/indian-express-tamil/media/media_files/2025/01/03/MAjsjMtjjsjLYqOYoPcX.jpg)
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நடந்து வருகிறது. பகல்பத்து உற்சவத்தின் 4ம் நாளான இன்று (03.01.2025) காலை ஸ்ரீ நம்பெருமாள், செந்தூர நிற பட்டு உடுத்தி, முத்தரசன் கொரடு என்னும் திருநாரணன் முத்துக் கொண்டை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மேலும், நெற்றி மேல் சூர்ய வில்லை சாற்றி (சூர்ய குல திலகம் என இராமரை பாடிய ஆழ்வாருக்காக), சின்ன கல் ரத்தின அபய ஹஸ்தம், திரு மார்பில் பங்குனி உத்திர பதக்கம், அதற்கு மேல் ஸ்ரீ ரங்க நாச்சியார் - அழகிய மணவாளன் பதக்கம்; அடுக்கு பதக்கங்கள், நெல்லிக்காய் மாலை, பவழ மாலை , 6வட முத்து சரம், காசு மாலை இடம்பெற்றிருந்தது.
பின்புறம் - புஜ கீர்த்தி, சிகப்புக்கல் சூர்ய பதக்கம்; கையில் தாயத்து சரங்கள்; தங்க தண்டைகள் திருவடியில் அணிந்து மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி அர்ச்சுன மண்டபத்திற்கு வருகை தந்தார்.
இன்று காலை 6.30 மணி அளவில் மூலஸ்தானத்தில் இருந்து எழுந்தருளிய உற்சவர் ஸ்ரீ நம்பெருமாள் ஏழு மணி அளவில் பீபி நாச்சியார் சன்னதியில் எழுந்தருளி கட்டியம் வாசித்தல் கண்டருளினார். பின்னர் அர்ஜுன மண்டபத்தில் பொதுமக்களுக்கு சேவை சாதித்து வருகிறார். மாலை 7.30 மணி அளவில் நம் பெருமான் அர்ஜுன மண்டபத்திலிருந்து புறப்பாடாகி 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.