பெற்றோர்கள் புகை பிடிப்பதனால் குழந்தைகளுக்கு புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என புற்றுநோய் சிகிச்சையின் ஆராய்ச்சி மருத்துவர் குகன் தெரிவித்துள்ளார்.
கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இந்தியாவில் முதல்முறையாக புகைப்பிடிப்பதை கைவிடுவதற்கான வழிகாட்டுதல்கள் அடங்கிய டிஜிட்டல் ஆடியோ கலந்துரையாடல் ஆலோசனை தொகுப்பு அறிமுகம் செய்யப்பட்டது.
அறிமுக விழாவில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி கலந்து கொண்டு இதை அறிமுகம் செய்தார். இதன் மூலம் புகையிலை மற்றும் புகை பிடிப்பதற்கு அடிமையாகிய நபர்கள் விழிப்புணர்வுடன் இலவச ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புற்றுநோய் சிகிச்சையின் ஆராய்ச்சி மருத்துவர் குகன்: ”புகையிலை பழக்கம் உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
குறிப்பாக புற்றுநோய் வருவதற்கு முன்பு தடுக்க வேண்டும்.
பெற்றோர்கள் புகை பிடிப்பதால் குழந்தைகளுக்கு புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆண்டுதோறும் புகைப்பிடிப்பவர்கள் அதிகமாகி வருகின்றனர். 30 சதவீதம் பேருக்கு புகையிலைனால் புற்றுநோய் வருவதுடன் மாரடைப்பும் ஏற்படுகிறது. இந்தியாவில் 8 முதல் 9 லட்சம் பேர் புகையிலைனால் இறக்கின்றனர்.
எனவே மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, மருத்துவர் குகன் தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“