/indian-express-tamil/media/media_files/2025/04/26/IW8FVi0SqPiYttRzdjyU.jpg)
ஸ்ரீரங்கம் சித்திரை தேர் திருவிழா: விண் அதிர கோவிந்தா கோஷம்; உற்சாக வெள்ளத்தில் பக்தர்கள்
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு சித்திரை பெருவிழா கடந்த 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் உற்சவத்தில் தினந்தோறும் நம்பெருமாள் தங்கக் கருட வாகனம், யாளி வாகனம், யானை வாகனம், தங்கக்குதிரை வாகனம், பூந்தேர், கற்பக விருட்ச வாகனம் என்று பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சித்திரை திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரைத் தேரோட்டம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த கிளிமாலை, பட்டு வஸ்திரங்கள் அணிந்து அலங்காரத்துடன் நம்பெருமாள் அதிகாலை மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு கண்டருளினார்.
அலங்கரிக்கப்பட்ட சித்திரைத் தேர் தட்டில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 6.15 மணிக்கு பக்தர்களின் "ரெங்கா... ரெங்கா.. கோவிந்தா.. கோவிந்தா..." என்ற கோஷங்கள் விண்ணதிர தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. பக்தர்கள் வெள்ளத்தில் அழகாக ஆடி அசைந்தபடி, 4 சித்திரை வீதிகளில் வலம் வந்த தேர், காலை 10 மணிக்கு நிலையை வந்தடைந்ததும், வடம்பிடித்த பக்தர்கள் ஆரவாரத்துடன் கைதட்டி கோவிந்தா கோவிந்தா ரங்கா ரங்கா என்ற கோஷம் விண்ணதிர பக்தி பரவசத்துடன் ஆரவாரம் செய்தனர்.
திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான கிராம மக்கள் இந்த விழாவில் பங்கேற்றனர். தேரோடிய வீதிகளிலும், நிலைக்கு வந்த தேருக்கு முன்னரும் பெருந்திரளானோர் தீபம் ஏற்றி, தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர்.
திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் காமினி தலைமையில், 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் சிவராம் குமார் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவை முன்னிட்டு பல மாவட்டங்களில் இருந்து திருச்சி வந்த பக்தர்கள் தேரோட்டம் முடிந்ததும் அருகில் உள்ள பல்வேறு சுற்றுலா ஸ்தலங்களுக்கும் சென்றதால் திருச்சி மாநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.