விவசாய தொழில் மற்றும் பண்ணை தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் பிரதான தொழிலாக கோழி வளர்ப்பு இருக்கும். இவை அவர்களின் வாழ்வாதாரத்தின் பெரும்பங்காக விளங்குகிறது. அந்த வகையில், கோழிகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்காக இயற்கையாக உருவாக்கப்படும் தீவனம் குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
அதன்படி, 100 கிராம் அளவிலான கடலை புண்ணாக்கை, சாதம் வடித்த தண்ணீரில் ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின்னர், ஒரு படி கோதுமை தவிடு மற்றும் அரைப்படி அரிசி தவிடு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை இரண்டையும் கடலை புண்ணாக்கு கலவையுடன் சேர்த்து நன்றாக கலந்து கோழிக் குஞ்சுகளுக்கு கொடுத்தால், அவற்றின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். பிறந்து 10 நாள்களைக் கடந்த கோழிகளுக்கு இவற்றை கொடுக்கலாம்.
காலை நேரத்தில் கோழிகளுக்கு வழக்கமாக கம்பு, கேழ்வரகு, மக்காச்சோளம் போன்றவற்றை கொடுப்போம். அந்த வகையில் இந்த கடலை புண்ணாக்கு தீவனத்தை மாலை நேரத்தில் கொடுக்க வேண்டும். இவ்வாறு மாலை நேரத்தில் கொடுப்பதன் மூலம் கோழிகளின் செரிமானத்திற்கு எளிதாக இருக்கும்.
மேய்ச்சல் முறையில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு இந்த தீவனத்தை தினசரி கொடுக்கலாம். கூண்டு முறையில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு இந்த தீவனத்தை ஒரு நாள் விட்டு ஒரு நாள் கொடுக்க வேண்டும். இத்தீவனத்தில் கொழுப்புச் சத்து அதிகம் காணப்படுகிறது. இதனால், கூண்டு முறையில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு இதனை தினசரி கொடுத்தால் முட்டையிடுவதில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தொடர்ச்சியாக இந்த தீவனம் கொடுக்கப்படுவதன் மூலம் இயற்கை முறையில் கோழிகளை ஆரோக்கியமாக வளர்க்க முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“