/indian-express-tamil/media/media_files/2025/01/17/FNDKfBmUL70XGf99bvWE.jpg)
உற்சவர் நம்பெருமாள் சந்தனு மண்டபத்திலிருந்து மாலை 5 மணிக்கு தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பட்டு, ஆரியபடாள் வாயில் வழியாக கோயிலின் 4-ம் பிரகாரத்தில் உள்ள மணல் வெளிக்கு வந்தார்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா ராப்பத்து உற்சவத்தின் 8-ம் திருநாளான இன்று மாலை திருமங்கை மன்னன் வேடுபறி உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
உற்சவர் நம்பெருமாள் சந்தனு மண்டபத்திலிருந்து மாலை 5 மணிக்கு தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பட்டு, ஆரியபடாள் வாயில் வழியாக கோயிலின் 4-ம் பிரகாரத்தில் உள்ள மணல் வெளிக்கு வந்தார். அங்கு ஓடியாடி வையாளி கண்டருளினார். இதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 7.30 மணியளவில் திருமாமணி ஆஸ்தான மண்டபத்தை அடைந்து பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார் ஶ்ரீநம்பெருமாள்.
முன்னதாக, திருமாலுக்குத் தொண்டு செய்தே தனது செல்வங்களை எல்லாம் இழந்தவன் திருமங்கை மன்னன். அந்தளவிற்குப் பெருமாளின் மீது அளவு கடந்த பக்தி கொண்ட திருமங்கை மன்னன், தனது பெருமாள் கைங்கர்யம் தொடர, வழிப்பறியில் ஈடுபட்டார்.
அப்படி ஒருநாள் திருமங்கை மன்னன் வழிப்பறியில் ஈடுபட்டபோது, பெருமாளே நேரில் தோன்றி சிறிதுநேரம் விளையாட்டுக் காட்டிவிட்டு அவரது காதில் 'ஓம்நமோ நாராயணாய' எனும் மந்திரத்தைச் சொல்லிய நிகழ்வு வேடுபறி வைபவத்தின் ஒருபகுதியாக பக்தர்கள் முன்னிலையில் நடத்திக் காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.