சன்டிவியின் தாலாட்டு சீரியலில் சிவகாமி என்ற கேரக்டரில் நடித்து வருபவர் தாரணி. சென்னையை சேர்ந்த இவர் 15வயதில் சினிமாவில் அறிமுகமானார். 1988ஆம் ஆண்டில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் உன்னால் முடியும் தம்பி. அதில் கமலின் தங்கையாக நடித்தார். தொடர்ந்து பாலைவன பறவைகள், சின்ன வாத்தியார், கிழக்கு வீதி, வைகறை பூக்கள், பெரிய மருது போன்ற ஏராளமான திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர். செந்தில், கவுண்டமணி, வடிவேலு, விவேக், சந்தானம் போன்ற முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து காமெடியில் கலக்கியவர். விஷ்ணு, பூவே உனக்காக, மிடில் கிளாஸ் மாதவன், சூர்ய வம்சம், அஜித் நடிப்பில் 1998ல் வெளிவந்த காதல் மன்னன், எதிரும் புதிரும், பிரியமான தோழி,துள்ளாத மனமும் துள்ளும், மாசிலாமணி போன்ற பல படங்களில் துணை நடிகையாக நடித்து பிரபலமாக அறியப்பட்டார்.
தாரணியின் பிரபலமான காமெடி கேரக்டர் எதிரும் புதிரும் படத்தில் கவுண்டமனியின் தங்கையாக நடித்திருந்ததுதான். அதன்பிறகு மிடில் கிளாஸ் மாதவன் படத்தில் வடிவேலுவின் மனைவியாக மாலா கேரக்டரில் நடித்திருப்பார். கிட்டதட்ட 50 திரைப்படங்களுக்கு மேல் சிறப்பு தோற்றத்தில் நடித்தவர். சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கும்போதே சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். 1997 ஆண்டு முதன் முதலில் மங்கை சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார் தாரணி. அதன்பிறகு ஷக்தி, திருவிளையாடல் புராணம், சொர்க்கம், முகூர்த்தம் என 30 மெகா சீரியல் நடித்துள்ளார்.
சூலம் என்ற தொடரில் நடித்தபோது திரைப்பட இயக்குநர் கிட்சாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சில வருடங்கள் நடிப்பில் இருந்து விலகியவர் வாணி ராணி சீரியல் மூலம் மீண்டும் என்ட்ரி ஆனார். அதன் பிறகு கல்யாண பரிசு, மோசமான வில்லியாக தலையணைப்பூக்கள் சீரியல், பாசமான அம்மாவாக பொன்மகள் வந்தாள் என தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியவர். சந்திரலேகா, அக்னி நட்சத்திரம் என பல சீரியல்களில் நடித்துள்ளார். சினிமாவை விட சீரியலில் அதிக ரீச் கிடைப்பதாக கூறுகிறார் தாரணி.
எப்போதும் தன்னை இளமையாகவும், சந்தோஷமாகவும் வைத்திருப்பதை ரொம்பவே விரும்புவாராம். இவர் நடித்த சீரியல்களியே தாரணிக்கு பிடித்தது திருவிளையாடல் புராணம் தான். இவருக்கு கஸ்டமர்ஸ் கேட்கும் டிசைனில் பொட்டிக் ஷாப் ஓபன் செய்ய வேண்டுமென்பது நீண்ட நாள் ஆசை. பாண்டி பஜாரில் ரோட் சைட் ஷாப்பிங் ரொம்ப பிடிக்குமாம். சின்னத்திரையில் 20 வருடங்களுக்கு மேல் பிசி நடிகையாக வலம் வருகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil