தென் மாவட்ட ரயில்களின் கால அட்டவணை இன்று (ஜன 1) முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக மதுரை கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுவரை கொரோனா நோய் தொற்றுக்கு பிறகு சிறு நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வந்த குறைந்த தூர ரயில்கள், சிறப்பு ரயில்களாக இயங்கின. இந்த ரயில்கள் அனைத்தும் வழக்கமான சேவை ரயில்களாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பல்வேறு ரயில்களின் நேரமும் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
அதனடிப்படையில், மதுரை - திருவனந்தபுரம் அமிர்தா விரைவு ரயில் (16344) மதுரையில் இருந்து மாலை 4.10 மணிக்கு பதிலாக மாலை 3.45 மணிக்கும், தஞ்சாவூர் வழியாக இயக்கப்படும் மதுரை - சென்னை மும்முறை சேவை விரைவு ரயில் (22624) மதுரையில் இருந்து இரவு 8.50 மணிக்கு பதிலாக இரவு 8.45 மணிக்கும் புறப்படும். மேலும், மதுரை - புனலூர் விரைவு ரயில் (16729) மதுரையில் இருந்து இரவு 11.25 மணிக்கு பதிலாக இரவு 11.20 மணிக்கும் புறப்படும்.
மேலும், நெல்லை - செங்கோட்டை ரயில் (56741) நெல்லையில் இருந்து காலை 7 மணிக்கு பதிலாக காலை 6.50 மணிக்கும், நெல்லை - நாகர்கோவில் ரயில் (56708) திருநெல்வேலியில் இருந்து காலை 7.10 மணிக்கு பதிலாக காலை 7.05 மணிக்கும் புறப்படும். நெல்லை - திருச்செந்தூர் ரயில் (56727) நெல்லையில் இருந்து காலை 7.25 மணிக்கு பதிலாக காலை 7.15 மணிக்கும், நெல்லை - செங்கோட்டை ரயில் (56743) நெல்லையில் இருந்து மதியம் 1.50 மணிக்கு பதிலாக மதியம் 1.45 மணிக்கும் புறப்படும்.
செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில் (16848) செங்கோட்டையிலிருந்து காலை 7.05 மணிக்கு பதிலாக காலை 6.55 மணிக்கும், செங்கோட்டை - நெல்லை ரயில் (56738) செங்கோட்டையில் இருந்து மதியம் 2.35 மணிக்கு பதிலாக மதியம் 2.05 மணிக்கும் புறப்படும். தூத்துக்குடி - நெல்லை ரயில் (56721) தூத்துக்குடியில் இருந்து மாலை 6.25 மணிக்கு பதிலாக மாலை 6.15 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் - நெல்லை ரயில் (56728) திருச்செந்தூரிலிருந்து காலை 7.20 மணிக்கு பதிலாக காலை 7.10 மணிக்கு புறப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மணியாச்சி - தூத்துக்குடி ரயில் (56726) மணியாச்சியிலிருந்து மாலை 03.10 மணிக்கு பதிலாக மாலை 3 மணிக்கும், மணியாச்சி - திருச்செந்தூர் ரயில் (56731) மணியாச்சியிலிருந்து காலை 11.05 மணிக்கு பதிலாக காலை 11 மணிக்கும், மணியாச்சி - தூத்துக்குடி ரயில் (56724) மணியாச்சியிலிருந்து இரவு 8.25 மணிக்கு பதிலாக இரவு 8.15 மணிக்கும் புறப்படும். காரைக்குடி - திருச்சி ரயில் (56816) காரைக்குடியில் இருந்து மாலை 3.30 மணிக்கு பதிலாக மாலை 3.15 மணிக்கு புறப்படும்.
இதன்படி, வழக்கமான நேரத்துக்கு முன்னதாக புறப்படும் ரயில்களின் விபரம் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், சில ரயில்கள் வழக்கமான நேரத்துக்கு பிறகு புறப்படும் படியாகவும் கால அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, 57 விரைவு ரயில்களின் பயண நேரம் 5 நிமிடம் முதல் 30 நிமிடம் வரையிலும் குறைக்கப்பட்டுள்ளது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செய்தி - க. சண்முகவடிவேல்