2025ம் ஆண்டின் முதல் நாளான இன்று இந்த ஆண்டு சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக நாடு முழுவதிலும் மக்கள் கோயில்கள், தேவாலயங்களுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில், மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோயில், ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயில், வயலூர் முருகன் கோயில், வெக்காளியம்மன் கோயில், கண்ட்டோன்மென்ட் ஐயப்பன் கோயில் உள்ளிட்ட திருக்கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று அதிகாலையிலேயே சென்று வழிபட்டு வருகின்றனர்.
மேலும், அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா எனப்படும் திருவத்யயன உற்சவம் நடைபெற்று வருவதால் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.
"குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுது துயராயனவெல்லாம் நிலந்தரஞ் செய்யும், நீள்வி சிம்பருளும் அருளோடு பெருநிலமளிக்கும், வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயினசெய்யும் நலந் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணாவெனும் நாமம்" என்று திருமங்கையாழ்வார் பாடிப் பரவசப்பட்ட அந்த திருமால் உறையும் தலைமை திவ்ய தேசமாம் திருவரங்கத்திலே நடந்து வரும் பெரிய திருவிழாவாம் வைகுண்ட ஏகாதசி விழா எனப்படும்.
திருவத்யயன உற்சவத்தின் பகல்பத்து இரண்டாம் திருநாளான இன்று காலை உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து முத்து சாய்வுக் கொண்டை, கஸ்தூரி திலகம், நவரத்தின காதுக் காப்புகள் மார்பிலே பூஜ கீர்த்தி கவசங்கள், மகாலட்சுமி பதக்கம், ரத்தின அபய ஹஸ்தம், முத்து பவளமணி மாலைகள், காலிலே தங்கத் தண்டைக் கொலுசு காப்புகள் உள்ளிட்ட சிறப்பு கிருவாபரணங்கள் அணிந்து கோயில் அர்ஜுன மண்டபத்திலே ஆஸ்தானமி ருந்து, அரையர்கள் அபிநயத்தோடு இசைக்கும் திவ்யபிரபந்தத்தின் தீந்தமிழ் திருமொழிப் பாசுரங்களைக் கேட்டவாறு அர்ஜுனமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குசேவை சாதித்து வருகிறார்.
அர்ஜுனா மண்டபத்தில் இருந்து இரவு 7:30க்கு புறப்பட்டு 9:45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
புத்தாண்டு பிறப்பு மற்றும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோயிலில் திருச்சி மட்டுமல்லாது பிற மாவட்ட மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“