ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து 10 ஆம் நாளான இன்று நம்பெருமாள் நாச்சியார் கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் ரத்தினக்கிளி, தலையில் நாகாபரணம், பவளமாலை, அடுக்கு பதக்கம், ஏலக்காய் ஜடை தரித்து எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக சொர்க்கம் என பக்தர்களால் அழைக்கப்படுவதுமான, திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா , திருநெடுந்தாண்டகத்துடன் கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி துவங்கியது. பகல் 10, இராப்பத்து என 21 நாட்கள் நடைபெறும் விழாவின் ஒவ்வொரு நாளும் பல்வேறு ஆபரணங்களில் உற்சவர் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி அர்ஜுன மண்டபம் சென்றடைந்து பொதுமக்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.
பகல் பத்து 10 ஆம் நாள் இன்று காலை, நம்பெருமாள் நாச்சியார் கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் ரத்தினக்கிளி, தலையில் நாகாபரணம், பவளமாலை, அடுக்கு பதக்கம், ஏலக்காய் ஜடை தரித்து மூலஸ்தானத்தில் இருந்து காலை 6:00 மணிக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். நாளை ( 10-ம் தேதி)அதிகாலை, 4:15 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து தனுர் லக்னத்தில் புறப்படும் நம்பெருமாள், சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசலை 5.15 மணிக்கு திறந்து 5:45க்கு திரு கொட்டகை பிரவேசம் செல்கிறார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு எனும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு அண்டை நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து சுமார் மூன்றரை லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் ஸ்ரீரங்கத்திற்கு வருவார்கள் என கருதுவதால் தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் 2000க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புக்காக ஸ்ரீரங்கத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்