scorecardresearch

அஞ்சலி: ஆயிரம் அம்பேத்கர் சிலைகளை செய்த சிற்பி சிவானந்தம்

சென்னை முதல் கிருஷ்ணகிரி வரை உள்ள ஊர்களில் உள்ள அம்பேத்கர் சிலைகளில் பெரும்பாலும் சிலை வடிவமைப்பு சிற்பி சிவா என்ற இவர் பெயரைக் காணலாம்.

அஞ்சலி: ஆயிரம் அம்பேத்கர் சிலைகளை செய்த சிற்பி சிவானந்தம்

திருவாசகம், ஆசிரியர்

தங்கள் மனதிற்கு பிடித்த கலையை கற்றுக் கொண்டு அதில் சாதிக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் வாழ்பவர்கள் பலர். தனக்கு தெரிந்த ஒரு கலையை தன் இலட்சியத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற மனதுடன் சாதிப்பவர்கள் வெகு சிலரே. அந்த வெகு சிலரில் ஒருவர் தான் சிற்பி.சிவா என்று பலராலும் அழைக்கப்படும் சிவானந்தம். இத்தகைய லட்சியவாதியாக வாழ்ந்த சிற்பி சிவா நேற்று (ஜூன் 5) உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு விசிக தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு இந்திய குடியரசு கட்சி தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஒருங்கிணைந்த வட ஆற்காடு மாவட்டத்தில் (தற்போது ராணிப்பேட்டை மாவட்டம்) வாலாஜாப்பேட்டை வட்டம் காரை மாநகரில் (காரை காலனி என்பதை அந்த ஊர் மக்கள் அவ்வாறு தான் அழைக்கின்றனர்) ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தவர். அந்த ஊரில் உள்ள ஆதி-திராவிடர் நலத்துறை பள்ளியில் படித்தவர். பிறகு ராணிப்பேட்டையில் ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்ட ஈ.ஐ.டி.பாரி இந்தியா லிமிடெட் என்ற பீங்கான் பொருட்கள் மற்றும் உரம் உற்பத்தி செய்யும் பெரிய தொழிற்சாலையில் மோல்டிங் பிரிவில் பணியாற்றினார். அங்கு பீங்கான் பொருட்கள் அச்சு எடுக்கும் போது தோன்றிய ஒரு சிந்தனை வாழ்நாள் முழுவதும் அவரை ஒரு இலட்சிய வாதியாக மாற்றியது.

அந்த மோல்டிங் கலையை பயன்படுத்தி தான் தெய்வமாக போற்றும் இலட்சிய தலைவர் ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளியாக தோன்றிய சட்டமேதை டாக்டர் பாபா சாகேப் பீமாராவ் அம்பேத்கர் அவர்களின் சிலை ஒன்று செய்து நமது ஊரில் நிறுவ வேண்டும் என்று ஆசைப்பட்டு நண்பர்கள் உடன் இணைந்து சிலையை நிறுவினார். சிலை திறப்பு விழாவிற்கு வந்திருந்த தலைவர்கள் பலரும் சிலை தத்ரூபமாக இருப்பதாகவும் எங்கள் ஊரிலும் சிலை வைக்க நீங்கள் செய்து தரவேண்டும் என கேட்டுக்கொண்டதற்கு இணங்க சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அம்பேத்கர் சிலைகள் மட்டுமே செய்து வந்தார். தான் இறக்கும் கடைசி நாள் வரை அம்பேத்கர் சிலைகள் மட்டுமே செய்து வந்தார். ஒரு சில தலைவர்களின் வேண்டுகோளுக்கிணங்க புத்தர் சிலைகள் செய்து தந்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் அவர் சார்ந்த இயக்கமான இந்திய குடியரசு கட்சியின் தலைவர்கள் சிலரின் சிலைகளை, அதிலும் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக முழுமூச்சாக பாடுபட்டவர்கள் என்ற வகையில் செய்து கொடுத்திருக்கிறார்.

யார் எவ்வளவு ரூபாய் கொடுக்கின்றேன் என்றாலும் வேறு எந்த சிலைகளும் செய்ய மாட்டேன் என்பதில் இறுதி மூச்சு வரை உறுதியாக இருந்தார். அவரின் இந்த உறுதிக்கு அவர் ஊர் ஒரு முதல் காரணம். சுமார் பத்தாயிரம் மக்கள் வசிக்கும் அவர் ஊரில் 90% மேற்பட்ட மக்கள் நன்கு படித்தவர்கள். ஒவ்வொரு வீட்டிலும் நன்கு படித்து பல்வேறு பணிகளில் இருப்பவர்கள். பெரும்பாலும் அடித்தட்டு வேலைகள் செய்பவர்கள் யாரும் கிடையாது. ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், மருத்துவர்கள், கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர்கள், வங்கி அதிகாரிகள், ரயில்வே அதிகாரிகள், பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள், இராணுவ வீரர்கள், மிகப்பெரிய தனியார் கம்பெனிகளில் ஊழியர்கள், அரசியலில் ஒரு எம்.பி, மூன்று நகர்மன்ற தலைவர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளில் நிர்வாகிகள் என நிறைந்த ஊர். இந்த வளர்ச்சிக்கு காரணம் புரட்சியாளர் அம்பேத்கர் தான் என திடமாக நம்பும் ஊர் அது.

ஊரில் இராமர் கோயில், மாரியம்மன் கோயில், ஆஞ்சநேயர் கோயில், சர்ச், மசூதி என ஏழெட்டு கோயில்கள் இருந்தாலும் அனைத்து திருவிழாக்களை கொண்டாடினாலூம் அவர்களுக்கு முழுமுதல் கடவுளாக விளங்குபவர் அண்ணல் அம்பேத்கர். சித்திரை மாதம் திருவிழாவின்போது ஊர் பகுதியில் இருந்து சுவாமி தேர் காலனி பகுதிக்கு வராமல் இருந்துள்ளது. இவர் நண்பர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு வருடம் காலனி எல்லை வரை வரும் தேரை காலனி உள்ளே இழுத்துக் கொண்டு வந்துவிட திட்டம் போட அதை அறிந்த அரசு சமரசம் பேசி சுவாமி சிலையை இருதரப்பினருக்கும் பொது என்றும் இருதரப்பினரும் அதே சுவாமி சிலையை வைத்து தனித்தனியாக திருவிழா நடத்திக் கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டது.

ஊரில் இரவு பாடசாலை நடத்துவது. அம்பேத்கர் கொள்கைகளை போதிப்பது என நண்பர்களுடன் இணைந்து கொள்கைவாதியாகவே வாழ்ந்தவர். இதனால் தான் அம்மக்கள் தங்கள் ஊரை காலனி என்று அழைக்காமல் காரை மாநகர் என்று அழைக்கிறார்கள் போலும். அவர் இலட்சியத்திற்கு ஏற்ப அவர் குடும்பம் அமைந்திருந்தது. அவருடைய மனைவி ஆசிரியர். அரசு பள்ளியில் பணி கிடைத்தபோதும் ஆதி-திராவிடர் நலத்துறை பள்ளியில் தான் பணிபுரிவேன் என்ற இலட்சியத்துடன் சுமார் முப்பத்தைந்து ஆண்டு காலம் ஆதி திராவிடர் நலத்துறை பள்ளியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவரது மகன் எம்.இ. படித்து முடித்து பணிசெய்து வரும்போதும் தந்தையின் இலட்சிய பணியை தொடர்கிறார். அவரது மகள் மின்வாரியத்தில் செயற்பொறியாளர் ஆக பணிபுரிகிறார். சென்னை முதல் கிருஷ்ணகிரி வரை உள்ள ஊர்களில் உள்ள அம்பேத்கர் சிலைகளில் பெரும்பாலும் சிலை வடிவமைப்பு சிற்பி சிவா என்ற இவர் பெயரைக் காணலாம்.

இப்படி, அம்பேத்கர், புத்தர், தலித் தலைவர்களின் சிலையை செய்வதையே வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு செயல்பட்டு வந்த சிற்பி சிவானந்தம் அவர்களின் பணியை கௌரவிக்கும் வகையில் அவர் வாழ்ந்த தெருவிற்கு அவர் பெயரை சூட்டுவது பொருத்தமாக இருக்கும். ஏனென்றால், அங்குதான் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அம்பேத்கர் சிலைகளை வார்த்தெடுத்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Sirpi sivanandam passes away who makes only ambedkar buddha statues