/indian-express-tamil/media/media_files/2025/07/14/skin-cancer-2025-07-14-10-53-12.jpg)
தோலில் இந்த மாற்றங்களை கவனிங்க…புற்றுநோயாக இருக்கலாம்; எச்சரிக்கும் டாக்டர் கார்த்திகேயன்
தோலில் ஏற்படும் சிறிய மாற்றங்களை நாம் பெரும்பாலும் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம். ஆனால், சில சமயங்களில் இம்மாற்றங்கள் தீவிர நோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். அப்படியொரு முக்கிய நோய்தான் தோல் புற்றுநோய். குறிப்பாக, மைக்கோசிஸ் பங்காய்டஸ் (Mycosis Fungoides) எனப்படும் அரிய வகை தோல் புற்றுநோய் குறித்து டாக்டர் கார்த்திகேயன் விரிவாக விளக்குகிறார்.
மைக்கோசிஸ் பங்காய்டஸ்: அறிகுறிகள்
தோலில் உண்டாகும் சிவப்பு நிற தடிப்புகள் (patches), எக்ஸிமா எனப்படும் அரிக்கும் தோலழற்சி போன்று காட்சியளிக்கலாம். ஆனால், இந்த தடிப்புகள் தடிமனாகவும், அரிப்புடனும், தோல் உதிர்வுடனும் காணப்பட்டால், ஆரம்பகட்ட மைக்கோசிஸ் பங்காய்டஸாக இருக்கலாம். மேலும், முடி உதிர்வும் இதனுடன் ஏற்படலாம் என்கிறார் டாக்டர் கார்த்திகேயன்.
நோய் தீவிரமடையும்போது, இந்தத் தடிமனான தோல்கள் பெரிதாகி, விரிவடைந்து, புண்களாக மாறக்கூடும். அத்துடன், இந்தத் தோல் பகுதிகளுக்கு அருகிலுள்ள நிணநீர் சுரப்பிகள் (Lymph Nodes) வீங்குவது, காரணமில்லாமல் உடல் எடை குறைவது, காய்ச்சல், மற்றும் இரவு நேரங்களில் அதிக வியர்வை போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். இந்த அறிகுறிகள் ஒருவேளை தோல் புற்றுநோயாக இருக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.
நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை:
இந்த அறிகுறிகள் இருந்தாலும் நீங்களாகவே பயப்படவோ அல்லது சுய-பரிசோதனை செய்து கொள்ளவோ கூடாது. ஏனெனில், இந்த அறிகுறிகள் பிற தோல் நோய்களுடனும் குழப்பத்தை ஏற்படுத்தலாம். தோல் புற்றுநோயை உறுதிப்படுத்த, தோலின் சிறிய பகுதி பயாப்ஸி பரிசோதனைக்காக எடுக்கப்படும். சில ரத்தப் பரிசோதனைகள், சி.டி. பெட் ஸ்கேன், மற்றும் வீங்கிய நிணநீர் சுரப்பிகளில் இருந்து பயாப்ஸி எடுப்பதன் மூலமும் நோய் கண்டறியப்படும். ஆரம்ப கட்டத்தில், தோலில் தடவக்கூடிய ஸ்டீராய்டு மருந்துகள் மற்றும் போட்டோதெரப்பி (Phototherapy) எனப்படும் புறஊதா ஒளிக்கதிர் சிகிச்சை (Ultraviolet Light Radiation Therapy) பயன்படுத்தப்படும். நோய் கட்டுக்குள் வராமல் தீவிரமடைந்தால், பொதுவாகப் புற்றுநோய்களுக்குப் பயன்படுத்தப்படும் கீமோதெரப்பி மற்றும் ரேடியோதெரப்பி போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படும்.
தோல் புற்றுநோயைத் தடுக்கும் வழிமுறைகள்: உணவு மற்றும் வாழ்க்கை முறை
தோல் புற்றுநோய் பொதுவாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், ஆண்களை விடப் பெண்களுக்கு அதிக எதிர்ப்பாற்றல் குறைவாக இருக்கும் போதும், சில வேதிப் பொருட்களுக்கு வெளிப்படும்போதும், குடும்பத்தில் யாருக்கேனும் புற்றுநோய் வரலாறு இருக்கும்போதும் வரக்கூடிய வாய்ப்புள்ளது.
வைட்டமின் சி நிறைந்த பழங்கள்: நெல்லிக்காய், கொய்யா, ஆரஞ்சு போன்றவை உடல் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும்.
பீட்டா கரோட்டின்: கேரட், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, பப்பாளி ஆகியவற்றில் உள்ள பீட்டா கரோட்டின், புற்றுநோய் வராமல் தடுக்க உதவும்.
பச்சை இலைக் காய்கறிகள்: பசலைக் கீரை, முருங்கைக் கீரை உள்ளிட்ட அனைத்து கீரை வகைகளும் புற்றுநோய்களுக்கு எதிராக உடலை பலப்படுத்தும்.
தக்காளி: உடல் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும்.
ஒமேகா-3 கொழுப்புகள்: ஆளி விதைகள், சியா விதைகள், வால்நட், பாதாம் போன்ற நட்ஸ்கள் மற்றும் சார்டின், மக்கரல் போன்ற மீன்களில் உள்ள ஒமேகா-3 கொழுப்புகள் புற்றுநோய்கள் வராமல் தடுக்க உதவும். தினமும் 10 கிராம் விதைகள் அல்லது நட்ஸ் உட்கொள்வது நல்லது.
மஞ்சள்: மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் (Anti-inflammatory properties) உடலுக்கு நன்மை பயக்கும். தினமும் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து குடிப்பது அல்லது சமையலில் பயன்படுத்துவது நல்லது.
பருப்பு வகைகள்: துவரம்பருப்பு, பாசிப்பயறு போன்ற புரோட்டின் நிறைந்த உணவுகள் ஆரோக்கியத்திற்கு நல்லது.
ஆரோக்கியமான அரிசி வகைகள்: வெள்ளை அரிசிக்கு பதிலாக சிகப்பு அரிசி, கருப்பு கவுனி அரிசி, குதிரைவாலி போன்ற பலவகையான அரிசி வகைகளைப் பயன்படுத்தலாம்.
சமைக்கும் முறை: அசைவ உணவுகளை வேக வைத்துச் சாப்பிடுவது சிறந்தது.
தவிர்க்க வேண்டியவை: சர்க்கரை, பொரித்த உணவுகள், ஆல்கஹால் மற்றும் செயற்கை ரசாயனங்கள் (Artificial Preservatives) கலந்த உணவுகளைத் தவிர்ப்பது புற்றுநோய் தடுப்புக்கு அவசியம்.
வாழ்க்கை முறை மாற்றங்கள்: தினசரி 20-30 நிமிடங்கள் நடைபயிற்சி, சுவாசப் பயிற்சிகள், சைக்கிள் ஓட்டுதல், 8 மணி நேரம் ஆழ்ந்த உறக்கம், தியானப் பயிற்சி, கற்றாழை ஜெல் மற்றும் சுத்தமான தேங்காய் எண்ணெய் போன்ற இயற்கை மாய்ஸ்சரைசர்களைப் பயன்படுத்துவது, வேப்பிலை, இஞ்சி டீ, துளசி டீ, முருங்கைக் கீரை சூப் போன்றவற்றை உணவில் சேர்ப்பது, ஊறவைத்த வெந்தயத்தை உட்கொள்வது போன்ற எளிய வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆரோக்கியத்திற்கு உதவும் என்கிறார் டாக்டர் கார்த்திகேயன்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.