/tamil-ie/media/media_files/uploads/2023/01/Swami-Vivekananda-1200.jpg)
Swami Vivekananda
Swami Vivekananda’s birthday | National Youth Day 2023 | சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் | தேசிய இளைஞர் தினம் 2023 | கல்வியியல் கல்லூரி மாணவ மாணவியரின் பத்து நாள் பண்பு பயிற்சி முகாம், கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் நடந்தது. முகாமின் இறுதி நாள் அனைவரும் விவேகானந்தா் நினைவு பாறையை சுற்றிப் பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். சில மணிநேரம் அங்கே செலவழித்து விட்டு, அனைவரும் திரும்பிச்செல்லப் படகுத்துறைக்குச் சென்றனர். முகாம் பொறுப்பாளர் மாணவர்களின் எண்ணிக்கையை எடுத்தபோது ஒரு மாணவி விடுபட்டிருந்தாள்.
அனைவருக்குள்ளும் ஒருவிதப் பதற்றம். அந்த மாணவி எங்குச் சென்றாள்? என்னவானாள்? போராசிரியர்கள் ஒரு சிலரோடு, மிகுந்த பரபரப்போடு மாணவியைத் தேடும் படலம் தொடங்கியது. என்ன அதிசயம், அந்த மாணவி, விவேகானந்தரின் கம்பீரமானச் சிலையின் முன்னே, கண்களில் கண்ணீர் கசிய… உள்ளம் உருகி… பிரார்த்தனையில் சிலையாக நின்று கொண்டிருந்தாள்.
பதற்றத்தோடு அவளிடத்தில் ஏன்? என்ன ஆச்சு? எனப் போராசிரியர்கள் கேட்டபோது, மிகவும் நிதானமாக அவள் அளித்தப் பதில், அனைவரையும் உணர்ச்சிவசப்படுத்தியது. “நான் விவேகானந்தரைப் பற்றி நிறையப் படித்திருக்கிறேன். அவரின் கருத்துகளை உள்வாங்கி என் வாழ்க்கையில் கடைபிடித்து வருகிறேன். ஆனால் அவரின் இதுபோன்ற திருவுருவச் சிலையை இதுவரை நேரடியாகப் பார்த்ததில்லை. இங்கே அவரை பார்த்தவுடன் என்னுள்ளம் உருகி அவரோடு ஒன்றிவிட்டது, இவ்விடத்திருந்து அசையவே என் மனம் அனுமதிக்கவில்லை. அதனால்தான் வேறொங்கும் செல்லாமல் என்னையே மறந்து இங்கேயே மெய்யுருகி நின்றுவிட்டேன்” என கண்ணீர்ப் பெருக்கோடு பக்திபரவசத்தோடு கூறினாள்.
இது பாரத தேசத்தில் ஒரு மாணவியின் உள்ளத்திற்குள் உண்டான தாக்கமல்ல இது, லட்சோபலட்சம் இளைஞர்களின் உள்ளத்திற்குள் சுவாமி விவேகானந்தரால் உருவாக்கப்பட்டத் தாக்கம். இதற்கு என்ன காரணம்? “இளைஞர்களே, தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள்” என இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்.
அவரது நம்பிக்கை முழுவதும் இளைஞர்களிடத்தில் இருந்தது. அவரின் எழுதும்… பேச்சும்… மூச்சும்… இளஞர்களை வீரர்களாக, விவேகமுள்ளவர்களாக, ஆற்றலும், நம்பிக்கையும் மிக்கவர்களாக, ஒழுக்கச்சீலர்களாக, தேசபக்தர்களாக மாற்றின.
“இளைஞர்களே உங்களுக்கு என்னிடத்தில் நம்பிக்கை இருக்குமானால், என்னை நம்புவதற்குரியத் தைரியம் இருக்குமானால், ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்பேன்.” இளைஞர்கள் மத்தியில் இப்படிப்பட்ட நம்பிக்கை தீபமேற்றும் தைரியம் இந்த நரேந்திரனுக்கன்றி வேறுயாருக்கு வரும்?
அவர் எதையும் இளைஞர்கள் மத்தியில் திணிப்பதற்கு ஒருபோதும் முயற்சித்ததில்லை. மாறாக, அவரே, அவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து, இளைஞர்களுக்கு வழிகாட்டியுள்ளார். “நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய், உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!” என இளைஞர்களுக்கு வலிமைச் சேர்க்கிறார் அந்த நவயுகச் சிற்பி.
/tamil-ie/media/media_files/uploads/2023/01/vivekanandam-main1.jpg)
1893 ஆம் ஆண்டு சிகாகோ பாராளுமன்றத்தில் உலக சமயத்தலைவர்கள் மத்தியில், எவராலும் மதிக்கப்படாத ஒரு சாதாரண சன்னியாசி வேஷத்தில் சென்று, அவர் பேசிய பேச்சு உலக அரங்கில் பாரத தேசத்தைத் தலைநிமிர்ந்து பார்க்க வைத்தது. அவர் சிகாகோவில் பேசி நூறு ஆண்டு நிறைவடைந்த போது, அந்தப் பேச்சை நினைவுகூரும் விதத்தில் நாடு முழுவதும், சிகாகோ பேச்சின் நூற்றாண்டுக் கொண்டாடப்பட்டது. உலக வரலாற்றில் ஒருவர் பேசிய பேச்சிற்கு நூற்றாண்டு கொண்டாடிய வரலாறு இவரது பேச்சிற்கு மட்டுமேயன்றி வேறு எவருக்கும் இருக்காது.
அதுபோலவே 2013 ஜனவரி 12 இல் அவரின் 150 ஆவது பிறந்தநாள் வந்த போது அதனை ஓராண்டு காலம் முழுவதும் சுவாமி விவேகனந்தரின் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டும் என அப்போதை பாரத பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவுப் பிறப்பித்தார். அதன் அடிப்படையில் அவ் ஓராண்டு காலம் முழுவதும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதுவும் முற்றும் துறந்த இந்தத் துறவிக்கு மட்டும் கிடைத்த மாபெரும் வெகுமதியாகும் என்றே கருதலாம்.
சாதாரண மனிதர்கள் அண்ணாந்து பார்க்கும் உயரம்… கம்பீரமானத் தலைப்பாகை… தேஜஸ் ஜொலிக்கும் முகம்… காந்தசக்தி வாய்ந்த கண்கள்… சுண்டியிழுக்கும் பேச்சு… காவிதரித்த ஜாகுவானுபாகு உடம்பு… இத்தனை அடையாளங்களின் ஒட்டுமொத்த உடமை நரேந்திரநாத் தத்தா என்ற சுவாமி விவேகானந்தர், கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் தவப்புதல்வனாக 1863 ஜனவரி 12 இல் அவதரித்தார்.
“என் குழந்தைகளான நீங்கள் என்னைவிட நூறு மடங்கு சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என இளைஞர்களிடம் கூறும் இவரின், ஜென்ம தினமான ஜனவரி 12 ஆம் தேதியை தேசிய இளைஞர்கள் தினமாகக் கடைபிடிக்க இந்திய அரசு 1984 இல் முடிவுசெய்து, 1985 ஆம் ஆண்டு முதல் கொண்டாடி வருகிறது.
வாழ்க்கையின் மகத்துவத்தை அறியாமல் போதைப் பொருள்களுக்கும் செல்போன் உட்பட தகவல் தொடர்புச் சாதனங்களுக்கும் தங்களின் வாழ்க்கையை முழுமையாக அடிமையாக்கி, பாழ்படுத்தி, தங்களின் வலிமையை இழந்துகொண்டேயிருக்கும் இன்றைய இளைஞர்களின் காதுகளில், “வலிமையே மகிழ்ச்சிகரமான, நிரந்தரமான, வளமான, அமரத்துவமான வாழ்க்கையாகும்” என்னும் சுவாமிஜியின் வரிகள், அவரின் ஜென்ம தினமான இன்று (ஜனவரி 12) ரீங்காரமாக ஒலித்துக் கொண்டேயிருக்கட்டும்.
கட்டுரை: முனைவர் கமல. செல்வராஜ், அருமனை.
அழைக்க: 9443559841 அணுக: drkamalaru@gmail.com
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.