அம்மாமண்டபத்தில் ஆயிரக்கணக்கானோர் முன்னோர்க்கு திதி கொடுத்து வழிபாடு. இந்து மதத்தில் மகாளயபட்சம் என்னும் பித்ருபக்ஷம் அதி முக்கியத்துவம் வாய்ந்தது. மகாளய பட்சம் அல்லது மகாளய அமாவாசை என்பது புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, புரட்டாசி மாதம் அமாவாசை வரை நீடிக்கும் 14 நாட்கள் மகாளயபட்ச காலமாகும். இந்த ஆண்டின் மகாளய பட்சம் காலம் செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 25-ம் தேதி இன்று வரை நீடிக்கிறது. புரட்டாசியில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும்.
பட்சம் என்றால் பதினைந்து நாட்கள். மறைந்த நம் முன்னோர் பித்ரு லோகத்திலிருந்து இந்த பதினைந்து நாட்கள் நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம் ஆகும். பித்துரு வழிபாடு இல்லற வாழ்க்கைக்கு பித்ருக்களின் ஆசியும், ஆசீர்வாதங்களும் கிடைக்கப்பெற்று சிறப்பளிக்கின்றன என்பது ஐதீகம்.
பித்ருக்களை நாம் அவமதித்தால் அல்லது அவர்களை உதாசீனம் செய்தால் அவர்கள் நம்மை சபித்து விடுவார்கள் என்பதும், அதனால் நாம் குடும்ப வாழ்கையில் பல துன்பங்களை அனுபவிக்க நேரிடும் என்பதும் இந்துகளின் ஐதீகமாக கூறப்படுகிறது.
தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட திதி கொடுப்பதற்கு மிகவும் சிறந்தது மகாளய அமாவாசை. வருடத்தில் மற்ற மாதங்களில் வரும் அமாவாசையன்று முன்னோரை நினைத்து வழிபாடு செய்வோம்.
ஆனால், மகாளய பட்ச காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை உள்ள காலத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டும். அனைத்து முன்னோர்களையும் அப்போது நினைவு கூற வேண்டும். புனித நீர் நிலைகளுக்கு சென்று புனித நீராடி, நம் முன்னோர் ஆத்மசாந்திக்காக பிரார்த்தித்து தர்ப்பணம் செய்வது நல்லது.

நமது வாழ்வில் வரும் இன்ப துன்பங்கள் யாவும் நாம் எமது முற்பிறப்பில் செய்த பாவ புண்ணியத்துக்கு ஏற்ப அமையப்பெறுகிறது. அதிலே பிதுர் காரியமும் ஒன்றாகும். அதனை நாம் சிரமமாக பார்க்காமல் சிரத்தையுடன் செய்ய வேண்டும். அது தவறின் பிதுர்களின் கோபத்துக்கு ஆளாவோம் என ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது.
மகாளய பட்சம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது என்பது பழமொழி. வசிஷ்ட மகரிஷி, தசரதர், துஷ்யந்தன், நளன், அரிச்சந்திரன், பகவான் ராமர், தர்மர் ஆகியோர் மஹாளயம் செய்து பெரும் பேறு பெற்றனர் என்கின்றன புராணங்கள்.
அதன்படி இன்று நீர்நிலைகளில் மகாளய அமாவாசையை முன்னிட்டு தத்தம் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வருகின்றனர் பொதுமக்கள்.

அந்தவகையில், திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் இன்று அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் காவிரியில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தும், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தும் வழிபாடுகளை நடத்தி வருகின்றனர். அம்மா மண்டபம் பகுதி முழுவதும் காவல்துறையினரின் தீவிர கண்காணிப்பில் உள்ளது. காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் 100-க்கனக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுழுலும் கண்காணிப்பு கேமராக்கள் ஒரு புறமும், மப்டியில் போலீஸாரும் பொதுமக்களோடு பொதுமக்களாய் கலந்து பாதுகாப்பினை பலப்படுத்தியிருக்கின்றனர்.

காவிரியில் நீரின் வேகம் அதிகரித்திருப்பதால் தீயணைப்புத்துறையினரும் ஆற்றில் இறங்கி பொதுமக்களுக்கு அறனாக இருந்தும், பொதுமக்களை கரையிலேயே குளித்து செல்லும்படி அறிவுறுத்தியும் வருகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் பொதுமக்கள் திரள தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதாலும், மகாளயபட்சம் என்பதாலும், முதியோர் முதல் சிறுவர்கள் வரை தத்தம் உறவினர்களுடன் வந்திருந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.
அதேபோல், டெல்டா மாவட்ட மக்களின் பிரசித்தி பெற்ற திருவையாறு பஞ்சநதிக்கரை காவிரியில் புனித நீராடி ஐயாரப்பரை வழிபட்டு வருகின்றனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்.