108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழா நடைபெற்று வருகிறது.
பகல் பத்து, இராப்பத்து என 21 நாட்கள் நடைபெறும் இந்தப் பெருவிழாவில், தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்கள், அண்டை நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கத்தில் குவிவர்.
வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் முக்கிய திருவிழாவான சொர்க்கவாசல் திறப்பு வரும் பத்தாம் தேதி அதிகாலை நடைபெறவிருக்கின்றது. இதனால் முன்கூட்டியே திரளான பக்தர்கள் ஆங்காங்கே வாடகைக்கு வீடுகள் எடுத்தும் தனியார் ஹோட்டல்களில் தங்கியும் அரங்கனை வழிபட்டு வருகின்றனர்.
இதனால் தினம்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் ரெங்கா ரெங்கா கோபுர வாசலில் இருந்து கால்கடுக்க பல மணி நேரம் காத்திருந்து ரங்கநாதரை வழிபட்டு வருகின்றனர்.
ரங்கநாதரை தரிசிக்க வரும் பக்தர்கள் விரைந்து சுவாமியை வழிபடவும் கூட்டத்தை கட்டுப்படுத்தவும் கோவில் நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், கூட்டத்தைக் கட்டுப்படுத்த ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மற்றும் உப கோவில்களுக்கு காவலாளிகளை கோவில் நிர்வாகம் பணியமர்த்தியுள்ளது.
அப்படி அமர்த்தப்படும் காவலாளிகளில் சிலர் கோவில் தங்களுக்கு தான் சொந்தம் என்பது போல் பக்தர்களை முரட்டுத்தனமாக தள்ளுவதும், கேவலமாக பேசுவதும் தினம்தோறும் ஸ்ரீரங்கம் கோவிலில் அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது.
அந்த வகையில் கோவிலின் மூலஸ்தானத்தில் காவலாளியாக பணியாற்றும் சேகர் என்பவர் தன்னிச்சையாக பக்தர்களை தடுப்பதும், தள்ளி விடுவதும், தரக்குறைவான வார்த்தைகளில் பேசுவதும் போன்ற செயல்களில் ஈடுபடுவதால் பக்தர்கள் முகம் சுழிக்கும் வண்ணம் உள்ளதாக கூறப்படுகிறது.
அதே நேரம், பலரிடம் பணம் வாங்கிகொண்டு பணக்கார பக்தர்களை ஸ்பெஷல் தரிசனத்திற்கு அனுப்பி வைப்பதாகவும் சாதாரண காவலாளியான சேகர், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட யாவருக்கும் பயப்படாமல், ஶ்ரீரங்கம் கோவிலின் மூலஸ்தானத்தை பொறுத்தவரை நான்தான் எல்லாம் என்கிற ரீதியில் செயல்படுவதாக சக காவலாளிகளும், விபரம் அறிந்த உள்ளூர் பக்தர்களும் கூறுகின்றனர்.
எனவே, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இதுகுறித்து விசாரித்து காவலாளி சேகரை கோவிலின் மூலஸ்தான பணியில் இருந்து விடுவித்து, அவருக்கு பொதுமக்கள் அணுக இயலாத மாற்றுப்பணி வழங்கிடவேண்டும் என்ற கோரிக்கை உள்ளூர் பக்தர்கள் சார்பில் வலுத்து வருகிறது.
மேலும், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் வரக்கூடிய ரங்கநாதர் கோவிலில் இப்படியாக பணியமர்த்தப்பட்ட காவலாளிகளில் பலரும் தான்தோன்றித்தனமாக செயல்படுவது வேதனை அளிப்பதாக பொதுமக்கள் புலம்புகின்றனர்.
முன்னதாக, கடந்த ஆண்டும் இதேபோல் வைகுந்த ஏகாதசி திருவிழாவின்போது ரெங்கநாதரை தரிசிக்க வந்த ஐயப்ப பக்தர் ஒருவரை கோவில் காவலாளிகள் மூலஸ்தானத்தில் முட்டி தள்ளியதால் ரத்தம் சொட்ட சொட்ட கீழே விழுந்து கதறியதால் நடை அடைக்கப்பட்டது.
இதனை அடுத்து திரளான ஐயப்ப பக்தர்கள் மூலஸ்தானத்தில் போராட்டம் நடத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அங்கு வந்த உதவி ஆணையர் பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி காவலாளியை வேறு இடத்திற்கு மாற்றியது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.