ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து 7ம் நாளான இன்று அரைக்கொண்டை அலங்காரத்தில் ஶ்ரீநம்பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் நடந்து வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல்பத்து உற்சவத்தின் 7ம் நாளான இன்று (06.01.2025) காலை, திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழி பிரபந்திற்காக நம்பெருமாள் எழுந்தருளினார்.
நம்பெருமாள் தங்க நிற பட்டு உடுத்தி, அரைக் கொண்டை அணிந்து, அதில் நெற்றி சுட்டிப்பூ சாற்றி, கர்ண பத்திரம், ரத்தின அபய ஹஸ்தம், திரு மார்பில் சிகப்புக் கல் சூர்ய பதக்கம், அதன் மேல் மகரி, சிகப்புக் கல் அடுக்கு பதக்கங்கள், நெல்லிக்காய் மாலை, 2 வட முத்து சரம், தங்க பூண் பவழ மாலை, பஞ்சாயுத ஹாரம் அணிந்து, பின்புறம் - புஜ கீர்த்தி, அண்ட பேரண்ட பக்ஷி பதக்கம், கையில் தாயத்து சரங்கள், தங்க தண்டைகள் திருவடியில் அணிந்து இருந்தார்.
காலை ஆறு முப்பது மணி அளவில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார். கோவில் பிரகாரம் எங்கிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“