சுரைக்காய் கூட்டு, இப்படி செய்யுங்க. செம்ம சுவையா இருக்கும்.
சுரைக்காய் கூட்டுக்கு தேவையான பொருட்கள்
சுரைக்காய் - கால் கிலோ, தனியாப் பொடி - 1 1/2 ஸ்பூன், வத்தல் பொடி - முக்கால் ஸ்பூன், சீரகப் பொடி - முக்கால் ஸ்பூன், மஞ்சள் பொடி - அரை ஸ்பூன், பொரிகடலை - 10 கிராம், உப்பு - தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்: நல்லெண்ணெய் - 2 ஸ்பூன், சின்ன வெங்காயம் - 2, கறிவேப்பிலை - 2 கீற்று, கடுகு - அரை ஸ்பூன்.
சுரைக்காய் கூட்டு செய்முறை:
சுரைக்காயின் தோலை சீவிக் கொள்ளவும். பின் குறுக்குவாக்கில் வெட்டி நடுவில் உள்ள சதைப்பகுதியினுள் உள்ள விதைகளை நீக்குங்கள். சுரைக்காயின் மென்மையான மற்றும் கடினமான சதைப்பகுதிகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.
பொரிகடலையை மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.குக்கரில் நறுக்கிய சுரைக்காய் துண்டுகளைச் போடவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் சதுரங்களாக நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, கடுகு சேர்த்து தாளித்து, குக்கரில் உள்ள சுரைக்காய் துண்டுகளுடன் தாளித்தக் கலவையைச் சேர்க்கவும். பின் குக்கரில் தனியாப் பொடி, சீரகப் பொடி, வத்தல் பொடி, மஞ்சள் பொடி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
சுரைக்காய் கலவையுடன் மசாலாப் பொருட்களைச் சேர்த்ததும், குக்கரில் 3 குழிக்கரண்டி தண்ணீர் சேர்க்கவும். பின் சுரைக்காய் கலவையை நன்கு கிளறி குக்கரை மூடி விடவும். குக்கரில் விசில் வந்ததும், சிம்மில் வைக்கவும். இரண்டு நிமிடங்கள் கழித்து குக்கரை அணைத்து விடுங்கள். குக்கரின் நீராவி அடங்கியதும் குக்கரை திறக்கலாம்.
குக்கரை திறந்த பின்பு, பொடித்துள்ள பொரிகடலையை சுரைக்காய் கலவையுடன் சேர்த்து ஒரு சேரக் கிளறவும். இப்போது சுவையான சுரைக்காய் கூட்டு தயார். இதில் பொரிகடலை இல்லாமலும் செய்யலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"