/indian-express-tamil/media/media_files/2025/08/10/sahana-home-tour-2025-08-10-18-32-10.jpg)
பாரம்பரிய இசை குடும்பம்; டாக்டர் கணவர்... 'சிந்து பைரவி' சஹானா வீடு எவ்ளோ அழகுன்னு பாருங்க!
'சிந்து பைரவி' சீரியல் நடிகை சஹானா, தனது புதிய வீட்டின் 'ஹோம் டூர்' வீடியோவில், தன் வாழ்க்கைப் பயணம் பற்றியும், தான் கனவு கண்ட வீட்டைப் பற்றியும் மனம் திறந்து பேசியுள்ளார். டெலிவிகடன் யூடியூப் பக்கத்தில் வெளியான இந்த வீடியோவில், சஹானாவின் எளிமையான கடந்த காலமும், தற்போது அவர் வாழும் ஆடம்பரமான வீடும் பலரையும் கவர்ந்துள்ளது.
ஓலைக் குடிசையில் இருந்து ஆடம்பர பங்களா வரை...
இன்று பிரமாண்டமாகத் தோற்றமளிக்கும் சஹானாவின் புதிய வீடு, பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தினாலும், அவரது ஆரம்ப வாழ்க்கை மிகவும் எளிமையானது. அவர் தனது குடும்பத்துடன் சென்னை வேளச்சேரியில் ஒரு சிறிய ஓலைக் குடிசையில்தான் வாழ்ந்துள்ளார். அவரது அம்மா கொஞ்சம் கொஞ்சமாக அந்த வீட்டை ஒரு கல் வீடாக மாற்றியுள்ளார். இத்தகைய கடினமான போராட்டங்களுக்குப் பிறகு, தற்போது சஹானா தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இந்த புதிய வீட்டில் நிம்மதியாக வாழ்ந்துவருகிறார். இந்த வீட்டில் குடிபெயர்ந்து 6 மாதங்கள் ஆகின்றன என்றார் சஹானா.
சினிமாக்களில் வருவதுபோல, வீட்டின் உள்ளே படிக்கட்டுகள் இருக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவு. இந்த ஆசை, எனது புதிய வீட்டில் நனவாகியுள்ளது என்றார். வீட்டின் நுழைவு வாயிலில், கணவர் மருத்துவர் என்பதையும், தனது குடும்பம் இசைப் பாரம்பரியம் கொண்டது என்பதையும் விளக்கும் கலைப்படைப்புகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, அவரது அம்மாவின் ஆசையை நிறைவேற்றும் விதமாக, அவர் வீணை வாசிப்பது போன்ற ஒரு ஓவியமும் அங்கு உள்ளது. வீட்டின் ஒவ்வொரு பொருளையும் தனிப்பட்ட கவனம் செலுத்தி சஹானா அலங்கரித்துள்ளார். ஆன்லைனில் தேடி வாங்கிய இசை தொடர்பான பொம்மைகள், குடும்பத்தின் பாரம்பரியத்தை நினைவுபடுத்துவதாகக் கூறுகிறார்.
தன்னுடைய கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட சிரமங்களைப் பற்றியும் சஹானா மனம் திறந்து பேசினார். பத்து மாதங்களும் தொடர்ச்சியாக வாந்தி எடுத்து மிகவும் சிரமப்பட்டதை உருக்கமாகப் பகிர்ந்து கொண்டார். அதே நேரத்தில், பாட்டி இறந்த ஐந்து நாட்களில் தன் மகள் பிறந்ததையும் அவர் நினைவு கூர்ந்தார். மகள் பிறந்த பிறகு, 3 முதல் 4 மாதங்களில் 15 முதல் 18 கிலோ வரை உடல் எடையைக் குறைத்த அனுபவத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
மேலும், தனது கணவர் ஒரு மருத்துவர் என்பதால், வீட்டிலேயே ஒரு சிறிய மருத்துவமனை அமைப்பை உருவாக்கியுள்ளார். இது அவசர காலத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குச் சிகிச்சை அளிக்க உதவியாக இருப்பதாகவும் தெரிவித்தார். கடைசியாக, 'குக் வித் கோமாளி' போன்ற சமையல் நிகழ்ச்சிகளில் ஒரு போட்டியாளராகவோ அல்லது கோமாளியாகவோ பங்கேற்க விரும்புவதாகவும் தனது ஆசையை வெளிப்படுத்தினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.