற்றும் பல்லி தொல்லை இருக்காது.
இது போன்ற சிம்பிளான டிப்ஸை ஃபாலோ செய்வதன் மூலம் நம்முடைய வீட்டு பணிகளை திறம்பட செய்திட முடியும்.