ஒழுங்கற்ற வாழ்க்கை முறைகள் அல்லது முறையற்ற உணவுப் பழக்கங்கள் காரணமாக வயிற்று உப்புசம், அசிடிட்டி, மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகள் இப்போது மிகவும் பொதுவானதாகிவிட்டது.
போதுமான தண்ணீர் குடிப்பது, தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது, உணவை சரியாக மென்று சாப்பிடுவது மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவுவதாக அறியப்படுகிறது, ஆனால் நீங்கள் எப்படி தூங்குகிறீர்கள் என்பதும் முக்கியம். நிபுணர்களின் கூற்றுப்படி, இரவில் தூங்கும் நிலை, குடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
செரிமானத்தை மேம்படுத்துவதற்கு சிறந்த தூக்க நிலை எது?
இடது பக்கமாக படுப்பது அதிக ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது, ஏனெனில் இது நமது செரிமான உணவை சிறுகுடலில் இருந்து பெரிய குடலுக்கு எளிதாக மாற்றுகிறது. இடது பக்கம் தூங்குவது, ஏப்பம் மற்றும் நெஞ்செரிச்சல் (gastro-oesophageal reflux disease) போன்ற கோளாறுகளைத் தடுக்கிறது, என்று மருத்துவர் மணிரா தஸ்மனா கூறினார்.
இதை ஒப்புக்கொண்ட மருத்துவர் மகேஷ் குப்தா, சிறந்த செரிமானத்திற்காக இடது பக்கம் தூங்குமாறு பரிந்துரைத்தார். வயிறு உடலின் இடது பக்கத்தில், உணவுக்குழாய்க்கு கீழே உள்ளது.
நாம் இடது பக்கமாக உறங்கும்போது, வயிற்று அமிலம், புவியீர்ப்பு விசைக்கு எதிராக செரிமான மண்டலத்தில் எழுவது கடினம். மறுபுறம் புவியீர்ப்பு, அமிலத்தை வயிற்றில் வைத்திருக்கிறது. இது நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணத்தின் அறிகுறிகளை குறைக்கும்.
செரிமானத்திற்கு இடது பக்கம் சிறந்த தூக்க நிலையாக கருதப்படும் வேளையில், மற்ற தூக்க நிலைகள் ஆரோக்கியத்தில் ஏற்படும் தாக்கத்தை அறிந்து கொள்வதும் முக்கியமானது.
நிபுணர்களின் கூற்றுப்படி, உணவை உட்கொண்ட பிறகு வலது பக்கத்தில் தூங்குவது ஆரோக்கியமற்ற நடைமுறையாகும். இது நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணத்திற்கு வழிவகுக்கிறது, மருத்துவர் தஸ்மனா கூறினார்.
இதேபோல், நேராக படுப்பதும், குப்புறப்படுத்து தூங்குவதும் நல்லதல்ல.

ஆசிட் ரிஃப்ளக்ஸ் காரணமாக உங்களுக்கு நெஞ்செரிச்சல் இருந்தால், நேராக தூங்க வேண்டாம். அப்படி தூங்குவதால் மீண்டும் தொண்டைக்குள் அமிலம் நுழைகிறது, இது இரவு முழுவதும் எரிச்சல் உணர்வையும் அசௌகரியத்தையும் தரும், என்று மருத்துவர் குப்தா கூறினார்.
உங்களின் உணவுக்குப் பிறகு உடனடியாக தூங்குவதையும் நீங்கள் தவிர்க்க வேண்டும். அசிட் ரிஃப்ளக்ஸைத் தவிர்க்க இரவு உணவிற்கும், தூக்கத்திற்கும் இடையில் குறைந்தது 2 மணிநேர இடைவெளி இருக்க வேண்டும்.
இரவு உணவு கொஞ்சமாகவும், இலகுவாகவும் இருக்க வேண்டும். GERD நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உயரமான தலையணை, இரவு உணவிற்குப் பிறகு நடைபயிற்சி மற்றும் லேசான இரவு உணவு ஆகியவை பயனுள்ள நடவடிக்கைகளாகும், என்று மருத்துவர் குப்தா கூறினார்.
உடலில் உள்ள அனைத்து ஹார்மோன்களும் அதிகாலை 5 மணியளவில் வெளியிடப்படுகின்றன.
எனவே, தூக்கத்தில் ஏற்படும் ஏதேனும் தொந்தரவுகள் இந்த ஹார்மோன்களை வெளியிடுவதில் பாதிப்பை ஏற்படுத்தும், இது அஜீரணம், வீக்கம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு மற்றும் அமில ரிஃப்ளக்ஸ் என செரிமானத்தை பாதிக்கும்.
தாமதமாக தூங்குபவர்கள் அல்லது இரவு ஷிப்டுகளை பின்பற்றுபவர்கள், நேரம் கழித்து இரவு உணவு சாப்பிடுபவர்கள் அல்லது காலை அதிக நேரம் தூங்குபவர்கள் இந்த செரிமான பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள்.
சர்க்காடியன் ரிதம் செயலிழப்பு, இரைப்பை அழற்சிக்கு வழிவகுக்கிறது, ஏனெனில் செரிமான செயல்பாட்டில் பெரும்பாலான மாற்றங்கள் தூக்கத்தின் போது செய்யப்படுகின்றன என்று மருத்துவர் தஸ்மானா கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“