பாரத தேசம் ஆண்டாண்டுக் காலமாக அன்னியனின் பிடியில் அகப்பட்டு, சுதந்திரத்திற்காகப் தீவிரப் போராட்டம் அரங்கேறிக் கொண்டிருந்தது. அப்போதெல்லாம் சுதந்திரம் கிடைக்கும் என்பதை கனவில்கூட எண்ணிப் பார்க்க முடியாது. அந்த வேளையில் “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று” எனக் கூக்குரல் எழுப்பி வெள்ளையனைத் திக்குமுக்காடச் செய்தவன் முண்டாசுக் கவிஞன் சுப்பிரமணியப்பாரதி.
சுதந்திர வேள்விக்குப் துப்பாக்கியும் வாளும் எடுக்காமல் தன் மனதில் எழுந்த சுதந்திர வேள்வியை, எழுதுகோல் என்னும் துப்பாக்கியிலிருந்து வெளிவந்த வார்த்தைகளைத் தோட்டாக்களாக்கி வெள்ளையனின் நெஞ்சிற்கு நேராக தீப்பந்தங்களாக பாச்சியவன் இந்த எட்டையபுரத்து சிங்கக்குட்டி.
சுதந்திரம் கிடைத்து விடும் என்பது திண்ணம். அதன் பிறகு கல்வியில், கலாச்சாரத்தில், கலையில், மொழியில், பொருளாதாரத்தில், தொழில்துறையில், தொலைத்தொடர்பில் இத்தேசத்தை எப்படி, ஒன்றுபட்ட வளம் மிக்க தேசமாக மாற்ற வேண்டும் என்னும் தொலைநோக்குப் பார்வையில் திளைத்திருந்தான் அவன்.
அதனால்தான் “சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்” என்றான் முறுக்கு மீசைக்காரன். அவன் கூற்றுப்படி ஒருவன் எட்டுத்திக்கும் செல்ல வேண்டும் என்றால் அவனுக்குப் பல்மொழிப்புலமை வேண்டும் என்பதை அவன் நன்குணர்ந்திருந்தான். அதனை அவனே நிருபித்துக் காட்டினான். ஹிந்தி, சமஸ்கிருதம் உட்படக் கிட்டத்தட்டப் பன்னிரண்டு மொழிகளில் அவன் புலமை பெற்றிருந்தான் என்று இலக்கிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அதற்குச் சான்றாகத்தான் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்குங் காணோம்” என்கிறான். இத்தனை மொழிகளின் அருமைப் பெருமைகளைத் தெரிந்திருந்து, உலகிற்கு உணர்த்தியதால்தான் இன்று, பாரதியின் பிறந்த தினமான டிசம்பர்- 11 ஐ இந்த ஆண்டு முதல் தேசிய மொழிகள் தினமாக மத்திய அரசு அறிவித்து, அதற்கான அரசாணையும் வெளியிட்டுள்ளது.
மேலும் இத்தினத்தை அனைத்து மாநில அரசுகளும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் என அனைத்து இடங்களிலும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடவும் வலியுறுத்தியுள்ளது. இது பாரதிக்குக் கிடைத்திருக்கும் கௌரவமல்ல, உலகெங்கும் வாழும் தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் கிடைத்திருக்கும் கௌரவம் என்பதை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்.
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு, இன்றுள்ள அளவிற்கு தகவல் தொடர்புச் சாதனங்களின் வளர்ச்சி இருக்கும் என்பதை கற்பனையில்கூட நினைத்துப் பார்ப்பதற்கு முடியாது. என்றாலும் அந்த அக்கினிக் குஞ்சின் கனவில் இப்படியொரு எண்ணம் தோன்றி, அன்று அது கவிதையாகி… நின்று நிஜமாகியிருக்கிறது. அது “காசி நகர்ப் புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்” என்பது.
இன்று யாராலும் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்து உலகமே நம் ஒவ்வொருவரின் உள்ளம் கைக்குள் வந்துள்ளது. அதனால் மத்திய அரசாங்கம் இன்று காசியில் பாரதியாருக்கும் தமிழுக்கும் தமிழ் கலாச்சாரத்திற்கும் இருந்த உறவை நிரூபிக்கும் விதத்தில் காசி தமிழ் சங்கம் மூலம் தமிழ் கலாச்சார விழாவை நடத்தி பாரதிக்கு மகுடம் சூட்டி வருகிறது.
கட்டுரை: முனைவர் கமல. செல்வராஜ், அருமனை
பேச: 9443559841
அணுக: drkamalaru@gmail.com
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“