தமிழில் அமராவதி என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சோனம் கபூர், பாலிவுட்டில் பிரபல நடிகைகளில் ஒருவர். ஆடையில் தொடங்கி கதை தேர்வு வரை சோனம் கபூர் எப்போதுமே தனித்துவமானவர். சமீபத்தில் தான் இவருக்கும், பிரபல தொழிலதிபர் ஆனந்த் அஹுஜவுக்கும் திருமணம் நடந்தது.
கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். ஸ்ரீதேவியின் இறப்பிற்கு பிறகு இவர்களது திருமணம் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த வாரம் மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியில் இருக்கும் கபூர் பங்களாவில் மராத்திய முறைப்படி பிரம்மாண்டமாக திருமணம் நடைப்பெற்றது. திருமணம் நடந்து முடிந்த கையோடு சோனம் கபூர் பிரான்ஸில் நடைபெறும் கேன்ஸ் படவிழாவில் கலந்துக் கொள்ள சென்று விட்டார்.
இவர்களின், தேனிலவு பயணம் கூட சோனம் கபூர் கேன்ஸ் படவிழாவில் கலந்துக் கொண்டு வந்த பின்னரே திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தான் பிரான்ஸில் நடைப்பெற்ற 71 ஆவது கேன்ஸ் படவிழாவில் நடிகை சோனம் கபூர் கலந்துக் கொண்டார். ரெட் கார்பெட்டில் இவர் அணிந்திருந்த ஆடை தொடங்கி, பார்ட்டி ட்ரெஸ் என அனைத்திலும் சோனம் கபூர் வித்யாசமாக தோன்றினார்.
ஐஸ்வர்யா ராய், மல்லிகா ஷெரவாத் , தீபிகா படுகோனே என பிரபல பாலிவுட் நடிகைகள் கலந்துக் கொண்ட இந்த விழாவில் நடிகை சோனம் கபூர் தனது கணவர் ஆனந்த் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.
இரண்டு தினங்களுக்கு முன்பு, சோனம் கபூர் தன்னுடைய டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோனம் என்ற பெயருடன் அஹுஜா என்ற பெயரை இணைத்துக் கொண்டு சோனம் அஹுஜா என்று மாற்றிக் கொண்டார். அவரின் இந்த பெயர் மாற்றம் பல்வேறு விவாதங்களை எற்படுத்தி இருந்தது.
காரணம், திருமணத்திற்கு பிறகு பெண்கள் தன் கணவனின் குடும்பப் பெயரை எடுத்துக் கொள்ள வேண்டுமா? அல்லது தன் தந்தையின் குடும்பப் பெயரிலேயே நீடிக்க வேண்டுமா? என்ற காரசாரமான விவாதம் அரங்கேறியது.
இதற்கு, பல முன்னணி நடிகைகளும் தங்களின் கருத்தினை பதிவு செய்திருந்தனர். இதற்கு தான் சோனம் கேன்ஸ் படவிழாவில் பதில் அளிக்கும் விதமாக பேசியுள்ளார். சோனம் கூறியதாவது, “ நான் பெண்ணியம் பேசும் பெண் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். கல்யாணத்திற்கு பிறகு நான் யாருடைய பெயரை என் பின்னாடி சேர்க்க வேண்டும் என்பது எனக்கு தெரியும். ஏன் என் கணவர் ஆன்ந்த் கூட தான் எங்கள் குடும்ப பெயரை அவரின் பெயருக்கு பின்னால் இணைத்துக் கொண்டுள்ளார். ஆனால், அதைப்பற்றி யாருமே பேசவில்லை ஏன்?
நான் என்ன செய்கிறேன். என்ன செய்துக் கொண்டிருக்கிறேன் என்பது எனக்கு நன்கு தெரியும். யாருடைய ஆலோசனை படியும் நடக்கவில்லை. 32 வயதாகும் எனக்கு யாருடைய பெயரை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது நன்கு தெரியும். ஒரு பெண்ணின் வாழ்க்கையில் தந்தை மற்றும் பிறந்த குடும்பம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு திருமணம் ஆன பிறகு அவரின் கணவரின் குடும்பமும் முக்கியம் தான்.
பெண்ணியம் பேசும் பெண், திருமண பந்தத்தில் இணைந்தால் அதில் எந்த மாதிரியான பிரச்சனைகளை அவள் சந்திக்க நேரிடும் என்பதும் எனக்கு தெரியும். என் கணவர் ஆனந்த் என்னை நன்கு புரிந்து வைத்திருப்பவர். இன்னும் கொஞ்ச நாட்களில் நாங்கள் லண்டனில் குடியேற உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
சோனம்மின் இந்த பேச்சு பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளது. சிறு வயதில் இருந்தே நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்ட சோனம் கபூர் தனது தன்னம்பிக்கை மற்றும் விடா முயற்சியில் இன்று ஆரோக்கியமாக வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.