நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்ட 13 வயது சிறுமி உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக சன் நியூஸ் செய்தி சேனலுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் கொடுத்த பேட்டியிலிருந்து:
” ஷவர்மா சாப்பிட்டு உயிரிழக்கும் இரண்டாவது சம்பவம் இதுதான். உணவு விஷமாக மாறுவதால் ( food poisoning) இது நடைபெறுகிறது. ஷவர்மா சாப்பிட்ட 40 பேர் மருத்துவமனையில் சிக்கிச்சை பெற்று வருகிறார்கள் என்றால், அந்த ஹோட்டலில் சமைத்த உணவில் ஏதோ சிக்கல் இருக்கிறது.
நாம் உணவு சாப்பிடும் கடைகளை பொருத்துதான் அதன் ஆபத்து இருக்கிறது. இந்நிலையில் கடையில் எப்படி அவர்கள் சமைக்கும் சிக்கன் மற்றும் மட்டனை தேர்வு செய்கிறார்கள் என்பது முக்கியமாக பார்க்க வேண்டும். மேலும் அந்த சிக்கன், மட்டனை எப்போது வாங்கிறார்கள் என்பதும் முக்கியம். மாமிசத்தை எப்படி அவர்கள் சேமித்து வைக்கிறார்கள் என்பதிலும் கவனம் வேண்டும். மேலும் ஷவர்மா தயாரிக்கும் போதும் தவறுகள் ஏற்படலாம்.
இந்தியாவில் ஷவர்மா எப்போதும் அதிகபடியாக சிக்கனில் செய்யப்படுகிறது. ஷவர்மா என்பது லெபனான் நாட்டில் தோன்றி உள்ளது. அங்கே lamp மாமிசத்தை பயன்படுத்துகிறார்கள். பொதுவாக நல்ல கடையில் இருந்து காலையில் சிக்கன் வாங்கினால், அதில் தேவையான மசாலாவை கலந்து ஊறவிட்டுவிடுவார்கள். இந்நிலையில் இதை சரியான வெப்பநிலையில் ஸ்டோர் செய்ய வேண்டும். ஆனால் பெரும்பாலான ஹோட்டலில் அப்படி செய்வதில்லை. குறிப்பாக தமிழகத்தில் மாலையில்தான் ஷவர்மா கடைகள் செயல்படத் தொடங்கிறது. இந்நிலையில் காட்சிப்பொருளாக சிக்கனை வெளியில் வைக்கிறார்கள். இதனால் நாம் சாப்பிடும் மாமிசம் கெட்டுப்போக வாய்ப்புள்ளது.
மாமிசத்தை சமைக்கும்போது, அது நன்றாக வெந்து உள்ளதா என்று பார்க்க வேண்டும். அதிக வாடிக்கையாளர்கள் வருவதால், வேகமாக கொடுக்க வேண்டும் என்பதால், பாதி வெந்த கறியை பயன்படுத்துகிறார்கள். மேலும் ஷவர்மா செய்வதற்கு ஊற வைக்கப்பட்ட சிக்கனை அடுத்த நாள் பயன்படுத்த குளிர்சாதனப் பெட்டியில் வைக்கிறார்கள். ஆனால் அந்த குளிர் சாதனப்பெட்டியில் எல்லா பொருட்களும் அடைத்து வைக்கப்படுவதால், மாமிசத்தை கெட்டுபோகாமல் காப்பாற்ற சரியான வெப்பநிலை இல்லாமால் போகும். இதனால் சிக்கன் கெட்டுப்போக வாய்ப்புள்ளது.
கடைகளுக்கான லைசன்ஸ் பொருத்தவரையில், சிறிய கடைகளுக்கு ரூ.100 பெற்றுக்கொண்டு, அவர்களை பதிவு செய்ய அனுமதிக்கிறோம். பெரிய ஹோட்டல் முதல் 3 ஸ்டார் ஹோட்டல் வரை மாநில லைசன்ஸில் செயல்படுகிறது. இந்த இரண்டு வகை லைசன்ஸ் உள்ள கடைகளில்தான் இந்த தவறுகள் நடைபெறுகிறது.
சிறிய அளவில் பாதிப்பு ஏற்பட்டால், அந்த கடையை சுத்தம் செய்து கெட்டுப்போன மாமிசத்தை அழித்துவிடுவோம். பாதிப்பு பெரிய அளவில் இருந்தால், ஒட்டுமொத்தமாக கடையை மூடிவிடுவோம். இந்நிலையில் அந்த கடைகளில் இருந்து உணவின் மாதிரிகளை எடுத்து சோதனை செய்து. ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் சமர்பிப்போம்.
பொதுமக்கள் இதுபோன்ற மாமிசம் கலந்த உணவை சாப்பிடும்போது, கறி வெந்திருக்கிறதா? என்பதை ஒரு முறை சோதனை செய்ய வேண்டும். கறி வேகாமால், துர்நாற்றம் ஏற்பட்டால் அதை சாப்பிடக் கூடாது. குறிப்பாக ஷவர்மா போன்ற உணவில் மயோனேஸ் இருக்கும். இது பச்சை முட்டையில் செய்வது. இந்நிலையில் சில கடைகளில் பழைய மயோனேஸ் பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது. இதை பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் ‘ என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“