மாடித்தோட்டம் அதில் விளையும் காய்கறிகள் குறித்து யூடியூப் வீடியோவில் பதிவிட்டு வரும் பிரபல நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி,மாடித்தொட்டம் அமைக்க வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு சில டிப்ஸ்களை வழங்கியுள்ளார்.
பொதுவாக கிராமங்களில் வயல்வெளிகளில் காய்கறிகளை பயிரிட்டு சந்தைகளில் விற்பனை செய்வது விவசாயிகள் தங்களது வீட்டுக்கு பயன்படுத்திக்கொள்வது வழக்கமான ஒன்று. கிராமத்திற்கு இது சரியாக இருந்தாலும் நகரத்து மக்களுக்கு செடிகளில் காய்த்த காய்கறிகளை உடனடியாக பறித்து சமைப்பது என்பது இன்னும் பல நகரங்களில் எட்டாக்கனியாகவே இருந்தது.
ஆனால் தற்போது நகரத்தில் வாழ்பவர்களுக்கு காய்கறிகளை பயிரிட்டு பயன்படுத்திக்கொள்ள சிறந்த வழி மாடித்தோட்டம். மாடியில் சிறிய தொட்டிகளில் காய்கறிகளை விதைத்து அறுவடை செய்து சமையலுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். இது குறித்து பலரும் தங்களது அனுபவங்களை வீடியோவாக பதிவு செய்து யூடியூப்பில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் மாடித்தோட்டம் அமைப்பதற்கான டிப்ஸ் பிரபல நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி கூறியுள்ளார்.
மாடித்தோட்டம் அமைப்பதற்கு முதலில் மாடியில் தண்ணீர் தேங்கி நிற்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீடு கட்டும்போதே மாடியில் இருந்து தண்ணீர் வெளியேபோக குழாய் அமைத்திருப்பார்கள் அதை பயன்படுத்திக்கொள்ளலாம்.
செடிகள் வைக்கும் தொட்டிகளை வெறும் தரையில் வைக்க கூடாது. ஒரு செங்கல்லை இரண்டாக உடைத்து 3 அரை செங்கல்லை ஒன்றாக வைத்து அதன்மேல்தான் தொட்டியை வைக்க வேண்டும். அப்போதான் மழை நீர் விரைவில் வெளியேறும் காற்றிலே ஈரப்பதம் காய்ந்துவிடும்.
அதேபோல் தொட்டியிலும் தண்ணீர் நிற்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி தொட்டியில் தண்ணீர் நின்றால் செடி வளராது. அதனால் தொட்டியில் பக்கவாட்டிலோ அல்லது அடியிலோ சிறிது ஓட்டை அமைத்து அதில் பானை ஓடுவகை வைக்க வேண்டும். பாணை ஓடுகள் மண் தண்ணீரில் அடித்துச்செல்லாமல் பாதுகாக்கும்.
ஓட்டை வைத்து அதில் ஆற்று மணல் மற்றும் தென்னம்பஞ்சு, சேர்த்து அதன்மேல் செம்மண், மாட்டுச்சாணம் கலந்த உரம் சேர்த்து கையால் அமுக்காமல் விதை வதைக்கலாம். அல்லது செடி ஊன்றலாம். அப்போது தண்ணீர் ஊற்றினால் தொட்டியில் தண்ணீர் நிற்காது செடி நல்லா வளரும்.
பூச்சித் தொல்லை இருந்தால் வேப்ப எண்ணெய் வாங்கி வந்து 5 லிட்டர் தண்ணீருக்கு 10 எம்எல் என் அளவில் கலந்து ஸ்பிரே செய்தால் பூச்சி வராது. பூச்செடிகளில் உள்ள பூச்சிகளை தடுக்க சோறு வடித்த கஞ்சியில் வேப்ப எண்ணெய் கலந்து தெளித்தால் பூச்சிக்கள் வராமல் தடுக்கலாம்.
மழை காலங்களில் செடிகள் வெயில் இல்லாமல் துவண்டு கிடக்கும் நேரத்தில் வேப்பம்புண்ணாக்கை வாங்கி வந்து 5 கிலோவுக்கு 25 லிட்டர் தண்ணீரில் ஊறவைத்து நன்றாக கலக்கி ஒரு தொட்டிக்கு ஒரு ட்ம்ளர் வீதம் ஊற்ற வேண்டும். இவ்வாறு செய்யும்போது புண்ணாக்கு செடியின் வேர்களுக்கு ஹீட் கொடுக்கும். அப்போது செடி நன்றாக வளரும்.
இதனுடன் சேர்ந்து மண்புழு உரத்தையும் செடிகளுக்கு கொடுக்க வேண்டும். அதேபோல் பாடல்கள், நாம் பேசுவது அனைத்துமே செடிகளுக்கு மிகவும் பிடிக்கும். தொடர்ந்து இதை செய்து வந்தால் செடி நன்றாக வளர்ந்து நல்ல பயனை கொடுக்கும் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.