விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ரியாலிட்டி ஷோ, இன்று வெற்றிகரமாக அடுத்த சீசனுக்கு அடியெடுத்து வைத்திருக்கிறது. சூப்பர் சிங்கர் ஜூனியர், சீனியர் என பல சீசன்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான போட்டியாளர்கள் கலந்து கொண்டு, இசையில் தங்களின் திறமையை நிருபித்தனர்.
அப்படித்தான் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 8ல் ”உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது” பாடலை பாடி, நடுவர்கள் மட்டுமல்ல, அதை பார்த்த ரசிகர்களின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தவர் மேடை நாடகக் கலைஞர் முத்து சிற்பி. அந்த சீசனில் அவர் பாடிய ஒவ்வொரு பாடலையும் இன்றும் பலர் யூடியூபில் தேடிச் சென்று பார்க்கின்றனர். முத்து சிற்பியின் தனித்துவமான குரலுக்கு தமிழ் திரையிசையும் அங்கீகாரம் கொடுத்தது.
உலகம் முழுவதும் இன்று முத்து சிற்பியின் குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
சமீபத்தில் முத்து சிற்பி Metro Mail யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தன் வாழ்க்கை, தான் நேசித்த நாடகக் கலை, சூப்பர் சிங்கருக்கு பிறகு வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் கோதைமங்கலம் கிராமம் தான் என்னோட ஊரு. நாடகக் கலைஞன். அங்க இருந்து சூப்பர் சிங்கர் மேடை கிடைச்சது. அங்க போனதுக்கு அப்புறம் உலகம் எல்லாம் அறிமுகம் ஆயிட்டேன்.
சூப்பர் சிங்கர் அப்புறம் தான் எனக்கு வெளிநாடு வாய்ப்புகள் கிடைச்சது. முதல்ல துபாய் போனேன். அப்புறம் ஸ்ரீலங்கா. மலேஷியா, சிங்கப்பூர் எல்லாம் போயிட்டு வந்துட்டேன். இதுக்கு எல்லாம் மக்கள் தான் காரணம். நிறைய ஆதரவு கொடுக்கிறாங்க…
எங்க போனாலும் உள்ளத்தில் நல்ல உள்ளம், சங்கமம் பாட்டு பாட சொல்லி மக்கள் கேட்பாங்க.
என் குடும்பத்துல அப்பா, அம்மா, அண்ணன், நான். எனக்கு ரெண்டு பொண்ணு, அண்ணனுக்கு ரெண்டு பசங்க இருக்காங்க, நாங்க எல்லாருமே ஒரே குடும்பமா தான் இருக்கோம்.
நான் படிக்கும் போது போட்டுக்க நல்ல சட்டை கூட இருக்காது, அந்தளவுக்கு கஷ்டப்பட்டு இருக்கிறோம். அப்பா அம்மா விவசாயி தான். கஷ்டப்பட்டு எங்களை வளர்த்தாங்க.
என் மாமா அழகர்சாமி. என் அம்மாவோட தம்பி. அவரு இப்போ இல்ல, இறந்துட்டாரு. அவருதான் என்னை நாடகத்துல அறிமுகப்படுத்துனாரு.
என் அம்மாவுக்கு திருமணம் ஆகி 10 வருஷமா குழந்தை இல்ல, அப்புறம் தான் என் அண்ணன் பிறந்தாங்க, அப்புறம் நான் பிறந்தேன். அதனால என் அம்மா ரொம்ப பார்த்து சின்ன முள்ளுக் கூட குத்திரக் கூடாதுன்னு வளத்தாங்க.. இப்போவரை ரொம்ப பாசமா இருப்பாங்க.
நான் பிறந்ததுல இருந்து மூணு வருஷம் அழுதுட்டே இருந்துருக்கேன். என் அம்மா இரவு பகலா தூங்காம கஷ்டப்பட்டு தொட்டில ஆட்டுவாங்க. அவுங்க இங்க தாலாட்டு பாடுனா அடுத்த ஊருக்கு கேட்குமாம். அந்தளவுக்கு என் அம்மா கஷ்டப்பட்டு என்னை காப்பாத்தி இருக்காங்க,
அவுங்களுக்கு நன்றி சொன்னா மிகையாகாது. அம்மா அப்பாதான் எனக்கு எல்லாமே…
என் அம்மா படிக்கல, ஆனா அருமையா பாடுவாங்க, ஒரு பாட்டை கேட்ட உடனே யாரு பாடிருக்கான்னு சொல்லுவாங்க, இன்னைக்கு நான் உலகம் முழுக்க தெரியுறேனா அதுக்கு என் அம்மா பாட்டு தான் காரணம்.
நான் 8வது படிக்கும் போதே நாடகத்துக்கு போயிட்டேன். நான் முதல்ல வாங்குன சம்பளம் 70 ரூபாய். நம்ம சாப்பிட்டது நாடகக் கலை. என்னை வாழவைச்சது நாடகக் கலை.
சூப்பர் சிங்கர் போனதுக்கு அப்புறம் இப்போ நாடகக் கலையும் ரொம்ப பிரபலம் ஆகிடுச்சு, சிங்கப்பூர்ல கூட ஒரு நாடகம் பண்ணிட்டு வந்தோம். ஆஸ்திரேலியாவுல நாடகம் போட சொல்லி கேட்கிறாங்க.
சூப்பர் சிங்கர் மேடை ஒரு கோயில், இப்போ கூட அந்த செட்டுக்குள்ள போகும் போது தொட்டுக் கும்பிட்டு தான் உள்ளே போவேன். மாகாபா, பிரியங்கா, அணு மேம், உன்னி சார், கல்பனா அக்கா, பென்னி சார் எல்லாருமே நல்ல பாத்துக்கிட்டாங்க. அது ஒரு குடும்பம், அதை விட்டு வர்றதுக்கு மனசே இல்ல.. இப்படி பல விஷயங்களை முத்து சிற்பி மெட்ரோ மெயில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.
இதையும் படிக்க:
வறுமையோடு வாழ்க்கை… நாடகக் கலைஞர் முத்து சிற்பியின் வாழ்க்கையை திசை மாற்றிய விஜய் டி.வி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.