சக்திசரவணக்குமார்
சிவகங்கையில் வாரம் தோறும் புதன்கிழமை சந்தை நடைபெறுகிறது. இந்நிலையில், இன்றைய சந்தையில் பட்டாணியில், பச்சை சாயம் பூசி விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்துள்ளது. இதன் அடிப்படையில் சிவகங்கை உணவு பாதுகாப்பு அதிகாரி சரவணக்குமார் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் சேர்ந்து வாரச்சந்தை காய்கறி மார்க்கெட்டில் திடீர் ஆய்வு செய்தனர்.
அப்போது, விற்பனைக்கு வைக்கபட்டிருந்த பச்சை பட்டாணியை தண்ணீரில் போட்டு சோதித்ததில், பச்சை சாயம் வெளிப்பட்டது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்து பிரேமலதா, அழகுலட்சுமி, மணிகண்டன் உள்ளிட்ட மூன்று பேருக்கு தலா 1000 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும், அவர்களிடம் இருந்து சுமார் 40 கிலோ பட்டாணியை பறிமுதல் செய்தனர். அத்துடன், இவற்றை விற்பனை செய்த வியாபாரிகளுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. மீண்டும் இதுபோன்ற குற்றம் கண்டறியப்பட்டால், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
"பச்சை பட்டாணி ஜீரண சக்திக்கு உதவுகிறது. குடலில் நல்ல பாக்டீரியாவை அதிகரித்து குடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. ஆனால்
வசீகரத்தன்மைக்காக பச்சை ரசாயனம் பூசப்பட்டு விற்பனை செய்யப்படுவதால், மக்களுக்கு அஜீரண கோளாறு, புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் அதிகாரிகள் எச்சரித்தனர்." என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சரவணக்குமார் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“