மழைக்காலத்தில் பாம்புகளின் நடமாட்டம் அதிகரிப்பது வழக்கம்தான். காரணம், கனமழை அவற்றின் பதுங்குமிடங்களை மூழ்கடித்துவிடுவதால் அவை உலர்ந்த இடங்களைத் தேடி மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கு வரத் தொடங்குகின்றன. இதனால், மக்களுக்கும் பாம்புகளுக்கும் இடையே ஏற்படும் சந்திப்புக்கான வாய்ப்புகள் கூடுகின்றன. இந்த ஊர்ந்து செல்லும் உயிரினங்கள் மற்றும் அவற்றால் ஏற்படும் அபாயங்கள் குறித்து மேலும் அறிய, இந்தியன் பெஸ்ட் கன்ட்ரோல் நிறுவனத்தைச் சேர்ந்த தீபக் சர்மாவுடன் பேசினோம். அவர் குறிப்பிட்ட சில பாம்புகளும் அவற்றின் ஆபத்துகளும் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
நல்ல பாம்பு (Indian Cobra): இந்திய அளவில் மிகவும் அறியப்பட்ட விஷப்பாம்பு இது. இதன் கடி நரம்பு மண்டலத்தையும், சுவாசத்தையும் கடுமையாகப் பாதித்து, உரிய சிகிச்சை இல்லாவிட்டால் உயிரிழப்பையும் ஏற்படுத்தலாம். பண்ணைகள், திறந்த வெளிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் இவற்றைக் காணலாம்.
கட்டுவிரியன் (Common Krait): ஆசியாவிலேயே மிக ஆபத்தான பாம்புகளில் கட்டுவிரியன் முக்கியமானது. இதன் கடி பெரும்பாலும் வலியற்றது என்பதால், கடித்ததுகூட தெரியாமல் பலர் இருந்துவிடுவார்கள். இதன் விஷம் நரம்பு மண்டலத்தைப் பாதித்து, பக்கவாதம் அல்லது சுவாசக் கோளாறை ஏற்படுத்தும். இது இரவில் நடமாடும் என்பதால், மழைக்காலத்தில் வீடுகளுக்குள் நுழைய வாய்ப்புள்ளது.
ரஸ்ஸல் வைப்பர் (Russell’s Viper): இது விஷத்தன்மை கொண்டதுடன், சீண்டினால் ஆக்ரோஷமாக இருக்கும். இதன் விஷம் உள் ரத்தப்போக்கு, சிறுநீரகப் பாதிப்பு மற்றும் மரணத்தைக்கூட விளைவிக்கும். ஆபத்து ஏற்பட்டால் உரத்த சீறும் ஒலியை எழுப்பும். புல்வெளிகள், புதர்ப் பகுதிகளில் இதை அதிகம் காணலாம்.
சுருள் விரியன் (Saw-scaled Viper): சிறிய அளவு என்றாலும் இது மிகவும் ஆபத்தான பாம்பு. இதன் விஷம் கடுமையான ரத்தப்போக்கு மற்றும் திசு பாதிப்பை ஏற்படுத்தும். இது வேகமாக நகரக்கூடியது, எளிதில் கோபமடையும். வறண்ட திறந்தவெளிகள், விவசாய நிலங்களில் காணப்படும்.
சாரைப் பாம்பு (Rat Snake): உருவத்தில் நல்ல பாம்பைப்போல் தோன்றினாலும், சாரைப் பாம்பு விஷமற்றது, முற்றிலும் பாதிப்பில்லாதது. எலிகளைக் கட்டுப்படுத்துவதால், பண்ணைகளுக்கும் வீடுகளுக்கும் இது நன்மை பயக்கும் பாம்பு.
பச்சைப்பாம்பு (Green Vine Snake): மெலிதாகவும், பச்சைப் பசேலென்றும் இருக்கும் இது மரங்களிலும், புதர்களிலும் வாழும். லேசான விஷத் தன்மை இருந்தாலும், இதன் கடி மனிதர்களுக்கு ஆபத்தானது அல்ல; சிறிய வீக்கம் அல்லது எரிச்சலை மட்டுமே ஏற்படுத்தும்.
கண்டங்கண்டை (Checkered Keelback): மழைக்குப் பிறகு குளங்கள், ஏரிகள், வயல்வெளிகளுக்கு அருகில் காணப்படும் பொதுவான நீர் பாம்பு இது. விஷமற்றது. சில சமயங்களில் இதை ஆபத்தான பாம்புகளுடன் குழப்பிக் கொண்டாலும், இது மனிதர்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது.
எது மிகவும் ஆபத்தானது?
தீபக் சர்மாவின் கூற்றுப்படி, கட்டுவிரியன்தான் (Common Krait) மிகவும் ஆபத்தானது. "வலியற்ற கடி என்பதால், குறிப்பாக இரவில் கடித்ததுகூட தெரியாது. ஆனால் விஷம் மிக வேகமாகச் செயல்பட்டு, சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், பக்கவாதம் மற்றும் சுவாசக் கோளாறை ஏற்படுத்தும்" என்று அவர் எச்சரித்தார். இந்தியாவில் பாம்புக்கடியால் ஏற்படும் மரணங்களில் எண்ணிக்கைக்கு கட்டுவிரியன்களே காரணம் என்றும் சர்மா குறிப்பிட்டார்.
பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
விஷப் பாம்புக் கடிகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள சில எளிய வழிகளை சர்மா பரிந்துரைத்தார். வெறும்காலில் நடப்பதைத் தவிர்க்கவும், குறிப்பாக இரவில் அல்லது செடிகளுக்கு அருகில் வெறும் காலில் செல்ல வேண்டாம். இருட்டில் நடமாடும்போது எப்போதும் ஒரு டார்ச்லைட்டை உடன் எடுத்துச் செல்லவும். எலிகள் பாம்புகளை ஈர்க்கும் என்பதால், உங்கள் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருங்கள். குழிகள், விறகு குவியல்கள் அல்லது உயரமான புற்களுக்குள் முதலில் சரிபார்க்காமல் கையை விடாதீர்கள். பாம்புக்கடி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லவும். வீட்டிலேயே வைத்தியம் செய்யவோ அல்லது விஷத்தை உறிஞ்சி எடுக்கவோ முயற்சிக்காதீர்கள் என்று அறிவுறுத்துகிறார் தீபக் சர்மா.