பொதுவாக பனி காலங்களில் சிலருக்கு உதடு கருத்துவிடும். அதுமட்டுமல்ல, பலருக்கும் உதட்டின் மேற்பகுதியின் நிறம் கீழ் உதட்டை விட சற்று நிறம் குறைவாக காணப்படும். இதற்கு பலரும் லிப்ஸ்டிக், லிப் கிளாஸ் செயற்கையான பொருட்களை பயன்படுத்துகின்றனர். இந்த பொருட்கள் ரசாயனங்கள் கலந்து செய்யப்படுவதால், சாப்பிடும்போது உணவுப்பொருட்களுடன் சேர்ந்து உடலுக்குள் செல்வதால் உடல் நலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன.
இதனால், கருத்த உதடுகளை கோவைப் பழம்போல சிவப்பாக மாற்றுவது எப்படி, உதடுகளை பரமாரிப்பது எப்படி என்று இங்கே பார்ப்போம்.
உருளைக்கிழங்கு சாறு உதட்டைப் பராமரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. புதியதாக இருக்கும் உருளைக்கிழங்கை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கியோ அல்லது துருவியோ சாறு எடுத்து கொள்ளுங்கள். தூய்மையான பஞ்சை உருளைக் கிழங்கு சாறில் நனைத்து உதட்டின் மீது இரவு படுக்க செல்லும் முன் தடவவும். இதை தொடர்ந்து செய்தால் ஐந்து வாரங்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
உருளைக்கிழங்கு சாற்றில் அதிக அளவு வைட்டமின்கள் ஏ, பி மற்றும் சி இருப்பதால் உதட்டின் கருமையை நீக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. உருளைக்கிழங்கு சாறு கருமையான அடர் நிறத்திற்கு சிகிச்சை அளித்து உதட்டின் நிறத்தை பாதுகாக்கிறது.
அதே போல எலுமிச்சை துண்டுகளை சர்க்கரையில் நனைத்து பயன்படுத்துவது உதட்டைப் பராமரிக்க உதவுகிறது. எலுமிச்சை பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி சர்க்கரையில் நனைக்க வேண்டும். பின் அதை உங்கள் உதட்டின் மீது மென்மையாக 5 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். இதை தொடர்ந்து செய்து வந்தால் ஒரு சில வாரங்களில் நல்ல மாற்றங்களை பெற முடியும்.
சர்க்கரை சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்ற உதவுதோடு அற்புதமான ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளதால் சிறந்த இயற்கை எக்ஸ்ஃபோலியேட்டராக அறியப்படுகிறது.
ஆரஞ்சு பழத் தோலை உலர்த்தி பொடி செய்து தயிருடன் கலந்து பயன்படுத்தினால் உதட்டில் நல்ல மாற்றங்களைக் காணலாம்.
ஆரஞ்சு பழத் தோலை நன்றாக உலர்த்தி பொடி செய்து எடுத்து கொள்ளுங்கள். இந்த பொடியை தயிருடன் சேர்த்து நன்றாக கலந்து உதட்டின் மீது தடவுங்கள். காய்ந்ததும் கழுவி விட வேண்டும். இதை வாரம் இருமுறை செய்தால், மூன்று வாரங்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு பழங்களின் தோலில் இயற்கையாகவே சருமத்தை ஒளிரச் செய்யும் பண்புகள் உள்ளன. இது உதட்டின் மேற்பகுதியின் அடர்நிறத்தை குறைத்து பட்டு போன்ற உதடுகளை பெற உதவுகிறது.
பீட்ரூட் சாறை உதட்டின் மீது பூசுவதாலும் உதடு கோவைப் பழம் போல மென்மையாகவும் சிவப்பாக மாறும். அதற்கு பீட்ரூட்டை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள் அல்லது துருவி சாறு எடுத்து கொள்ளுங்கள். இரவில் படுக்க செல்லும் முன் பீட்ரூட் சாற்றை உதட்டின் மீது தடவுங்கள். தினசரி இதை தொடர்ந்து செய்து வந்தால் ஒரு மாதத்தில் உதடு மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
இயற்கையாகவே நிறத்தை அதிகரிக்க செய்யும் பண்பு பீட்ரூட் சாறில் இருக்கிறது. இது உதட்டின் மீது இருக்கும் அடர்நிறத்தை குறைத்து உதட்டின் நிறத்தை அதிகரிக்க செய்கிறது.
தக்காளி மற்றும் எலுமிச்சையை பிழிந்து சாற்றில் மஞ்சள்தூள் கலந்து உதட்டைப் பராமரிக்க பயன்படுத்தலாம். தக்காளி மற்றும் எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்து கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் தக்காளி சாறு, ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து உதட்டின் மீது தடவி 15 நிமிடங்க கழித்து கழுவ வேண்டும். இப்படி வாரம் 3 முறை செய்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
மஞ்சள் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது என்பது நாம் அறிந்ததே. அதனுடன் நிறத்தை அதிகரிக்க கூடிய எலுமிச்சை மற்றும் சுருக்கத்தை தடுக்க பயன்படும் தக்காளியை சேர்க்கும் போது மிகவும் சிறப்பாக செயல்பட்டு ரோஜ இதழ்களைப் போல உதடுகள் சிவப்பாக மாறும்.