புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மாணவர் அமைப்பின் தலைவராக சென்னையைச் சேர்ந்த 20 வயது பெண் ஸ்ருதி பழனியப்பன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஸ்ருதி பழனியப்பன் :
அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகம் பற்றி தெரியாத தமிழர்களே கிடையாது. இந்த பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைகள் அமைக்க சென்னையில் இருந்து நன்கொடைகள் அளித்த தமிழர்கள் ஏராளம். ஆட்டோவை விற்று பணம் அளித்த முதியவர் தொடங்கி, பூ விற்று தம்மால் முடிந்த பணத்தை அளித்த வியாபாரிகளும் பலர்.
இந்நிலையில், இந்த ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடைப்பெற்ற மாணவர் சங்க தேர்தலில் சென்னையைச் சேர்ந்த தமிழ் பெண் ஸ்ருதி பழனியப்பன் 41.5 சதவிகித ஓட்டுகள் பெற்று வெற்றியடைந்துள்ளார். ஹார்வர்டு பல்கலைக்கழக இளங்கலை மாணவர்களின் சக்திவாய்ந்த அமைப்பாக இளங்கலை கவுன்சில் உள்ளது.
இந்த கவுன்சிலின் தலைவர் போட்டியில் நின்று ஸ்ருதி பழனியப்பன் அமோகமாக வெற்றி பெற்றதற்கு அவரின் பிரச்சாரமே காரணம் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. பிரச்சாரத்தில் ஸ்ருதி, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சொந்த வீடு போல் மாற்றுவேன் என்றும், மாணவர்களின் அனைத்து பிரச்சனைகளையும் முன்னின்று சரி செய்வேன் என்று வாக்குறுதி அளித்தார்.

ஸ்ருதியின் இந்த பேச்சு மாணவர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. அதன் காரணமாக ஸ்ருதி பழனியப்பான் தேர்தலில் அமோகமாக வெற்றி அடைந்துள்ளார். இதில் இன்னொரு கவனிக்க தக்க வேண்டிய விஷயம் என்வென்றால், ஸ்ருதியுடன் இணைந்து துணைத்தலைவர் பதிவிக்கு போட்டியிட்ட ஜூலியா ஹூசா என்ற பெண்ணும் வெற்றி பெற்றுள்ளார். மொத்தத்தில் இந்த தேர்தலில் ஸ்ருதி அணி வெற்றியில் திளைத்துள்ளது.
வெற்றிக்கு பிறகு மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ஸ்ருதி, “மாணவர்களின் கல்வியில் அக்கறைக் காட்டுவது, மனதளவில் பிரச்னைகளை எதிர்கொள்ள மாணவர்களைத் தயார் செய்வது பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் ரீதியான தொல்லைகளைத் தடுப்பது, என மாணவர்களுக்காக மனதார பணியாற்றுவேன்.
சமூகப் பிரச்னைகளுக்கு கண்டிப்பாக முக்கியத்துவம் கொடுப்பேன். என்னை நம்பி தேர்வு செய்த அனைவரும் நன்றி” என்று பேசினார்.
ஸ்ருதி பின்புலம்:
சென்னையைச் சேர்ந்த ஸ்ருதியின் பெற்றோர் 1992-ம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறியவர்கள். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ருதி மாணவர் அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அனைவரையும் பூரிக்க வைத்துள்ளது. பல்வேறு தரப்பில் இருந்தும் ஸ்ருதிக்கு பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன.