ஆச்சரியம் ஆனால் உண்மை : மரச்சிற்பங்களின் மதிப்பு 100 கோடி ரூபாய்!

மரச்சிற்பங்கள் சிறப்பானவையா?, அல்லது ஒவியங்கள் சிறப்பானவையா? என கேட்டால் இரண்டுமே.. நம்மை ஆனந்த அதிர்ச்சி அடைய செய்யும் கலை பொக்கிஷம்

முத்தாலங்குறிச்சி காமராசு

அந்தக் காலத்தில் செதுக்கப்பட்ட மரச்சிற்பங்கள் மற்றும் ஓவியங்களின் இன்றைய மதிப்பு எவ்வளவு தெரியுமா? தலைப்பை மறுமுறை வாசியுங்கள். அப்பாடா… 100 கோடியா என ஆச்சரியப்படுறீங்களா? உண்மையிலும் உண்மை. விலைமதிப்பில்லா மரச்சிற்பங்கள், மியூரல் வகை ஓவியங்கள், நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள திருப்புடைமருதூர் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள நாறும்பூ நாதர் ஆலயத்தில் ராஜகோபுரத்தின் உள்அடுக்கு மண்டபத்தில் உள்ளது.

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி – அம்பாசமுத்திரம் சாலையில் வீரவநல்லூரில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவு திருப்புடைமருதூர் உள்ளது. மிகவும் அழகாக புண்ணிய சேத்திரம். தாமிரபரணி ஆற்றில் வராக நதியும் கடனாநதியும் கலந்து முக்கூடலாக காட்சியளிக்கும் நெஞ்சை கொள்ளை கொள்ளும் அழகான ஊர். தாமிரபரணியின் அழகு ஒரு புறம், பிரமாண்டமான கோபுரம் மறுபுறமென… இவ்வூரில் இயற்கையும் பழைமையும் நம் மனதை கொள்ளை கொள்கிறது.
Thiruppudaimaruthur
இவ்வூர் ராஜகோபுரத்தின் உள்தட்டில் தான் நெஞ்சை அள்ளும் அற்புத கலை சிற்பங்கள் உள்ளன.

சாதனையின் பெட்டகமாக, அரிய பொக்கிஷமாக காட்சி அளிக்கிறது இந்த சிற்பங்கள். விலை மதிக்க முடியாத நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்தவை இவை. யார் வேலை செய்தார்கள்?. எப்படி செய்தார்கள்?. எத்தனை நாள் செய்தார்கள்?. எப்படி செய்தார்கள்? எதற்காக செய்தார்கள்? அடுக்காக கேள்விகள் நம் மனதினை வருடுவிடும். அங்குள்ள ஓவியங்கள் அனைத்தும் பிரமிக்க வைக்கின்றன. இவை மியூரல் வகையைச் சேர்ந்தவை.

சுண்ணாம்புக் கலவையில் முட்டை, கடுக்காய் மற்றும் பலவகை மூலிகைச் சாறுகள், பதநீர் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு ஊற வைத்த கலவையால் பூசி மெருகேற்றப்பட்ட சுவரில் மூலிகை வண்ணங்களை வரைய பயன்படுத்தி உள்ளார்கள். இந்த ஓவியங்கள் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.

இதிகாச நிகழ்வுகள், அக்கால அரசியல் படையெடுப்புகள், சரித்திர நிகழ்வுகளை நமது கண் முன் விரித்து காட்டுகின்றன. அக்கால மக்களின் வாழ்கை முறை, பக்தி நிலை, கலாச்சாரம், அயல்நாட்டு வாணிப தொடர்பு போன்ற வற்றை தத்ரூபமாக வரைந்துள்ளார்கள். பச்சை, கருப்பு, மஞ்சள், வைலட் உள்ளிட்ட மூலிகை வண்ணங் களை பயன்படுத்தி தீட்டியுள்ளார்கள். படத்தில் காண்பது போல நூற்றுக் கணக்கான ஓவியங்கள் அங்கு காணப்படுகின்றன. அனைத்தும் கதைசொல்லிக்கொண்டிருக்கும் உயிரோட்டமான கதை சொல்லிகள். இந்த ஓவியங்களை சீரமைக்க தற்போது சுமார் 100 கோடி ரூபாய் வேண்டுமாம்.
Thiruppudaimaruthur
பல நாட்டைச் சேர்ந்தவர்களும் மரச்சிற்பங்களையும் ஓவியங்களையும் பார்த்து மகிழ்ந்து போற்றும் வகையில் இவை அனைத்தும் பிரமிக்க வைக்கின்றன. உள் அரங்கு நிறை கலை மிளிர் மரச்சிற்பங்களின் சிங்கார கலைக் கூடத்தினை முதல் நிலை கோபுர மண்டபத்தினை பார்த்து அசந்து போய் நிற்கிறோம்.

அனைத்துமே உயிர் திறன் மிக்கவை.

ஒவ்வொரு ஓவிங்களை ஆய்வு செய்யும் நோக்கோடு நமது கண்கள் இடம் பெயர்கின்றன.

தென்புறம் மகாவிஷ்ணுவினால் 10 அவதார நிகழ்சிகளில் வாமன அவதாரம் நிகழ்வுகள் காணப்படுகின்றன. மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டார் பகவான். அவருக்கு மூன்றடி மண்ணை மகாபலி கொடுக்கின்றான். அந்த காட்சியும், வாமனர் சங்கு, சக்கரம், வில், அம்பு, ஏந்தி மகாவிஷ்ணு விசுவரூபம் எடுக்கின்ற காட்சியும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

இறைவன் சிவபெருமான் தட்சிணா மூர்த்தி கோலத்தில் அமர்ந்து இருக்க அருகில் 4 முனிவர்கள் தியான நிலையில் அமர்ந்து இருப்பது போல சித்தரிக்கப்பட்ட ஓவியம் அங்கு சிறப்பாக காணப்படுகிறது.

மற்றொரு பகுதியில் அர்ச்சுனன் தனது சகோதரர்கள் மற்றும் பாஞ்சாலியுடன் அமர்திருந்து பகவான் கிருஷ்ணனுடன் உரையாடும் நிகழ்ச்சி காணப்படுகிறது. தொடர்ந்து அர்ச்சுணன் சிவபெருமானை வேண்டி பாசுபதம் அஸ்திரம் பெற கடுந்தவம் புரிகின்ற காட்சியும், குழந்தையை தனது இடுப்பில் சுமந்து வரும் பார்வதி தேவியும், வேடுவர் கோலம் கொண்ட சிவபெருமானும் அர்ச்சுனனை சோதித்து வம்புக்கு இழுப்பது போன்ற காட்சியும் காணப்படுகிறது. அவர்களுக்குள் நடக்கும் போர் முடிந்த பின் சிவபெருமான் உருவெடுக்கும் காட்சி, அர்ச்சுணனுக்கு அஸ்திரம் வழங்கும் காட்சி காணப்படுகிறது.

ஒவ்வொரு வரலாற்றையும் வரிசை படுத்தி காட்சி அமைக்கப்பட்டிருக்கும் விதம் நம்மை நெகிழ்ச்சி அடைய செய்கிறது.
Thiruppudaimaruthur
மாணிக்கவாசகர் பல்லக்கில் பொன் பொருளை எடுத்து கொண்டு கோயில் கட்ட செல்லும் காட்சி மிக அருமையாக மரசிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

அவர் அரசவையில் இருப்பதுபோன்றும், அரசன் கொடுத்த நிதியினை தலைச்சுமையிலும், பல்லக்கிலும் எடுத்து சென்று பின் திருவருளால் துறவியாகி இறைவனுக்கு திருப்பணியாக திருக்கோவிலை கட்டும் வரலாற்றை மர ஓவியம் மூலமாக நமக்கு விளக்க மிக அருமையாக செதுக்கியுள்ளார் சிற்பி.

ஐந்து நடன கன்னிமார்கள் நடனம் புரியும் சிற்பத்தினை தூரத்தில் இருந்து பார்க்கும் போது குதிரை இருப்பது போல காட்சி தருகிறது. இந்த அபூர்வ சிறப்பங்களை ஆனந்தத்துடன் கண்டுகளிக்கிறோம்.

ஒரு சிற்பத்துக்கு ஒரு சிற்பம் சிறந்ததாத… இல்லை உயர்ந்ததா என எண்ண முடியாத அளவுக்கு அத்தனையும் சிறப்பு வாய்ந்தவை.

மாறவர்வன் அரிசகேசரி பாண்டிய மன்னன் கிபி 640 ஆம் ஆண்டு ஆண்ட போது சமணர்களுக்கும், சைவர்களுக்கும் பெரும் போர் ஏற்பட்டது. அந்த வரலாற்றை பேசும் சித்திரமாகவே இங்கு வரைந்துள்ளனர். சமண சமயத்தை தழுவிய பாண்டிய மன்னர் வெட்கை நோயால் அவதிப்பட்டார். பாண்டியனின் மனைவியான மங்கையர் கரசியும் மந்திரி குலத்தாயும் அருகில் இருந்து அவரை பேணி பாதுகாக்கின்றனர். சோழநாட்டில் தன் மாணவர்களோடு யாத்திரை மேற்கொண்ட திருஞான சம்பந்தரை பாண்டிய நாடான மதுரைக்கு வரவேண்டி அரசன் வேண்டி நிற்கிறார். அவரின் வேண்டுகோளுக்க இணங்க ஞானசந்பந்தர் அரண்மனைக்கு வருகிறார். அரண்மனையில் சமண முனிவர்களுக்கும், திருஞானசம்பந்தருக்கும் இடையில் நடந்த அனல் பறக்கும் வாதங்களில் சைவம் வென்றது. மன்னனின் நோய் திருஞான சம்பந்திரின் திருநீறு கொண்டு நீக்கப்பட்டது.

தோல்வியை தழுவி கொண்ட சமணர்களை அவர்களே ஒப்புக்கொண்ட சவாலின் படி கழுவேறினர். அந்த கழுவேறிய காட்சி சிற்பமாக வரையப்பட்டுள்ளது. அதன் பின் மன்னன் தீவிர சைவரானது போன்ற காட்சிகள் இங்கு காணப்படுகிறது. இந்த வரலாறு நம் கண் முன்னால் நடப்பது போலவே உள்ளது.

மீனாட்சி சுந்தரேஸ்வர் திருக்கல்யாண காட்சிகள் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. இதில் மீனாட்சியின் அவதாரங்கள் காணப்படுகிறது. கல்யாண நாளன்று விருந்துக்காக அமைக்கபட்ட உணவு பதார்த்தங்களை வண்டி வண்டியாக சிவபெருமானுடன் வந்த குண்டோதரனுக்கு உண்ண கொடுக்கிறார்கள். அனைத்து உணவுகளையும் உண்டு தீர்த்த அவனுக்கு தாகம் எடுத்தது. சிவபெருமானிடம் தாகம் தீர்க்கும் படி கோரினான் குண்டோதரன். அவன் தாகத்தினை சமான்யமாக தீர்க்க முடியுமா? எனவே சிவபெருமான், “குண்டோதரா வை…. கை” என ஆணையிட்டார். குண்டோதரன் கை வைக்க அங்கே ஒரு நதி தோன்றியது. அந்த நதியை குடித்து தனது தாகத்தினை தீர்த்துக்கொண்டான்.

வை…கை… என்று சொல்லியதால் குண்டோதரன் கை ஊன்றி உருவாக்கிய நதி வைகை என அழைக்கப்பட்டது.. இதை உணர்த்தும் சிற்பங்களும் இங்கே காணப்படுகிறது.

ராமபிரான், லெட்சுமணன் தோளில் நின்று வில்லை சோதிப்பது. அவர்களை அனுமன் வணங்குவது போன்ற ஒரு காட்சி அமைய பெற்றுள்ளது. சேரமான் பெருமான் குதிரை மீது அமர்ந்து திருகயிலாயம் செல்லும் காட்சி அமைக்க ப்பட்டுள்ளது. -பள்ளி கொண்டுள்ள பெருமாள் பத்மநாபர் ஓவியத்தையும் பக்கவாட்டில் மகாவிஷ்ணுவின் தசாவதார காட்சிகளையும ஓவியமாக இங்கு வரைந்துள்ளார்கள்.

ஒவ்வொரு தளமாக ஏறி நான்காவது நிலை மண்டபத்துக்கு வருகிறோம்.

திருப்புடை மருதூர் நாறும்பூ நாத சுவாமியின் தலப்புராணங்களை சிறப்பாக விவரிக்கும் வகையில் ஓவியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கஜேந்திர மோட்ச தலப்புராண மான தேவேந்திர சுரேந்திரன் விருத்திகாகரனை வென்று கொன்றது பின் பாவம் நீங்க இத்திருத்தலம் வந்து மருத மரமாகி இறைவனை நினைத்து தவம் புரிவது. இறைவன் சிவபெருமான் மருத மரங்களுக்கு இடையே தோன்றி காட்சி கொடுத்தல் போன்ற நிகழ்வுகள் இங்கு தத்துரூவமாக வரையப்பட்டுள்ளது. தாமிரபரணி தீர்த்தத்தில் மூழ்கி பாவம் நீங்கப் பெற்ற தேவேந்திரனை பிரம்மா, விஷ்ணு, முனிவர்களுடன் திருக்கயிலாயம் சென்று இறையருள் பெற்று திரும்பவும் இத்தலம் வந்து மருத மரத்தடியில் சுயம்புலிங்க சிவனை பூஜைசெய்தல் போன்ற காட்சிகள் இங்கு வரையப்பட்டுள்ளது.

கருவூர் சித்தர் தாமிரபரணி ஆற்றங்கரையில் நிற்கிறார். ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மருத மலர் வாசத்தில் இறைவன் இக்கரையில் இருக்கிறார். மனத்தை மட்டும் கருவூர் சித்தரால் நுகரமுடிகிறது. ஆனால் இக்கரை வர இயலவில்லை. இறைவனின் பெயரும் தெரியவில்லை. எனவே “நாறும் பூ நாதா அருள் தருவாயோ..” என பாடுகிறார். இவர் பாடலை கேட்க இறைவன் சற்று இடது புறமாக சாய்கிறார். இந்த அற்புத கதையை விளக்கும் சிற்பமும் இங்கு செதுக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் இந்த ஐந்தடுக்கு கோபுரத்தில் உள்ளே நுழைந்து மரசிற்பங்களையும், மியூரல் வகை ஓவியங்களையும் கண்டு களித்தல் பல புராணங்களையும், இத்தலத்தில் நடந்த நிகழ்வுகளையும் கண்டு கொள்ள நமக்கு வாய்ப்பு கிடைக்கிறது.

மரச்சிற்பங்கள் சிறப்பானவையா?, அல்லது ஒவியங்கள் சிறப்பானவையா? என கேட்டால் இரண்டுமே.. நம்மை ஆனந்த அதிர்ச்சி அடைய செய்யும் கலை பொக்கிஷம் என்றே கூறத்தோன்றுகிறது.

(அதிசயங்கள் தொடரும்)

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close