Advertisment

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா இன்று தொடக்கம்: ஜனவரி 10-ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்பு

ஸ்ரீரங்கம் அரங்கநாத சாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா இன்று (டிச 30) மாலை கோலாகலமாக தொடங்கவுள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு வரும் ஜனவரி 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

author-image
WebDesk
New Update
Trichy srirangam temple

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக கருதப்படுவது, திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயில். இதனை பூலோக வைகுண்டம் என்றும் பக்தர்கள் அழைக்கின்றனர். 

Advertisment

இந்தக் கோயிலில், நடப்பு ஆண்டிற்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் இன்று மாலை தொடங்குகிறது. பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருவிழா நாளை (டிச 31) தொடங்குகிறது.

அன்றைய தினம் காலை 7:45 மணிக்கு, நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, காலை 8:30 மணிக்கு அர்ஜுன மண்டபம் வந்தடைவார். காலை 8:30 மணி முதல் பகல் 12:00 மணி வரை அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடுவார்கள். 

இரவு 7:00 மணிக்கு அர்ஜுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9:45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். பகல் பத்தின் முதல் நாளில் இருந்து மூலவர் ரெங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளிப்பார். இந்த முத்தங்கி சேவை தொடர்ந்து 20 நாட்களுக்கு நடைபெறும். இதே போல் பகல்பத்து திருவிழாவின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு சிறப்பு அலங்காரத்தில் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். 

Advertisment
Advertisement

பகல்பத்து உற்சவத்தின் 10-ஆம் நாளான வருகிற ஜனவரி 9-ஆம் தேதி நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளுவார். ஜனவரி 10-ஆம் தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி பெருநாளை முன்னிட்டு, அதிகாலை 4:15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, அதிகாலை 5:15 மணிக்கு பரம பதவாசல் எனப்படும் சொர்க்க வாசலில் எழுந்தருளுவார். 

அன்றைய தினம் நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அன்று இரவு 10 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும். 

பின்னர் 11-ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், 16-ஆம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

ராப்பத்து 8-ஆம் திருநாளான 17-ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்பு இல்லை. 18- ஆம் தேதி வழக்கம்போல் பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரையும், 19-ஆம் தேதி காலை 10.30 முதல் இரவு 8 மணி வரை பரமபத வாசல் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

சொர்க்கவாசல் திறப்பினை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை ஆகியோர் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.

செய்தி - க. சண்முகவடிவேல்

Hindu Temple srirangam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment