முத்தாலங்குறிச்சி காமராசு
படத்திலுள்ள இந்த மரப்பாலம் கட்டப்பட்டு நூறு ஆண்டுகளை கடந்துவிட்டது என்பதை நம்ப முடியுமா?. இந்த தகவல் கூடப் பெரிய விஷயமில்லை. 1992ஆம் ஆண்டு அடித்த பெரும் புயல் வெள்ளத்தில் பொதிகை மலையில், தாமிரபரணி கரையில் சிமென்ட் பாலங்களே நொறுங்கி விழுந்தபோதும் இப்பாலம் மட்டும் சிறு சேதாரம் கூட நேராமல் நின்றதே... நிற்கிறதே... அதுதான் ஆச்சரியமான விஷயம்.
தாமிரபரணியை உருட்டி போட்ட மழை வெள்ளம். பல கோடி ரூபாய் மரங்கள் அடித்து வரப்பட்டது. தாமிரபரணி ஆக்கிரோஷமாய் கிளம்பி பல குடியிருப்புகளை பதம் பார்த்தது. சேர்வலாற்றில் வந்த வெள்ளத்தின் காரணமாய், மிக உயரமாக போடப்பட்ட சிமெண்ட பாலம் உடைந்து காரையார் பகுதியே துண்டிக்கப்பட்டது. மின்தயாரிக்கும் இடத்துக்குள் தண்ணீர் புகுந்து இயந்திரமே பாழ் பட்டது. மின் உற்பத்தி தடைபட்டது. கல்யாண தீர்த்தம் பகுதியில் பாய்ந்த வெள்ளத்தில் அங்கு வைக்கப்பட்டிருந்த சிவனாலயம் மேல் கூரை உடைந்து, ஆற்றில் இழுத்துச்செல்லப்பட்டது. இந்த சமயத்தில் தான் மேலணை அருகே காணி குடியிருப்பான மயிலாறு பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள மரப்பாலம் ஒன்று எவ்வொரு சேதாரமும் இல்லாமல் அப்படியே நிற்கிறது. ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.
அதற்கு காரணம் இந்த பாலத்துக்கு கிடைத்த ஆசிர் வாதம் என்கிறார்கள் இப்பகுதி காணி இன மக்கள்.
பொதிகை மலையில் வசிக்கும் காணி இனப் பழங்குடி மக்கள் பழமையானவர்கள். மிகவும் திறமையானவர்கள். காட்டை மதிக்ககூடியவர்கள். கட்டுபாடான வாழ்க்கை வாழுபவர்கள். பார்த்த குறியிலேயே நினைத்த விலங்கை வேட்டையாடி விடுபவர்கள். ஆனாலும் காட்டில் வாழும் மிருகங்களை மிகவும் நேசிப்பவர்கள். மூத்த தமிழ் குடிகள் என டாக்டர் கால்டுவெல் அவர்களால் போற்றப்பட்டவர்கள். அடர்ந்த காடுகளான இஞ்சுகுழி, பூங்குளம் பகுதியில் மட்டுமே வசித்து வந்த இவர்கள், இப்போது காரையாறு பகுதியில் உள்ள மயிலாறு, சின்ன மயிலாறு, சொரிமுத்து அய்யனார் கோயில் அருகே மற்றும் சேர்வலாறு பகுதியில் வசிக்கிறார்கள். காணி இன மக்கள் தாமிரபரணியைக் கடக்க கஷ்டப்படுகிறார்கள் என்று மரத்தாலான பாலத்தை உருவாக்கினார் கவுசானல் அடிகளார். அந்தப் பாலத்தைத் தான் நூற்றாண்டைக் கடந்தும் காணி இன மக்கள் சிறுசிறு மாற்றத்தை ஏற்படுத்தி தற்போதும் பயன்படுத்தி வருகிறார்கள்.
கவுசானல் அடிகளார் காணி இன மக்களிடம் உறுதியான பாசம் வைத்திருந்தது போல இந்தப் பாலமும் நூற்றாண்டைக் கடந்தும் கம்பீரமாக காணப்படுகிறது.
125 ஆண்டுகளுக்கு முன்னால் காரையாறு செல்ல வேண்டும் என்றால் ஓத்தையடி மண் பாதையாகத்தான் இருந்தது. குதிரை ஓடும் ஓடுதளம் தான் இந்த பகுதியில் அதிகம். அந்த வழியாக குதிரையில் சென்றுதான் பழங்குடி மக்களை சந்தித்துள்ளார் கவுசானல் அடிகளார்.
கட்டளை மலையில் தோட்ட வேலை செய்ய இங்குள்ள காணி இன மக்களைதான் பயன்படுத்தியுள்ளார். இந்த மக்களோடு மக்களாக வாழ்ந்துள்ளார்.
தாமிரபரணி கொதித்தெழும் வெள்ளத்துக்கு எல்லாம் இந்த பாலம் தற்போதும் ஈடுகொடுத்துக்கொண்டிருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். பாபநாசம் மேலணை கட்டும் போதும் கூட தளவாட்ட பொருள்களை கொண்டு செல்ல இந்த பாலத்தினை பயன்படுத்தியுள்ளனர்.
உச்சன்குளம் இருதயகுளமான கதை
காணி இன மக்களுக்கும் கௌசானல் அடிகளாருக்கு இந்த தொடர்ப்பு வருபதற்கு காரணமே கட்டளை மலை எஸ்ட்டேட் தான். பாளையங்கோட்டை மறை மாவட்ட அதிபரான சுவாமி வெர்டியர் என்னும் ஞானப்பிரகாசியார் சுவாமி 1893 இல் பாபநாச மலைப்பகுதியில் கட்டளை மலையை விலைக்கு வாங்கினார். அதோடு சேர்ந்த விக்கிரமசிங்கபுரம் ஊர் அருகே உள்ள மலையடிவாரத்தில் உள்ள நிலப்பகுதியையும் வாங்கினர். அதன் ஒரு பகுதி உச்சன் குளம் என்றும் அழைக்கப்பட்டது. உச்சன்குளம் என்றால் பெரிய மனிதனின் குளம் என்பது பொருள்.
வெர்டியர் சுவாமிகளை அடுத்து பாளையங்கோட்டை அதிபரானார் கௌசானல் அடிகளார். உச்சன் குளத்தில் ஒரு களஞ்சியத்தினையும், பண்ணை பீடமும் அமைத்தார். மலையினின்று வரும் காப்பி தேயிலை மற்றும் நறுமணப்பொருள்கள் ஆகியவற்றைச் சேர்த்து வைக்கும் வசதியிலும், விவசாயப் பண்ணையில் பணி புரியும் வேலையாட்கள் கால்நடைகள் தங்க கட்டிடங்கள் போன்றவற்றையும் இப்பண்ணை வீட்டில் இடம் பெற்றன. இந்தக் கட்டிடத்தின் கீழ்ப்பகுதியில் ஒரு கோவிலையும் அமைத்தார். உச்சன் குளத்தினை இருதய குளம் என்று பெயர் மாற்றினார். இதுவே பின்னாளில் திருஇருதய ஆலயமாக உருவெடுத்தது.
அந்த பிரமாண்டமான கட்டித்தில் மணிக்கூண்டை 1904ல் கௌசானல் அடிகளார் கட்டினார். அதன் பின்னால் 1913 ல் அந்த ஆலயத்தினை விரிவு படுத்தினார்கள் கிரஞ்சு அடிகளார்.
இந்த கட்டிடம் பிரமாண்டமாக உள்ளது. இதற்கு காரணம் கௌசானல் அடிகளாரின் உழைப்பு. இங்கிருந்து கட்டளை மலைக்கு அவர் குதிரையில் செல்வார். இதற்காக அவர் குதிரைகளை பயன்படுத்தினார். மலையில் இருந்து பொருள்களை கீழே கொண்டு வர சுமார் 100 கழுதைகள் பயன்படுத்தப்பட்டது. அந்த கழுதைகள் கட்டி வைக்க கட்டிடமும் உருவாக்கப்பட்டது.
கட்டளை மலை என்பது தற்போது பாபநாசம் மேலணை உள்ள பகுதி. இங்கு காணி இன மக்களுக்காக ஒரு பள்ளி கூடம் மற்றும் அவர்கள் தியானம் செய்ய ஒரு ஆலயத்தினையும் எழுப்பினார். இந்த ஆலயம் பாநாசம் மேலணை கட்டும் போது அணைக்குள் மூழ்கி விட்டது. தற்போதும் 27 அடிக்கு கீழே தண்ணீர் சென்றால் இந்த பள்ளிகட்டிடத்தினையும், அங்கிருந்த ஆலயத்தினையும், ஓங்கி வளர்ந்து நின்ற தென்னை மரங்களையும் காணமுடியும். இந்த பள்ளி கட்டிடம் தான் பின் நாளில் காணி குடியிருப்பில் உள்ள "பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி"யாக மாற்றப்பட்டது.
இதுபோல் அரிய பெரிய காரியங்களை எல்லாம் செய்த கௌசானல் அடிகளால் பொதிகை மலை உச்சி வரை குதிரையில் சென்று வந்து விடுவாராம். அவர் நேசித்த பொதிகை மலை காட்டை பேணி காக்கும் காணி மக்களை தங்களது உயிராகவே மதித்து வந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.