/indian-express-tamil/media/media_files/2025/06/02/cZKoohn0VagDw1DgAlBN.jpg)
நாய்களுக்கான சிறப்பு வாக்கத்தான் நிகழ்ச்சி: ஒய்யார நடைபோட்ட செல்லப்பிராணிகள்!
ஆதரவின்றி தெருவில் சுற்றித்தெரியும் நாய்களை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை அடுத்த வானகரம் பகுதியில் பல்வேறு வகைகளைச் சேர்ந்த 100 நாய்கள் பங்கேற்ற வாக்கத்தான் போட்டி உற்சாகமாக நடைபெற்றது.
செல்லப்பிராணி வளர்ப்பு, தெருநாய் நலனை ஊக்குவிக்கும் வகையில் சென்னையில் முதன் முறையாக தனித்துவமான விழிப்புணர்வு நிகழ்ச்சியாக Wag & Walk Dog என்ற பெயரில் நாய் நடைப்பயண நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை வானகரம் வேதாந்தா அகாடமி சி.பி.எஸ்.இ. பள்ளியில் நடைபெற்ற, வாக் அண்ட் வாக்-டாக் வாக்கத்தான் நிகழ்வை, PEPHANDS அறக்கட்டளை என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
இதில் வெளிநாட்டு ரக நாய்களான லேப்ரோடாக், புல்லிகுட்டான், ஷிட்ஷூ, பாக்சர், கோல்டன் ரிட்ரீவர், பாடுல் மற்றும் இந்திய ரகத்தை சேர்ந்த சிப்பிபாரை, கன்னி, ராஜபாளையம் உள்ளிட்ட நூறுக்கும் மேற்பட்ட நாய்களுடன் செல்லப்பிராணி உரிமையாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் பங்கேற்றிருந்தனர்.
தெருவில் ஆதரவின்றி விடப்படும் வளர்ப்பு நாய்கள் மற்றும் தெரு நாய்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த வாக்கத்தான் போட்டி நடத்தப்பட்டது. இந்த நாய்கள் வாக்கத்தான் லயனஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. நிகழ்ச்சியின் போது நாய்கள் டீ-சர்ட், பேண்ட், தொப்பி உள்ளிட்ட பல்வேறு வகையான வண்ண உடைகளை அணிந்து போட்டியில் பங்கேற்றன.
கண்ணு குட்டி போன்ற பெரிய நாய்களும், பூனை குட்டி போன்ற சிறிய நாய்களும் என பல்வேறு விதமான நாய்கள் கலந்து கொண்டன. ஏஞ்சல் உடை, மணமகள் உடை என வலம்வந்த நாய் குட்டிகள் காண்போரை கவர்ந்தன. இதுதவிர ஆதரவற்ற நாய்கள் பல அழைத்துவரப்பட்டு அதனை நாய் பிரியர்கள் பலரும் தத்தெடுத்துச் சென்றனர். இதேபோன்று, பூனைகளும் கொண்டுவரப்பட்டு அவைகளும் தத்தெடுத்து செல்லப்பட்டன. பின்னர், போட்டியில் வெற்றி பெற்ற நாய்களுக்கு சான்றிதழ்களும், உலக சாதனைக்கான சான்றிதழும் வழங்கப்பட்டன.
பொறுப்பான செல்லப்பிராணி உரிமை மற்றும் பராமரிப்பை ஊக்குவிக்கவும் தெருநாய்கள் மற்றும் கைவிடப்பட்ட நாய்களின் நலன் மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், சமூகங்களில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே கனிவான பிணைப்பை வளர்ப்பதும் இந்த நிகழ்வின் நோக்கம் என இந்த நிகழ்விற்கான ஏற்பாடு செய்த PEPHANDS அறக்கட்டளையின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.