/indian-express-tamil/media/media_files/2025/06/11/LxoaG629zOKTGDu1ui5q.jpeg)
தஞ்சாவூருக்கு 2 நாட்கள் பயணமாக வருகை தரும் முதல்வர் ஸ்டாலின் கல்லணையில் தண்ணீர் திறந்து வைக்கிறார். இதனால் முதல்முறையாக கல்லணையில் தண்ணீர் திறந்து வைக்கும் முதல்வர் ஆகிறார் மு க ஸ்டாலின். இது குறித்த விபரம் வருமாறு;
தமிழக முதல்வர் தஞ்சை மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வரும் 15ம் தேதி மற்றும் 16ம் தேதி வருகை தர உள்ளார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று நலத்திட்ட உதவிகள் மற்றும் கழக நிர்வாகிகள் சந்திப்பு நடத்தி வருகிறார்.
அதன்படி வரும் 15 மற்றும் 16ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தர உள்ளார். தஞ்சை மாவட்டத்திற்கு வரும் தமிழக முதல்வரை தஞ்சை மத்திய, தெற்கு, வடக்கு மாவட்ட திமுக சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. முதல்வர் வருகையை ஒட்டி தஞ்சை மாநகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு வரும் 15ம் தேதி மதியம் திருச்சி வருகிறார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின். திருச்சி விமான நிலையத்தில் திருச்சி திமுகவினரின் வரவேற்பு பிறகு சாலை மார்க்கமாக மதியம் 2.30 மணியளவில் தஞ்சை சுற்றுலா மாளிகை செல்கிறார்.
சிறிது நேரம் ஓய்வுக்கு பிறகு, தஞ்சை கலைஞர் அறிவாலயம் அருகே உள்ள ஜெயராம் மஹாலில் மாலை 4:30 மணியளவில் கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து 5.30 மணி அளவில் ஜெயராம் மஹாலில் இருந்து ரயிலடி ஆற்றுப் பாலம் வழியாக ரோடு ஷோவாக சென்று தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் புதிதாக நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார்.
பின்பு மீண்டும் சுற்றுலா மாளிகை சென்று ஓய்வு எடுக்கிறார். பிறகு தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார். பிறகு அங்கிருந்து புறப்பட்டு 11 மணியளவில் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மன்னர் சரபோஜி கலை கல்லூரியில் பல கோடி ரூபாய் மதிப்பில் சுமார் ஒன்றரை லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்குகிறார்.
மதியம் 1:30 மணியளவில் நலத்திட்ட நிகழ்ச்சி நிறைவடைந்த பின் மீண்டும் சுற்றுலா மாளிகையை சென்று ஓய்வெடுத்து மாலை 4:30 மணியளவில் தஞ்சையில் இருந்து கார் மூலமாக புறப்பட்டு திருச்சி விமான நிலையம் சென்றடைகிறார்.
முன்னதாக, எந்த ஆண்டும் இல்லாத ஒன்றாக16ம் தேதி தஞ்சை திருச்சி மாவட்ட எல்லையில் உள்ள கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
அதற்காக தஞ்சை திருச்சி மாவட்ட காவல்துறையினர் ஒருங்கிணைப்புடன் கல்லணையில் பாதுகாப்பு பணி மற்றும் தண்ணீர் திறப்புக்கான முன்னேற்ப பணிகள் வெகு வேகமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
க. சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.