Advertisment

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி: ரத்தின அங்கி, கிளி மாலையுடன் ரங்கா ரங்கா கோஷம்... விண்ணதிர சொர்க்கவாசலை கடந்த நம்பெருமாள்!

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய உற்சவமான சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை நடைபெற்றது. அதிகாலை 2 மணி முதல் மூலவரான ரங்கநாதர், உற்சவரான நம்பெருமாளுக்கு மூலஸ்தானத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

author-image
WebDesk
New Update
srirangam vaikunta ekadasi 2025 sorgavasal thirappu Namperumal Tamil News

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

108 வைணவ திவ்ய தேசத் தலங்களில் முதன்மையான தலமாகவும், பூலோக வைகுண்டம் என்றும் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டு முழுவதும் உற்சவங்கள் நடைபெற்று வந்தாலும், திருஅத்யயன உற்சவம் என்று அழைக்கப்படும் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

Advertisment

பகல் பத்து திருமொழி திருநாள், ராப்பத்து திருவாய்மொழி திருநாள் என 21 நாட்கள் நடைபெறும் இந்த விழா கடந்த ஜன.30-ம் தேதி திருநெடுந் தாண்டகத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, பகல் பத்து திருநாள் நடைபெற்றது. அப்போது உற்சவர் நம்பெருமாள் தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

பகல் பத்து திருநாளின் 10-ம் திருநாளில் நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் (நாச்சியார் திருக்கோலம்) பக்தர்களுக்கு சேவை சாதித்தார். விழாவின் முக்கிய உற்சவமான சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை நடைபெற்றது. அதிகாலை 2 மணி முதல் மூலவரான ரங்கநாதர், உற்சவரான நம்பெருமாளுக்கு மூலஸ்தானத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 

அதிகாலை 4.15 மணியளவில் ரத்தின அங்கி, கிளி மாலை, பாண்டியன் கொண்டை ஆகிய சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி, சந்தனு மண்டபம், ராஜமகேந்திரன் திருச்சுற்று, நாழிக்கேட்டான் வாயில், தங்கக்கொடிமரம், குலசேகரன் திருச்சுற்று வழியாக விரஜா நதி மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு வேதவிற்பன்னர்கள் வேத மந்திரங்களை ஓதினர். பின்னர் அதிகாலை 5.15 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக நம்பெருமாள்  வெளியே பிரவேசித்தார். 

Advertisment
Advertisement

அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் `ரங்கா, ரங்கா' என பக்திப் பரவசத்துடன் கோஷமெழுப்பினர். சொர்க்கவாசலைக் கடந்து வந்த நம்பெருமாள் சந்திர புஷ்கரணி, ராமர் சந்நிதி, நடைப்பந்தல் வழியாக திருக்கொட்டகைக்கு வந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தவர் மணல்வெளியில் லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் ரங்கா ரங்கா கோஷம் விண்ணதிர பக்தர்கள் கடலில் நீந்தி மணல் வெளியில் பக்தி உலாத்தல் நடத்தினார்.

அங்கு நம்பெருமாளுக்கு சாதரா மரியாதை செய்யப்பட்டது. பின்னர், ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்துக்கு வந்த நம்பெருமாளுக்கு அலங்காரம், அமுது செய்யப்பட்டு, காலை 7 மணி முதல் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். மாலையில் அரையர் சேவை, இரவு திருப்பாவாடை கோஷ்டி, வெள்ளிச்சம்பா அமுது செய்தல் உள்ளிட்டவை நடைபெறுகின்றன. ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து 12:15 மணிக்கு புறப்பாடாகி வீணை வாத்தியத்துடன் நம்பெருமாள், இரவு 1.15 மணிக்கு மூலஸ்தானத்தை சென்றடைவார்.

அமைச்சர் சேகர்பாபு பேட்டி  

முன்னதாக ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற சொர்க்கவாசல் நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சேகர் ரெட்டி தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனகோடி, மாமன்ற உறுப்பினர் முத்து செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

சொர்க்கவாசல் கடந்து வந்த பிறகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,"தமிழகம் முழுவதும் வைணவ திருத்தலங்களில் இன்று பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் நிகழ்வு, முதல்வரின் அறிவுறுத்தலின்படி வருவாய் துறையினர், காவல்துறையினர் கோவில் நிர்வாகத்தினர் கள ஆய்வு செய்ததன்படி கடந்த கால நிகழ்வுகளில் ஏற்பட்ட சின்ன சின்ன இடர்பாடுகளும் சரி செய்யப்பட்டு சீரும் சிறப்புடன் சொர்க்கவாசல் நிகழ்வு நடந்தேறியது. 

இன்றைக்கு எங்கு பார்த்தாலும் கோவிந்தா கோவிந்தா கோஷம் ரங்கா ரங்கா கோஷம் விண்ணதிர இறையன்பர்கள் புண்ணியம் சேர்க்கும் வகையில் எந்தவித சிரமமும் இன்றி சொர்க்கவாசலை கடந்து வந்தனர். பரமபத வாசல் திறப்பு நிகழ்வுக்காக இந்து சமய அறநிலையத்துறை வருவாய்த்துறையினர் காவல் துறையினர் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் என அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து இறை அன்பர்களுக்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது" என்று அவர் கூறினார். 

ஸ்ரீரங்கத்தில் இன்று சொர்க்கவாசல் திறப்பு முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், இன்று அதிகாலை முதலே லட்சக்கணக்கான பொதுமக்கள் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் திரண்டு மூலவரை சொர்க்கவாசலை கடந்து உச்சவரையும் வழிபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

செய்தி: க.சண்முகவடிவேல்

 

Trichy Srirangam Ranganathaswamy Temple srirangam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment